Last Updated : 30 Jul, 2017 12:26 PM

 

Published : 30 Jul 2017 12:26 PM
Last Updated : 30 Jul 2017 12:26 PM

மகளிர் கிரிக்கெட்: இனிமேலாவது அங்கீகரிப்போமா?

ப்போதும் வெற்றிகள் மட்டுமே வரலாற்றில் நிலைபெறுவதில்லை. சில நேரம் தோல்விகளும்கூட வரலாற்றில் அழுத்தமாக இடம்பெற்றுவிடும். நடந்து முடிந்த உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தோல்வியும் இந்த வகைதான். இதுவரை மகளிர் கிரிக்கெட்டுக்குக் கிடைக்காத மரியாதை, புகழ், வரவேற்பு ஆகிய அனைத்துமே இந்த ஒரு தொடரின் மூலம் கிடைத்திருக்கிறது. இந்திய மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பு இனியாவது பிரகாசமாகுமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.

உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி ஆட்டம் கடந்த வாரம் நடந்துகொண்டிருந்தபோது, கிரிக்கெட் ரசிகர்கள் பலரது மனதில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 1983-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை கபில்தேவ் உயர்த்திப் பிடித்த காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அதுபோன்றதொரு வரலாற்றுத் தருணத்தை மித்தாலி ராஜ் தலைமையிலான அணி மூலம் காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்தார்கள். அது நடைபெறாமல்போனது எல்லோருக்கும் சிறு வருத்தம்தான் என்றாலும், அதைத் தாண்டி இந்தத் தொடரில் நம் பெண்களின் அட்டகாசமான ஆட்டம் மக்கள் இதயங்களை வென்றிருக்கிறது.

அதிகரித்த ஆர்வம்

இதற்கு முன்பு உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்ற காலத்தில்கூட வெளியே தெரியாத அளவுக்கு மகளிர் கிரிக்கெட் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. இதுவரை புறக்கணிப்புகளையும் பாகுபாடுகளையும் வேதனைகளையும் மட்டுமே சுமந்துவந்த மகளிர் கிரிக்கெட்டை, இந்த உலகக் கோப்பைத் தொடர் மாற்றியமைத்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பைத் தொடர் உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது இதுவே முதல் முறை. அதைவிட ஆச்சரியம், இந்தத் தொடரை 5 கோடிக்கும் அதிகமானோர் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார்கள். 2013-ம் ஆண்டு உலகக் கோப்பையைப் பார்த்தவர்களைவிட இது 80 சதவீதம் அதிகம். 2013-ம் ஆண்டைவிட இந்தியாவில் போட்டியைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்திருக்கிறது. முதன்முறையாக இறுதி ஆட்டத்தைக் காண 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மைதானத்தில் குவிந்ததும் இதுவே முதல் முறை.

பெண்களுக்கும் வேண்டும் ஐ.பி.எல்.

மகளிர் உலகக் கோப்பை மீது அதிகரித்துள்ள இந்த ஆர்வம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளர்வதற்கான வாய்ப்பை உருவாக்குமா? ஆண்கள் கிரிக்கெட்டின் மீது காட்டப்படும் அக்கறை, மகளிர் கிரிக்கெட்டுக்கும் காட்டப்பட்டால் இது சாத்தியப்படும். அணியை இறுதி ஆட்டம்வரை அழைத்துச் சென்ற மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ், “பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் நடத்தப்பட வேண்டும்” என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார். ஐ.பி.எல். மூலம் இந்திய ஆண்கள் அணிக்குப் பல திறமைசாலிகள் கிடைத்தார்கள். அந்த வகையில் மித்தாலி ராஜின் கருத்து வரவேற்புக்குரியது.

30CHDKN_WOMEN_CRICKET_GROUP

மகளிர் கிரிக்கெட்டை வளர்க்க உதவியாக ஒவ்வொரு நாட்டிலும் ஆண்கள் கிரிக்கெட் சங்கங்களுடன் மகளிர் கிரிக்கெட் சங்கங்களை இணைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முன்முயற்சி எடுத்தது.

அதன் ஒரு பகுதியாக 2006-ம் ஆண்டில்தான் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பி.சி.சி.ஐ.) இணைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கிரேடு முறையில் ஊதியம் வழங்கும் நடைமுறையை மகளிர் அணியினருக்கு பி.சி.சி.ஐ. விரிவுபடுத்தியது. இப்போதும் ஆண் கிரிக்கெட் வீரர்களைவிடக் குறைவான ஊதியமே பெண்களுக்கு வழங்கப்படுகிறது என்றாலும்கூட, அதை மாற்றுவதற்கான நல்ல தொடக்கமாக இது கருதப்பட்டது.

அக்கறை அதிகரிக்குமா?

மற்றொருபுறம் மகளிர் கிரிக்கெட்டுக்குப் பெயரளவில் இரண்டு உள்ளூர்த் தொடர்கள் மட்டுமே இந்தியாவில் நடத்தப்படுகின்றன. இவற்றைத் தாண்டி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே மகளிர் அணியினர் பங்கேற்க முடிகிறது.

அதுவும் ஒரு நாள், இருபது ஓவர் போட்டிகளாகவே இருக்கின்றன. கிரிக்கெட்டின் உயிர்நாடியே டெஸ்ட் போட்டிதான். ஆனால், மகளிர் அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. எனவே, டெஸ்ட் போட்டிகளை அவ்வப்போது நடத்த வேண்டும். மேலும், பெண்களுக்கான உள்நாட்டு போட்டித் தொடர்களை அறிமுகப்படுத்த வேண்டும். மாநிலம், மாவட்ட அளவில் பெண்களுக்கான கிரிக்கெட் தொடர்களை நடத்த இதுதான் சரியான தருணம்.

ஒரு புள்ளியில் தொடங்கித்தான் பெரிய கோடு வரைய முடியும். இந்த உலகக் கோப்பை போட்டித் தொடரில் இந்திய வீராங்கனைகள் தங்கள் சிறந்த ஆட்டம் மூலம் ஒரு கோடு வரைந்திருக்கிறார்கள். அதை அப்படியே இழுத்துச் செல்வதில்தான் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x