Published : 23 Jul 2017 04:02 PM
Last Updated : 23 Jul 2017 04:02 PM
தாய்மை உணர்வு ஆண், பெண் இருவருக்குமே பொது என்றாலும் அது பெண்களுக்கு நூறு சதவீதம் பொருந்திப் போகும். காரணம் எந்த உயிரினத்தையும் குழந்தைபோல் பேணி வளர்ப்பது பெண்களின் இயல்பு. இயற்கை, சுற்றுச்சூழல் மீது காதல் கொண்ட பெண்களோ காடுகளுக்குச் சென்று யானை, சிங்கம், கொரில்லா போன்ற உயிரினங்களைக்கூடத் தாய்போல் காத்து வளர்த்திருக்கிற வரலாறு உண்டு. அந்த வகையில் அன்னா மெர்ஸ் எனும் பெண்மணி காண்டாமிருகங்களைத் தன் குழந்தையாக வளர்த்தார்.
அருங்காட்சியகம் தந்த ஆர்வம்
1931 நவம்பர் 17 அன்று லண்டனில் பிறந்தார் ஃபிளாரன்ஸ் ஆன். நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் அரசியலும் பொருளாதாரமும் படித்தார். சிறு வயதில் தன் தந்தையுடன் லண்டனிலிருந்த இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்துக்குச் சென்றார். அங்கு பூமியைவிட்டே அற்றுப்போன ‘டோடோ’ பறவையின் படிமத்தைக் காட்டி, அந்தப் பறவையைப் பற்றிய தகவல்களை ஆனுக்குச் சொன்னார் அவருடைய தந்தை. அந்தத் தகவல்கள் அவர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்தன. அப்போதிலிருந்து இயற்கை மீது அவருக்கு ஆர்வம் எழுந்தது.
அந்த ஆர்வம் அவரை ஆப்பிரிக்காவுக்கு அழைத்துச் சென்றது. 1958-ம் ஆண்டு கானா நாட்டுக்கு வந்த அவர், அங்கு ஏர்னஸ்ட் குன்னைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு, திருமணத்தில் முடிந்தது. ஏர்னஸ்ட், மின்சாரப் பணிமனை ஒன்றை நடத்திவந்தார். அந்தப் பணிமனையைப் பார்த்துக்கொண்டும் ‘கானா தேசியப் பூங்கா’வின் கவுரவக் காவலராகவும் செயல்பட்டுவந்தார் ஆன். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்துப் பெற்றனர். பிறகு, கார்ல் மெர்ஸைச் சந்தித்தார் ஆன். இருவருக்கும் பயணங்கள் மீது ஆர்வமிருந்தது. அதுவே அவர்களை இணைத்தது. ஆன், அன்னா மெர்ஸ் ஆனார். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளைச் சுற்றிய அந்தத் தம்பதி, இறுதியில் கென்யாவில் குடிபுகுந்தனர்.
காண்டாமிருகத்துக்காக ஒரு வாழ்க்கை
கென்யா, காண்டாமிருகங்களுக்குப் பெயர்பெற்றது. காண்டாமிருகங்களின் கொம்பை அரைத்து மருந்தாகச் சாப்பிட்டால் ஆண்மை கூடும் என்று இதுவரை எந்த மருத்துவ ஆய்வும் நிரூபிக்கவில்லை. ஆனாலும் அந்தக் கொம்புகளுக்காகக் காண்டாமிருகங்கள் கள்ளவேட்டையாடப்படுவது இன்றும் தொடர்கிறது. சர்வதேச அளவில் இன்று எத்தனையோ சட்டங்கள் இருந்தும்கூடக் கள்ளவேட்டையைத் தடுக்க முடியவில்லை. எந்தச் சட்டமும் இல்லாத 60, 70-களில் கள்ளவேட்டை மிக மோசமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் அன்னா கூறும்போது, “1968-ம் ஆண்டு நாங்கள் கென்யா வந்தபோது 20 ஆயிரம் காண்டாமிருகங்கள் இருந்தன. ஆனால் 1976-ம் ஆண்டு நாங்கள் கென்யாவுக்குத் திரும்பவும் வந்தபோது வெறும் 300 காண்டாமிருகங்களே இருந்தன” என்று குறிப்பிட்டிருக்கிறார். கொம்புகள் அகற்றப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக் கிடந்த காண்டாமிருகங்களின் சடலங்களைப் பார்த்து மனம் வெதும்பினார் அன்னா.
