Last Updated : 02 Jul, 2017 12:26 PM

 

Published : 02 Jul 2017 12:26 PM
Last Updated : 02 Jul 2017 12:26 PM

அக்கம் பக்கம்: பாலூட்டுவது அவமானம் அல்ல!

பல தடைகளைக் கடந்து பொதுவெளிக்குள் அடியெடுத்து வைக்கும் பெண்களைப் பின்னுக்கு இழுக்கும் சிக்கல்களில் ஒன்று குழந்தைப்பேறு. செத்துப் பிழைப்பதைப் போன்ற வலி நிறைந்த பிரசவத்தைக்கூட ஒரு பெண் சமாளித்துவிடலாம். அதன் பிறகு எழும் சிக்கல்கள் ஏராளம்! குழந்தை பிறந்த பிறகு ஆறு மாதங்கள்வரை கட்டாய பணி விடுப்பு அளிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் இது முழுவதுமாக நடைமுறைக்கு வரவில்லை என்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய சிக்கல்.

ஆறு மாதங்கள் வழங்கப்படுவதன் அடிப்படை நோக்கம் தாய்க்கு ஓய்வு அவசியம் என்பதும் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதங்கள்வரை தாய்பால் தவிர வேறெந்த உணவும் அளிக்கக் கூடாது என்பதும்தான். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகும் குறைந்தது ஒருவயது அடையும்வரை குழந்தைக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளோடு தாய்ப்பாலும் கட்டாயம் அளிக்க வேண்டும். ஆனால் பொது இடத்திலோ, வேலைக்குச் செல்லும் இடத்திலோ எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் குழந்தைக்குப் பாலூட்டும் சூழல் நிலவுகிறதா?

‘ஏன் முடியாது’? எனக் கேட்காமல் செய்துகாட்டியிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினரும் செனட்டருமான லாரிஸா வாட்டர்ஸ். கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் ஃபெடரல் நாடாளுமன்றக் கூட்டத்துக்குத் தன் குழந்தை அலியா ஜாய் கேட்ஸுடன் சென்றார். கேள்வி நேரத்தின்போது குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தார் லாரிஸா. குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிறோமே, எப்படி பதில் சொல்வது என்று கொஞ்சமும் அவர் தயங்கவில்லை.

அப்படியே எழுந்து நின்று, ‘கருப்பு நுரையீரல் நோய்’ குறித்துத் தன் தரப்பு கருத்தை முன்வைத்து நிதானமாகப் பேசினார். தன்னுடைய அணுகுமுறை மூலம் இது இயல்பான, இயற்கையான நிகழ்வு; இதை மறைத்துச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதைக் கம்பீரமாக வெளிப்படுத்தினார் லாரிஸா வாட்டர்ஸ்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் வீடியோ பதிவிலிருந்து இந்தக் குறிப்பிட்ட பகுதி யூடியூபில் வெளியிடப்பட்டுக் கடந்த வாரம் வைரலானது. கைக்குழந்தையோடு பொதுப்பணிக்கு வந்தது மட்டுமல்லாமல், குழந்தைக்குப் பாலூட்ட மறைவிடத்தைத் தேடாமல் இருந்ததை ஆச்சரியத்தோடு பலர் சமூக ஊடகங்களில் பாராட்டினர்.

அதேநேரத்தில் குழந்தைக்குப் பாலூட்டிய படியே லாரிஸா பேசும்போது அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் மற்றொரு பெண் உறுப்பினர் ஆச்சரியத்தோடும் பூரிப்போடும் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி இந்தச் சமூகத்தின் சாட்சி. அது, பொது இடங்களில் பாலூட்டுதல் இந்தியாவில் மட்டுமல்ல முன்னேறிய மேற்கத்திய நாடுகளிலும் மறுக்கப்பட்ட ஒன்றாகவே இதுவரை நீடிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

இதை மாற்றும்விதமாக ஆங்காங்கே ஒரு சில பெண்கள் பொதுவெளியில் பாலூட்ட முன்வந்தாலும், மிக இயல்பான இந்தச் செயல் இன்னமும் அதிசயமாகக் கருதப்படுகிறது.

“காலங்காலமாக பெண்கள் செய்துவரும் இயற்கையான செயலைப் பரபரப்பான செய்தியாக மாற்றுவது எனக்கு விசித்திரமாக இருக்கிறது. இனியும் இது செய்தியாக மாறாமல் இருக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் மேலும் பல இளம் தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குப் பாலூட்ட வேண்டும்” - லாரிஸாவின் இந்த வார்த்தைகளாவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x