Published : 27 Aug 2017 03:17 PM
Last Updated : 27 Aug 2017 03:17 PM

பெண் வரலாறு: அறிவுச் சுடர் ஏற்றிய ‘சகோதரி’

சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஐஸ் ஹவுஸை இன்றைக்குப் பெரும்பாலோர் விவேகானந்தர் இல்லமாகவே அறிந்திருக்கிறோம். ஒரு காலத்தில் பனிக்கட்டிகளை சேமித்து வைப்பதற்கான களமாக இருந்த அந்த இடம், இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்களுக்கு அறிவு விளக்கு ஏற்றி வைத்த இடம் என்பது இந்தத் தலைமுறைக்குத் தெரியாது. அந்த அறிவுச் சுடரை ஏற்றியவர், சமூக சீர்திருத்தவாதி ஆர்.எஸ். சுப்பலட்சுமி. சுருக்கமாக ‘சிஸ்டர்’ சுப்பலட்சுமி.

எதிர்ப்பை மீறி

1886 ஆகஸ்ட் 18-ல் பிறந்த சுப்பலட்சுமி, 12 வயதில் கணவரை இழந்தார். அதேநேரம், சமூக எதிர்ப்பை மீறி அவருடைய பெற்றோர் அவரைத் தொடர்ந்து படிக்க வைத்தனர். 1911-ல் மாநிலக் கல்லூரியில் படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதன்மூலம் சென்னை மாகாணத்தில் பட்டம் பெற்ற முதல் இந்துப் பெண் என்ற பெருமை அவருக்கு உரித்தானது. அடுத்த ஆண்டே எழும்பூரில் உள்ள மாநில பயிற்சிப் பள்ளியில் ஆசிரியைப் பயிற்சியும் முடித்தார். பட்டம் பெற்றதற்குப் பிறகு சுப்பலட்சுமி ‘சிஸ்டர்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார். ஒரு முன்மாதிரியாக மாறினார். இளம் வயதில் கணவரை இழந்த பெண்களுக்குச் சகோதரியாக, அவர்களது வாழ்க்கையை அடுத்த நிலைக்கு நகர்த்தும் பணியில், தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டார். அதற்குக் காரணம் இருந்தது. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் குழந்தைத் திருமணம் மிகச் சாதாரணமாகவும், இளம் வயதில் கணவரை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது. தனக்குக் கிடைத்த கல்வி, தன்னைப் போன்ற மற்றவர்களுக்கும் கிடைப்பதுதான் பிரச்சினைக்குத் தீர்வளிக்கும் வழியென சுப்பலட்சுமி நம்பினார். அதன் தொடக்கமாக சாரதா பெண்கள் சங்கம் சார்பில் 1912-ல் அமைக்கப்பட்ட கணவரை இழந்த இளம் வயது பிராமணப் பெண்களுக்கான இல்லத்தை வழிநடத்தினார்.

அரசின் ஆதரவு

“அதேநேரத்தில் அரசு கல்வித் துறையிலும் சுப்பலட்சுமி சேர்ந்திருந்தார். பள்ளிகளின் கண்காணிப்பாளராக இருந்த கிறிஸ்டினா லின்ச்சை சந்திக்கும் வாய்ப்பு சுப்பலட்சுமிக்குக் கிடைத்தது. உள்ளூர் பெண்களும் ஆசிரியைகளாக நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை லின்ச்சிடம் அப்போது அவர் எடுத்துரைத்தார். அதுவரை ஆங்கிலேயப் பெண்களே மாணவிகளுக்குக் கற்பித்துவந்தனர். இதன்மூலமாகவே உள்ளூர் பெண்கள் ஆசிரியைகளாக மாறுவதற்கான முதல் வாய்ப்பு கிடைத்தது.அதை நிஜமாக்குவதற்கு சுப்பலட்சுமியைப் போலவே கணவரை இழந்த இளம்வயதுப் பெண்களும் படிக்க வைக்க வேண்டுமென லின்ச் நினைத்தார். அதனால் கணவரை இழந்த இளம்பெண்கள் இல்லத்தினருக்குக் கல்வி வழங்கும் திட்டத்துக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை ஆங்கிலேய அரசுக்கு லின்ச் உணர்த்தினார்.எழும்பூரில் சுப்பலட்சுமியின் வழிகாட்டுதலில் செயல்பட்டுவந்த பெண்கள் இல்லம் தொடர்ச்சியாக விரிவடைந்துவந்தது. இந்தத் தேவைக்காக மெரினாவில் உள்ள ஐஸ் ஹவுஸை வாங்க அரசை வலியுறுத்தியவர் லின்ச்தான். 1915-ல் ஐஸ் ஹவுஸ் வாங்கப்பட்டு கணவரை இழந்த இளம் வயது பிராமணப் பெண்களுக்கான இல்லமாக அது மாறியது” என்று சென்னை வரலாற்றுப் பதிவாளர் எஸ். முத்தையா குறிப்பிட்டுள்ளார்.

உயர்கல்வி நிறுவனம்

அங்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே, பெண்கள் இல்லத்துக்காக அருகிலிருந்த காலியிடத்தை வாங்க அரசை வலியுறுத்திய சுப்பலட்சுமி, புதிய இடத்தில் லேடி வில்லிங்டன் பயிற்சிப் பள்ளியை உருவாக்கினார். அதன் முதல்வராகவும் செயல்பட்டார். அவர் மேற்கொண்ட பணிகள் அனைத்துமே நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு ஆங்கிலேய அரசிடம் வலியுறுத்திப் பெற்றவை என்பது நினைவில்கொள்ள வேண்டியது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கணவரை இழந்த பெண்களுக்கான இல்லம் பெண்கள் விடுதியாகவும், பின்னர் லேடி வில்லிங்டன் உயர்கல்வி நிறுவனமாகவும் உருமாறியது. 1980-களில் ஐஸ் ஹவுஸிலிருந்து அருகிலுள்ள கட்டிடத்துக்கு இந்த நிறுவனம் நகர்ந்தது.

ஊரெங்கும் பள்ளிகள்

“1920-ல் கடற்கரையில் வாழ்ந்த மீனவக் குழந்தைகளுக்காக ஐஸ் ஹவுஸில் சுப்பலட்சுமி ஒரு பள்ளியை உருவாக்கினார். ‘குப்பம் பள்ளி’ என்றழைக்கப்பட்ட அப்பள்ளி அருகிலுள்ள வளாகத்துக்கு 1922-ல் நகர்ந்தது. லேடி வில்லிங்டன் உயர்நிலைப் பள்ளி என்று பெயரில் இப்போதும் அந்தப் பள்ளி இயங்கிவருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள வித்யா மந்திர் பள்ளியும் அவர் இட்ட விதைதான். இதுபோல சென்னை மாகாணம் முழுக்க சுப்பலட்சுமி பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கினார்.1952 முதல் ஐந்து வருடங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினராகவும் அவர் செயல்பட்டுள்ளார். 1969-ல் சுப்பலட்சுமி இறந்தபோது, கணவரை இழந்த பெண்களுக்குத் தனி இல்லம் தேவைப்படவில்லை. அவர் கைதூக்கிவிட்ட பெண்கள் ஆசிரியைகளாக, செவிலியர்களாக, மருத்துவர்களாக அவருடைய பணியை அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச் சென்றனர்.” என்கிறார் சுப்பலட்சுமியைப் பற்றி விரிவாகப் பதிவுசெய்துள்ள சென்னை வரலாற்று ஆய்வாளர் வி. ஸ்ரீராம்.கணவரை இழந்த இளம்வயதுப் பெண்களை பழமைவாதச் சிறையிலிருந்து விடுவிப்பதையே தன் வாழ்நாள் பணியாகச் செய்த சுப்பலட்சுமி, அதற்குத் தேர்ந்தெடுத்த சரியான ஆயுதம் கல்வி. அனைத்துப் பெண்களுக்கும் கல்வியைப் பரவலாக்குவதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்ட அவர் தூவிய விதைகள், பெண் கல்விக்கான ஆலமரமாக இன்றைக்கு விரிந்து பலன் தந்துவருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x