எனவே, மீதமுள்ள காண்டாமிருகங்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து, தன் நண்பர்கள் கிரெய்க், டெலியா தம்பதியிடமிருந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும், கென்ய அரசிடமிருந்து வன நிலத்தையும் பெற்று எங்கேர் செர்கோய் காண்டாமிருக சரணாலயத்தை நிறுவினார். சுமார் 61 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயத்தில் 2.5 மீட்டர் உயர மின்சார வேலிகளை அமைத்து, அதற்குள் 36 கறுப்புக் காண்டாமிருகங்களையும், 30 வெள்ளைக் காண்டாமிருகங்களையும் வளர்த்துவந்தார். தன் வாழ்க்கையையே காண்டாமிருகங்களின் பாதுகாப்புக்காக அர்ப்பணித்தார். அந்தச் சரணாலயத்தின் மூலம் சுற்றுலா வளரவும் காரணமாக இருந்தார்.
இரண்டாம் அன்னை
தனது அனுபவங்களை ‘ரைனோ: அட் தி பிரிங்க் ஆஃப் எக்ஸ்டிங்ஷன்’ என்கிற புத்தகமாக எழுதினார் அன்னா மெர்ஸ். காண்டாமிருகத்தை ஏன் அவர் தேர்வு செய்தார் என்ற கேள்விக்கு அந்தப் புத்தகத்தில் பதில் அளித்திருக்கிறார். “பெரிய காரணங்கள் எதுவுமில்லை. கென்யாவில் காண்டாமிருகங்கள் இருந்தன. நானும் கென்யாவில் இருந்தேன். அந்த உயிரினங்கள் பெரும் ஆபத்தில் இருந்தன. குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவை அழிந்துபோகாதபடிக்கு இனப்பெருக்கம் செய்வதற்கான சக்தியைப் பெற்றிருந்தன. எனவே, அவற்றைப் பாதுகாக்க முடிவு செய்தேன்” என்கிறார்.
“தாயால் வளர்க்க முடியாமல் கைவிடப்படுகிற உயிரினங்களை மீண்டும் காட்டிலேயே விடுவது, அவற்றுக்கு ஆபத்தாக முடியும். அவை காட்டில் வாழ்வதற்கான தகுதியைப் பெறுகிறவரை, மனிதர்கள் அவற்றுக்குத் தாதியாக இருந்து உதவுவதில் தவறில்லை” என்றவர், தனது சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்ட சோலியா என்ற காண்டாமிருகத்தால் கைவிடப்பட்ட குட்டிக்கு ‘சாமியா’ என்று பெயரிட்டுத் தன் மகள்போல வளர்த்துவந்தார். 1985-ம் ஆண்டு பிறந்த அந்தக் காண்டாமிருகம், 1995-ம் ஆண்டு, மலையுச்சியிலிருந்து தவறுதலாக விழுந்து இறந்தது.
“உயிரினங்கள் தங்கள் தேவைக்காக மட்டுமே இன்னொரு உயிரைக் கொல்கின்றன. ஆனால், மனிதர்களோ தங்களின் ஆடம்பரத்துக்காக இதர உயிர்களைக் கொல்கிறார்கள்” என்று சொன்ன அன்னா, இறுதிவரை கள்ளவேட்டைக்கு எதிராகப் போராடினார். காண்டாமிருகங்களின் பாதுகாப்புக்காகவே வாழ்ந்த அவர், 2013 ஏப்ரல் 4 அன்று மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT