Published : 20 Aug 2017 01:50 PM
Last Updated : 20 Aug 2017 01:50 PM

முகங்கள்: இணையத்தால் கிடைத்த ஏற்றம்

மு

ன்பெல்லாம் புதிய தகவல்களைப் பெறவோ, கூடுதலாகத் தெரிந்துகொள்ளவோ நூல்கள் மட்டுமே உதவிவந்தன. இப்போதோ எதைப் பற்றிய தகவல் தேவையென்றாலும், உடனடியாக இணையத்தை நாடத் தொடங்குகிறோம். மக்களின் தேடுதல் வேட்டைக்கு உதவும் இத்தகைய இணையதளங்களையே தனது வெற்றிக்கான களமாக்கியிருக்கிறார் சரிதா சுகுணன். இணையதளங்களை வடிவமைப்பதுடன், அவற்றின் உள்ளடக்கத்தை மேம்படுத்தும் வேலையையும் இவர் செய்துவருகிறார்.

சரிதாவுக்குப் பூர்வீகம் கேரளா. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். பி.ஏ.பொருளாதாரம் முடித்துவிட்டு எம்.ஏ. படிக்கத் திட்டமிட்டிருந்தார்.சிறு வயது முதலே நன்றாக ஓவியம் வரையும் திறமை உண்டு. அதனால் அவருடைய அம்மா கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கச் சொல்லியிருக்கிறார். கவின்கலை படித்துக்கொண்டிருந்தபோதே ஒரு தனியார் நிறுவனத்தில் விளம்பரப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். நிறுவனங்களின் விளம்பரத்துக்காக புதுப் புது வடிவங்களில் வரைந்து கொடுப்பது, அந்த நிறுவனங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து விளம்பரத்தை எழுதுவது எனத் தன்னுடைய முதல் வேலையில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் புதுசு

“அதன் பிறகு பல தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் வேலை பெரும்பாலும் மாலை ஆறு மணிக்குத் தொடங்கி இரவு இரண்டு மணிவரை நீடிக்கும்” என்று சொல்லும் சரிதா, பல்வேறு முன்னணி விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார். குழந்தை பராமரிப்புக்காக அவருக்கு மூன்றரை ஆண்டுகள் விடுப்பு தேவைப்பட்டது.

“அப்போதுதான் இணையதளங்கள் பிரபலமாகத் தொடங்கின. நானும் ஒரு அனிமேஷன் நிறுவனத்தில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலைக்குச் சேர்ந்தேன். இணையத்தின் வளர்ச்சியால் நானும் வீட்டில் இருந்தபடியே மூன்றரை ஆண்டுகள் பகுதிநேரப் பணிகளைச் செய்துவந்தேன். ஆரம்பத்தில் கம்ப்யூட்டரைக்கூட இயக்கத் தெரியாத எனக்கு, ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புது விஷயத்தைக் கற்றுக்கொள்ளும் வகையில் மாறிப்போனது” என்று சிரித்தபடியே சொல்கிறார் சரிதா.

மாறுதல் தந்த நம்பிக்கை

பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த சரிதா, அந்த அனுபவங்கள் தந்த நம்பிக்கையில் 2010-ம் ஆண்டில் ‘பெப்பர்கார்ன்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ், எண்ட கேரளம், சமையல் சங்கங்களின் இந்தியக் கூட்டமைப்பு (ஐ.எஃப்.சி.ஏ) உள்ளிட்ட நிறுவனங்களின் இணையதள உள்ளடக்கப் பணிகளைத் தற்போது கவனித்துவருகிறார்.

“சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க முடியுமா என்ற சந்தேகத்துடன் இருந்த எனக்கு, நண்பர் ஸ்ரீகுமார் உதவியாக இருந்தார். அதேபோல் நான் பணியாற்றிய முதல் நிறுவனத்தின் இயக்குநர் சங்கர் சென், ‘மாறுதல் எப்பவும் நம்பிக்கையைத் தரும்’ என்று அடிக்கடி சொல்வார். அந்த மந்திர வார்த்தைகள்தான் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு உத்வேகம் தந்தன” என்கிறார் சரிதா.

சென்னையில் தொடங்கப்பட்ட இவரது நிறுவனத்தின் கிளைகள் தற்போது பெங்களூரு, கடலூர் ஆகிய நகரங்களிலும் செயல்பட்டுவருகின்றன.

“எல்லாமே நமக்குத் தெரியும் என இருந்துவிடக் கூடாது. நமக்கு எதுவுமே தெரியாது, கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது என்கிற நினைப்பு இருக்கும்போதுதான், பல புதிய விஷயங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் நிலையை எட்டவும் முடியும்” என்று நம்பிக்கை நிறைந்த குரலில் சொல்கிறார் சரிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x