Last Updated : 06 Aug, 2017 03:20 PM

 

Published : 06 Aug 2017 03:20 PM
Last Updated : 06 Aug 2017 03:20 PM

நம்பிக்கை நட்சத்திரம்: சாதிப்பார்களா சாம்பியன் பெண்கள்?

லண்டனில் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்தியா சார்பில் இந்த முறை 24 பேர் இந்தப் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்கள். இதில் 10 பேர் பெண்கள். இத்தனை பெண்கள் பங்கேற்க இருப்பது, இதுவே முதல்முறை. உலகத் தடகளப் போட்டியில் இந்தியாவின் முக்கிய வீரங்கனைகள்:

குஷ்பிர் கவுர் (நடைப் போட்டி)

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆசிய நடைப் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டு, மீண்டு(ம்) வந்திருக்கும் குஷ்பிர் கவுர், உலகத் தடகளப் போட்டிக்காகக் கடுமையாகப் பயிற்சி செய்து காத்திருக்கிறார். பஞ்சாபைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணான குஷ்பிர், 20 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் பங்கேற்க உள்ளார். 2012 ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றவர்.

2014 ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். 2013-ல் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 39-வது இடத்தையே இவரால் பிடிக்க முடிந்தது. ஆனாலும், நடைப் போட்டியில் தேசிய அளவில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். பழைய அனுபவங்களைப் படிப்பினையாகக்கொண்டு களமிறங்கினால், இந்த முறை அவர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண வாய்ப்பு உண்டு.

ஸ்வப்னா பர்மன் (ஹெப்டத்லான்)

கடந்த மாதம் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டி ஹெப்டத்லான் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர் இவர். அந்த வெற்றியின் மூலம் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றார். தங்கப் பதக்கம் வென்றதால் கிடைத்த ஊக்கம் அவருக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

ஹெப்டத்லான் போட்டி பிரிவில் சவால்மிக்க அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல வீராங்கனைகள் சாதிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி ஸ்வப்னா வெற்றிபெற்றால், அது மிகப் பெரிய அங்கீகாரமாகவும் சாதனையாகவும் மாறும். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வப்னா பர்மனின் (21) இரண்டு கால்களிலும் தலா 6 விரல்கள் உள்ளன.

வழக்கத்துக்கு மாறான கால் பாதத்தால் அவருக்குக் காலில் எப்போதும் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த வலியைப் பொறுத்துக்கொண்டு, சொற்ப அளவில் கிடைத்த விளையாட்டு ஊக்கத்தொகையாலேயே இந்த அளவுக்கு உயரம் தொட்டிருக்கிறார்.

அன்னு ராணி (ஈட்டி எறிதல்)

உடல் வலுவைக் காட்டும் போட்டிகளில் ஒன்றான ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காகக் களம் காண்கிறார் இவர். உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்ணும் இவரே. சமீபத்தில் நடந்த ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் தேசிய அளவில் பல சாதனைகளை இவர் படைத்திருக்கிறார்.

உலகத் தடகளப் போட்டிக்காக நடைபெற்ற தகுதிச் சுற்றில் 61.40 மீட்டர் தூரத்துக்கு எறிந்து பிற நாடுகளின் வீராங்கனைகளுக்கு தனது இருப்பை உணர்த்தியிருக்கிறார். உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ளார் அணு ராணி. 60 இடங்களைத் தாண்டி இந்த அளவுக்கு முன்னேற்றம் கண்ட ஒரே இந்திய வீராங்கனையும் இவர்தான்.

உத்தரப்பிரதேச மாநிலம் பகதார்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னு ராணி. “எங்கள் கிராமத்தில் உள்ள பெண்கள் நிறைய வேலை செய்வார்கள். பிறகு திருமணம் செய்துகொள்வார்கள். இந்த மாதிரியான குறுகிய வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. எங்கள் கிராமத்தைவிட்டு வெளியே வந்து பெரிய அளவில் ஏதாவது சாதிக்க வேண்டும்” என்று சொல்வது அன்னுவின் வாடிக்கை. அது இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

நிர்மலா ஷெரான் (400 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம்)

கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டம், 4*400 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்கத் தகுதிபெற்ற இந்திய வீராங்கனை இவர். இதே பிரிவுகளில்தான் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றிருக்கிறார். ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் தொடர் ஓட்டத்தில் உலக அளவில் 12-வது இடத்தைப் பிடித்தது இந்திய அணியின் முக்கியச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இவரது அணி தங்கப் பதக்கம் வென்றது. எனவே, ஓட்டப் போட்டியில் இல்லாவிட்டாலும் தொடர் ஓட்டத்தில் இவரது அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் ஓட்டத்தில் இவரோடு சேர்ந்து பூவம்மா ராஜு, ஜிஸ்னா மேத்யூ, அண்டிலா தாமஸ், ஜானா முர்மு, அனு ராகவன் ஆகியோர் ஓட உள்ளனர்.

இவர்களைத் தவிர பெண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் மோனிகா அதாரே இந்தியாவுக்காகப் பங்கேற்கிறார். மும்பை சர்வதேச மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்ற அனுபவம் இவருக்கு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x