Published : 02 Jul 2017 12:28 PM
Last Updated : 02 Jul 2017 12:28 PM
சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யத் தனியாக வந்திருக்கும் இளம் கலைஞர் நுபுர் சாரஸ்வத். கடந்த வாரம் ஹைதராபாத்தில் இருக்கும் டெக்கான் எர்ரகட்டா என்ற ஹோட்டலில் தங்குவதற்காகக் கேட்டிருக்கிறார். அவர் தனிப் பெண் பயணியாக இருப்பதால் தங்குவதற்கு இடமளிக்க முடியாது என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. தனியார் ஆன்லைன் பயண இணையதளத்தில் நுபுரின் முன்பதிவை உறுதிபடுத்தியிருந்த அந்த ஹோட்டல் நிர்வாகம், அவர் நேரில் சென்றபோது தனியாக வரும் பெண்களுக்குத் தங்க இடமளிப்பதில்லை என்று அவரைத் திருப்பி அனுப்பியுள்ளது.
தனியாக வசிக்கும் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் தங்குவதற்கு இடம்கிடைப்பது எவ்வளவு பெரிய சவால் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், இந்த ஹோட்டல் நிர்வாகம் ஒருபடி மேலே போயிருக்கிறது. தனியாக வரும் பெண்களுக்குத் தங்குவதற்கு அனுமதியில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறதாம். ஏற்கெனவே, முன்பதிவு செய்திருந்தும், தங்குவதற்கு இடமளிக்க முடியாது என்ற ஹோட்டல் நிர்வாகத்தின் கருத்து, நுபுருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
இந்த அனுபவத்தை நுபுர், ஃபேஸ்புக்கில் பதிவுசெய்ய அது கடந்த வாரம் வைரலாகப் பகிரப்பட்டது. அந்தப் பதிவில், “நான் தனியாகப் பயணம் செய்ய வந்திருக்கும் பெண் என்று தெரிந்ததால் என்னைத் தங்க அனுமதிக்காத ஹோட்டலுக்கு வெளியே நிற்கிறேன். ஆமாம், என்னுடைய கையில் பெரிய பையுடன் பயணக் களைப்புடன் ஹோட்டலுக்கு வெளியே நிற்கிறேன். அந்த நிர்வாகம், நான் ஹோட்டலில் இருப்பதைவிட, தெருவில் பாதுகாப்பாக இருப்பேன் என்ற முடிவுக்கு எப்படியோ வந்திருக்கிறது. சிரிப்பாக இருக்கிறது இல்லையா? ஆனால், இப்படித்தான் ஆணாதிக்கம் செயல்படுகிறது.
இன்று எனக்கு நேர்ந்த அனுபவம் நாளை உங்களுக்கு நேரலாம். நான் காலை பதினோரு மணிக்கு வந்ததால் ஹோட்டலுக்கு வெளியே காத்திருக்க முடிந்தது. என்னுடைய அனுபவத்தை இப்படிப் பகிர்ந்கொள்ள முடிகிறது. ஆனால், நீங்கள் இரவு பதினோரு மணி விமானத்தில் வந்து, இப்படி வேறு ஏதாவது ஒரு நகரத்தில் ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் என்ன செய்வது? பெண்கள் இப்போது தனியாகப் பயணிக்கிறோம். நம்முடைய பாதுகாப்பை காரணம்காட்டி வீட்டில் அடைந்து கிடக்கப்போவதில்லை என்பதைத் தெரியப்படுத்துவோம்” என்று எழுதியிருக்கிறார் அவர்.
ஃபேஸ்புக்கில் இந்தப் பதிவைச் சில மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பகிர்ந்ததால் அது வைரலானது. ‘கோஇபிபோ’ நிறுவனம், இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு, நுபுருக்குத் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்து தந்திருக்கிறது. அவர் ஹோட்டல் டெக்கான் எர்ரகட்டாவில் தங்குவதற்காக முன்பதிவு செய்திருந்தபோது செலுத்தியிருந்த பணத்தையும் திருப்பியளித்திருக்கிறது.
பயம் வேண்டாம் துணை வேண்டாம்
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவிய நெட்டிசன்களுக்கு ஃபேஸ்புக்கில் நன்றி தெரிவித்திருந்த நுபுர், “அது ஒரு ஹோட்டல் நிர்வாகத்தின் கொள்கை என்றால், அதை ஏன் பிரச்சினையாக்க வேண்டும் என்று பலர் யோசிக்கலாம். நான் ஏன் அந்தப் பிரச்சினையைப் பேசினேன் என்றால், என்னுடைய பாதுகாப்புப் பற்றிய பயத்துடனேயே நான் வாழ விரும்பவில்லை.
என்னுடன் பயணம் செய்வதற்கு ஓர் ஆண் கிடைக்கும்வரை என்னைப் பின்னுக்கு இழுக்கும் அமைப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்குப் பாதுகாப்புத் துணையை வைத்துகொள்வதில் உடன்பாடில்லை. பெண்கள் தனியாகப் பயணிக்கப்போகிறார்கள். எல்லா இடங்களுக்கும் அவர்கள் பயணம் செல்வார்கள். இதை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள்தான் இனி நிலைக்க முடியும்” என்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியிருக்கிறார்.
நுபுர் சாரஸ்வத், ‘டூ சன்ஸ்காரி கேர்ள்ஸ்’(Two Sanskari Girls) என்ற கவிதை, பாடல் வடிவ நாடகத்தை அரங்கேற்றுவதற்காகவும் இந்தியா வந்திருக்கிறார். உலகின் எதிரெதிர்த் திசைகளைச் சேர்ந்த இரண்டு பெண்களின் சந்திப்பை இந்தக் கவிதை நாடகம் விவரிக்கிறது.இந்நிலையில் இந்தியாவில் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கியப் பிரச்சினைக்கு எதிராகச் சமூக ஊடகத்தில் குரல் கொடுத்திருக்கிறார் நுபுர். அவரது குரல், தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கான வெளியில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT