Published : 13 Aug 2017 01:49 PM
Last Updated : 13 Aug 2017 01:49 PM
லண்டன் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. 205 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் வழக்கம்போல் பதக்கப் பட்டியலில் அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்திவருகிறது. ஆண்களுக்கு இணையாகப் பங்கேற்றுள்ள தடகள வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். போட்டிகளின் தொடக்கத்தில் சாதித்த வீராங்கனைகள்:
டோரி பவ்வி (அமெரிக்கா)
100 மீட்டர்:
2016 ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளியும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலமும் வென்ற இவர், உலகத் தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று சாதித்துள்ளார். 100 மீட்டரை 10.85 நொடிகளில் கடந்து தங்க மங்கையாகியிருக்கிறார். முதன்முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ள இவர், மிஸிஸிப்பி மாகாணத்தைச் சேர்ந்தவர்.
பைலிஸ் பிரான்சிஸ்
(அமெரிக்கா, 400 மீட்டர்)
ஜாம்பவான்களை மண்ணைக் கவ்வ வைத்துப் பெறும் மகுடத்துக்கு ஈடுஇணை கிடையாது. 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பைலிஸுக்கு அப்படியொரு மகுடம் கிடைத்திருக்கிறது. ரியோ ஒலிம்பிக்கில் 3 தங்கங்களை வென்ற சக வீராங்கனையான அலைசன் ஃபெலிக்ஸை வீழ்த்தி, பைலிஸ் தங்கத்தைத் தனதாக்கிக்கொண்டுள்ளார். இந்தத் தொலைவை 49.92 நொடிகளில் கடந்து சாதித்த பைலிஸுக்கு, இது ஒட்டுமொத்தமாகச் சிறந்த வெற்றி.
ஃபெய்த் கிபியேகோன்
(கென்யா, 1500 மீட்டர்)
ஒலிம்பிக், காமன்வெல்த், உலகத் தடகள சாம்பியன்ஷிப் என முக்கிய சர்வதேசப் போட்டிகளிலிருந்து உள்ளூர் போட்டிகள்வரை 1,500 ஓட்டப் போட்டியில் முடிசூடா ராணி இவர். சொல்லிவைத்து இந்த முறையும் தங்கம் வென்று தன் திறனை நிரூபித்திருக்கிறார். 23 வயதுக்குள் ஓட்டப் போட்டியில் பல உயரங்களைத் தொட்டிருக்கும் இவர், ‘1,500 மீட்டர் ஸ்பெஷல்’ எனச் செல்லமாக அழைக்கும் அளவுக்கு கென்யாவில் புகழ்பெற்றிருக்கிறார்.
ஹெப்டத்லான்:
ஓடுதல், தாவுதல், எறிதல் என மூன்று கலவையான போட்டிகளை உள்ளடக்கிய ஹெப்டத்லான் பிரிவில் அதிகப் புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றிருக்கிறார் பெல்ஜியத்தின் நஃபிசாட்டோ. இந்த வெற்றியின் மூலம் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் பெல்ஜிய வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். ரியோ ஒலிம்பிக்கிலும் இதே பிரிவில் தங்கம் வென்று சாதித்தவர் இவர்.
பார்போரா ஸ்பாடகோவா
(செக் குடியரசு), ஈட்டி எறிதல்:
ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாம்பியனாக வலம் வரும் பார்போரா இந்த முறையும் தங்கம் வென்று. ஈட்டி எறிதலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகிறார். புத்தாயிரமாவது ஆண்டிலிருந்து ஈட்டி எறிந்துவரும் இவர், பெய்ஜிங் (2008), லண்டன் (2012) ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றவர். ரியோ (2016) ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சற்று சறுக்கினார். இப்போது மீண்டும் தங்கம் வென்று தனது வலிமையை நிரூபித்திருக்கிறார்.
இந்தியாவுக்கு ஏமாற்றம்
உலகத் தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயம், தொடர் ஓட்டம், ஹெப்டத்லான், ஈட்டி எறிதல், மாராத்தான் போன்ற போட்டிகளில் 10 இந்திய வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆனால், எல்லாப் பிரிவுகளிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
400 மீட்டர் ஓட்டப் போட்டியில் நிர்மலா ஷெரோன் அரையிறுதிவரை முன்னேறினார். ஆனால், அரையிறுதியில் 22-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார்.
ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் அன்னு ராணி 20-வது இடத்தையே பிடித்ததால், இறுதிச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தார்.
ஹெப்டத்லான் பிரிவில் பங்கேற்ற ஸ்வப்னா பர்மனால் ஒட்டுமொத்தமாக 26-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. பல கலவையான போட்டி பிரிவான இதில், ஒவ்வொரு பிரிவிலும் 20 இடங்களுக்குப் பின்னாலேயே ஸ்வப்னா வந்தார். ஆனால், ஈட்டி எறிதலில் மட்டும் 16-வது இடத்தைப் பிடித்து ஆச்சரியமூட்டினார்.
20 கி.மீ. மாராத்தான் போட்டியில் மோனிகா அதாரே 64-வது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT