Published : 02 Jul 2017 12:44 PM
Last Updated : 02 Jul 2017 12:44 PM
பாலினப் பாரபட்சத்தோடு தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் கொடுத்த பதிலடி பலருக்கும் பாடம். அதே போல ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஏழு அரைச் சதங்கள் அடித்த முதல் வீராங்கனை மித்தாலி ராஜ் என்ற சாதனையைக் கொண்டாடத் தவறியது, விளையாட்டுத் துறையில் பெண்களுக்குத் தரப்படுகிற இடத்தை உணர்த்துகிறது.
இங்கிலாந்தில் தற்போது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் ஆதிக்கம் மிக அதிகம். ஆனால், இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக இந்திய மகளிர் அணியும் கணிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இந்திய மகளிர் அணியின் தலைவராக இருக்கும் 34 வயதான மித்தாலி ராஜுக்கு இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம். அதனால் இந்த முறை கோப்பையை வெல்லும் கனவோடு மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி இங்கிலாந்து போய்ச் சேர்ந்தது.
உலகக் கோப்பைத் தொடரையொட்டி லண்டனில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தச் சந்திப்பின்போது, இந்திய அணிக்கு உள்ள வெற்றி வாய்ப்புகள் குறித்துச் செய்தியாளர்களுடன் தன் கருத்துகளை மித்தாலி ராஜ் பகிர்ந்துகொண்டார் . அப்போது ஒரு செய்தியாளர் அவரிடம், “உங்களைக் கவர்ந்த இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வீரர் யார்?”என்று கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டதும் கோபத்தில் முகம் சிவந்த மித்தாலி ராஜ், “இதே போன்ற கேள்வியை ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் கேட்பீர்களா?” என்று எதிர்க்கேள்வி கேட்டுச் செய்தியாளரின் வாயை அடைத்தார்.
அதோடு விட்டுவிடவில்லை. “நான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தக் கேள்வியை எதிர்கொள்கிறேன். ஆண் வீரர்களிடம், உங்களுக்குப் பிடித்த பெண் கிரிக்கெட் வீராங்கனை யார் என்று கேட்டு எழுதுங்களேன்?” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.
அது மட்டுமல்ல; தன் மனதில் இருந்த சில விஷயங்களையும் அங்கே கொட்டித் தீர்த்தார். அவரது பேச்சு, கிரிக்கெட்டில் ஆண், பெண் அணிகளுக்குக் காட்டப்படும் பாகுபாடுகளைத் தோலுரித்துக் காட்டியது.
“பெண்கள் கிரிக்கெட்டைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதில்லை. கிரிக்கெட்டில் நிறையப் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் முயற்சியால் உள்நாட்டில் நடந்த இரண்டு தொடர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. சமூக ஊடகங்கள் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் இப்போதுதான் அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது” என்றும் மித்தாலி ராஜ் தன் ஆதங்கத்தை அடுக்கிக்கொண்டே போனார்.
உண்மைதான். உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அநேகருள்ள நாடு இந்தியா. ஆனால், இங்கு ஆண் கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திர வீரர்களாகவும் சூப்பர் ஸ்டார்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், வீராங்கனைகளோ திறமைசாலிகளாக இருந்தாலும், போட்டிகளில் சாதனை படைத்தாலும் ரசிகர்களின் கவனம் இவர்கள் மீது திரும்புவதில்லை. இந்தப் பாலின பாகுபாடு கிரிக்கெட் ரசிகர்களில் தொடங்கி எல்லா மட்டங்களிலும் பரவியிருக்கிறது. இதை நிரூபிக்க இன்னொரு உதாரணத்தையும் மித்தாலி ராஜுவை வைத்தே சொல்லலாம்.
நடைபெற்றுவரும் மகளிர் உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் பலம் மிக்க இங்கிலாந்து அணியை இந்திய மகளிர் அணி அட்டகாசமாகச் சாய்த்தது. இந்தப் போட்டியில் அணித் தலைவர் மித்தாலி ராஜ் 73 பந்துகளில் 71 ரன்களை விளாசினார். இந்த அரைச் சதத்தின் மூலம் தொடர்ச்சியாக ஏழு அரைச் சதங்களை அடித்த முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையையும் அவர் படைத்தார் . 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ரீலரும், 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ஸும் தொடர்ச்சியாக ஆறு அரைச் சதங்கள் அடித்தவர்கள் என்ற சாதனையைப் படைத்திருந்தார்கள்.
இப்போது அந்தச் சாதனையை மித்தாலி ராஜ் முறியடித்திருக்கிறார். அதோடு ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக அரைச் சதங்கள் (178 போட்டிகளில் 47 அரைச் சதங்கள்) அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்.
கிரிக்கெட்டில் இது எவ்வளவு பெரிய சாதனை! இதுவே ஆண் கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தச் சாதனையைப் படைத்திருந்தால் தலையில் தூக்கிவைத்து எல்லோரும் கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். ஆனால், மித்தாலி ராஜின் சாதனை கண்டுகொள்ளப்படவேயில்லை. ஒரு சாதனையைப் போற்றும் மன நிலைகூட இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். இப்படியொரு சாதனையை அவர் நிகழ்த்தியதுகூடப் பலருக்கும் தெரிந்திருக்காது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுகொண்டிருப்பதுகூடத் தெரியாது. இந்திய கிரிக்கெட்டில் ஆண்-பெண் பாகுபாடு எவ்வளவு உச்சத்தில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சிறு உதாரணங்கள்தாம்.
கிரிக்கெட்டில் நிலவும் பாலினப் பாகுபாட்டை மித்தாலி ராஜ் தொடர்ந்து வெளிப்படுத்திவந்திருக்கிறார். செய்தியாளரின் கேள்விக்கு அவர் அளித்த பதிலும் அப்படி ஒரு வெளிப்பாடே. மித்தாலி ராஜ் போன்ற வீராங்கனைகள் கிரிக்கெட்டில் உள்ள ஆணாதிக்கம் குறித்துப் பேசுவதால் மட்டும் தீர்வு வந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு விளையாட்டைப் பாலினப் பாகுபாடுகளைக் கடந்து போற்றவும் நேசிக்கவும் ரசிக்கவும் மனநிலை மாற வேண்டும். கிரிக்கெட்டை கடவுள் போல் ஆராதிக்கும் இந்தியர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் அது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT