Published : 09 Jul 2017 01:14 PM
Last Updated : 09 Jul 2017 01:14 PM
சாலைகளில் பலர் நடந்து செல்கிறார்கள். ஆனால், கடந்துசெல்லும் நபர் மூன்றாம் பாலினத்தவர் என்றால் பெரும்பாலானவர்கள் அனிச்சைச் செயலாக அவர்களை இன்னொரு முறை பார்க்கிறார்கள். அது ஏளனப் பார்வையாக இருந்தால், அவர்களை மட்டும் ஏன் இரண்டு முறை பார்க்கிறோம் என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. 23 திருநங்கைகள் அதில் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். திருநங்கைகளைப் பணியமர்த்தியதோடு கொச்சி மெட்ரோ நிர்வாகம் நின்றுவிடவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தினருடன் அவர்கள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பணியாற்ற ஏதுவாக, அவர்களை வைத்தே ஒரு காணொலியை வெளியிட்டிருக்கிறது. 30 விநாடிகள் ஓடும் அந்தக் காணொலி சொல்லும் சேதி கேரள மக்களுக்கானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த தேசத்துக்குமானது. சாதி, மதம், நிறம், இனம் என பேதம் பார்த்துப் பார்த்துப் பழகிவிட்டவர்களுக்கு விடுக்கப்படும் முக்கிய வேண்டுகோள் அது.
கொச்சி மெட்ரோவில் பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் சிலர் திரையில் அடுத்தடுத்து தோன்றுகின்றனர். அடுக்கடுக்காகப் பின்வரும் சில கேள்விகளைக் கேட்கின்றனர்.
“என்னைப் பார்த்து ஆச்சரியப்படுகிறீர்களா? இப்படியொரு சீருடை அணிந்து கொண்டு நிற்கிறேனே? உங்களைப் போல் பேசுகிறேனே? இவையெல்லாம் உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தியிருக்கும். ஆனால், இன்று நீங்கள் என்னைப் பார்க்கும்போது பரிதாபத்துக்குரியவரைப் பார்ப்பதுபோல் பார்க்காதீர்கள். வெறுப்புடன் பார்க்காதீர்கள்.
ஏனெனில், உங்களைப் போலவே எனக்கும் லட்சியம் இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. கனவுகளும் இருக்கின்றன. ஆதலால் எனக்கொரு சகாயம் செய்யுங்கள். என்னை நீங்கள் பார்க்க நேர்ந்தால், இரண்டாம் முறையும் பார்க்காதீர்கள். தன் பணியைச் செய்துகொண்டிருக்கும் ஒரு நபரைக் கடந்து செல்வதுபோல் செல்லுங்கள்”.
இந்தச் சிறு வாக்கியங்களுடன் அந்த காணொலி நிறைவுபெறுகிறது. ஆனால், பார்ப்பவர்களை நிச்சயமாகத் தங்கள் பாலினப் பார்வை எத்தகையது என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கச் செய்கிறது. நம்முடன் வாழும் சக மனிதர்களை மாண்புடன் நடத்த முடியவில்லை என்றால் நாம் என்னவாக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்புகிறது. அது போன்ற ஏளனப் பார்வைகளைப் புறந்தள்ளிப் பணியில் இருக்கும் திருநங்கைகள் சிலரிடம் பேசினோம்.
பெற்றோர் தந்த பலம்
ப்ரித்திகா யாஷினி. கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் நீதிமன்ற உத்தரவால் தமிழகக் காவல்துறையில் முதல் திருநங்கை எஸ்.ஐ.யாகப் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். பணி நியமன ஆணை பெற்ற தினத்தன்று இருந்த உற்சாகம் சற்றும் குறையாமலேயே பேசினார்.
“இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்கள் எங்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த வேளையில் அரசாங்கம் எங்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வேண்டும். திருநங்கையாகப் பிறப்பது சாபமல்ல. புரிந்துகொள்ளாத பெற்றோராலும் கண்டுகொள்ளாத அரசாங்கத்தாலுமே இது சமூக அவலமாக மாறியுள்ளது.
அரசின் உறுதுணை இருந்தால் மூன்றாம் பாலினத்தவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காண முடியும். நான் இந்த நிலையில் இருப்பதற்கு என் பெற்றோரின் ஆதரவும் அரசாங்கப் பணியுமே காரணம். அதைப் பெறுவதற்கு என்னுள் இருந்த லட்சிய தாகமும் சுய ஊக்கமும் உறுதுணை செய்தன. ஆனால், பெற்றோர் ஆதரவு இல்லாத பலரும் தடம் மாறும் நிலையே இருக்கிறது. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்கும் பட்சத்தில், அவர்களில் பலரும் அரசு வேலைக்காகத் தங்களைத் தகவமைத்துக் கொள்வார்கள். அப்போது, என்னைப்போல் பலரும் நல்ல நிலைக்கு வருவார்கள். அன்றுதான் எனக்கு முழுமையான மகிழ்ச்சி கிடைக்கும்” என்று சொல்கிறார் ப்ரித்திகா.
பாகுபாடு இங்கில்லை
சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்டாகப் பணியாற்றும் திருநங்கை செல்வி, “ஒரு பிரபலம் தன்னை உற்றுநோக்கும் கண்களைப் பொருட்படுத்துவதில்லை. பொருளற்ற அந்தப் பார்வைகள் உங்களை நொறுக்கிவிட முடியும் என்றால், மூன்றாம் பாலினத்தவரை தேற்றப்போவது யார்? நீங்கள் வெற்றிபெற்றுவிட்டீர்கள். உங்களை அனைவரும் பார்க்கட்டும். உங்களைப் பற்றியே பேசட்டும். உங்கள் வேலையில் உங்களுக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்துங்கள். அப்போது அது மூன்றாம் பாலினம் என்ற அடையாளமாக மட்டும் இல்லாமல், திறமையின் அடையாளமாக இருக்கும்.
என் பணியிடத்தில் நான் சிறந்த பிசியோதெரபிஸ்டாக இருக்கிறேன். எனது அணுகுமுறையால் நோயாளிகள் திருப்தியடைகிறார்கள். சக ஊழியர்கள் பாராட்டுகிறார்கள். பணியிடத்தில் எனக்கு எவ்விதப் பாகுபாடும் தெரியவில்லை. எனக்கு ஒரே ஒரு எதிர்பார்ப்பு மட்டும்தான் இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆண், பெண் ஊழியர்களுக்குத் தனித்தனியாக அலுவல் அறை இருப்பதுபோல் திருநங்கைகளுக்கும் தனியான அலுவல் அறை வேண்டும். அப்போது ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என அனைவருமே சமமான கோட்டில் இயங்க முடியும். திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அதை அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
தங்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் வானத்தையும் வசப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள் திருநங்கைகள். அவர்கள் மீது நாம் வீசும் இரண்டாம் பார்வை, அவர்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்கட்டும்.
படங்கள்: எல்.சீனிவாசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT