Published : 02 Jul 2017 12:48 PM
Last Updated : 02 Jul 2017 12:48 PM
மனித உடல் ஓர் இயந்திரம். பல உட்பாகங்கள் கொண்ட அமைப்பு. பெண்ணின் உடலில் ஆண் உடம்பில் இல்லாத சிறப்பு அமைப்பாகக் கர்ப்பப் பை அமைந்துள்ளது. இனப்பெருக்கத்துக்கான இந்த உறுப்பு தனது பணியை ஒட்டியும் தனது பணி தேவைப்படாத காலங்களிலும் கழிவு ரத்தத்தை வெளியேற்றுகிறது. கர்ப்பப் பை வளர்ச்சி தனது இலக்கை எட்டியதும் பெண் உடம்பிலிருந்து முதல் கழிவு ரத்தம் வெளியேறுகிறது. இப்படி முதன்முறையாக ரத்தம் வெளிப்படும் நிகழ்வை, பெண்கள் பூப்பெய்துதல் என்று குறிப்பிடுகிறார்கள். நடைமுறையில் ‘சமைஞ்சுட்டா’, ‘வயசுக்கு வந்துட்டா’, ‘உட்கார்ந்துட்டா’ என்று சொல்கிறார்கள்.
பெண் பருவமடைவது எதற்கு?
இதேபோல ஆண்கள் உடம்பில் இனப் பெருக்கத் தகுதிக்கான மாற்றம் நடைபெற்றாலும், அது நமது சொல்லாடல்களிலேயே பதிவாவதில்லை. ஏனெனில் ஆண், பெண்ணைத் திருப்திப்படுத்துவதற்காகப் படைக்கப்படவில்லை. அவர்கள் உலகை ஆள்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, ஓர் ஆண் வளர்ச்சியடைந்து முதன்முதலாக விந்து வெளிப்படுவது, சமுதாயத்தில் கொண்டாடப்பட வேண்டிய பெரிய நிகழ்வு அல்ல.
ஆனால் பெண்களுக்கு? ஆணின் காமம் தணிப்பதற்காகவும் பிள்ளை பெறுவதற்காகவுமே பெண் உருவாக்கப்பட்டிருக்கிறாள் அல்லது படைக்கப்பட்டிருக்கிறாள் என்று நம்பும் இந்தச் சமுதாயத்தில், பெண்களின் உடலில் ஏற்படும் இந்த வளர்ச்சி பெரிதாகக் கொண்டாடப்படுகிறது. அந்தக் கொண்டாட்டம், ‘இந்தப் பெண்ணை எந்த அபவாதத்துக்கும் ஆளாக்காமல் பாதுகாத்து ஒருவன் கையில் ஒப்படைக்க வேண்டும்’ என்பதைப் பெற்றோருக்கு நினைவுபடுத்துவதாகவும், ஓர் ஆணைத் திருப்திப்படுத்துவது மட்டுமே அவள் பிறப்பின் நோக்கமென்பதை பெண்ணுக்கு நினைவுபடுத்துவதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனாலேயே பல நடுத்தரக் குடும்பங்களிலும் அதற்கும் கீழே இருக்கிற குடும்பங்களிலும் பெண் பருவமடைந்ததும், அவர்கள் முதலில் பெறுகின்ற உணர்வு சோகமாக இருக்கிறது. பல தாய்மார்கள் முதலில் அழுதுவிடுகிறார்கள். அன்று முதல் அவர்கள் மனதில் ஒரு பதற்றம் உருவாகிவிடும். அது அந்தப் பெண்ணின் திருமணத்தன்றுதான் தணியும்.
வயிற்றில் கட்டிக்கொண்ட நெருப்பு?
வயதுக்கு வந்த பெண் வீட்டிலிருந்தால் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதாகப் பல பெற்றோர் சொல்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடற்கரையோரக் கிராமம் ஒன்றில் நடந்த நிகழ்வு இது. இப்போது நிலைமை ஓரளவு மாறியிருக்கலாம் என்ற நம்பிக்கையில், கிராமத்தின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அந்தக் கிராமத்தில் கழிப்பறைகள் கிடையாது. கடற்கரையே கழிப்பிடமாக இருந்தது. பத்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாரும் சூரியன் வந்த பிறகு வெளியில் வரக் கூடாது. மாலைச் சூரியன் மறைந்த பிறகுதான் வெளியில் வர முடியும். நாங்கள் சென்றிருந்தபோது ஊர்த் தலைவர்களின் வீட்டுப் பெண் பிள்ளைகள் மட்டுமே பள்ளிக்கு அனுப்பப்பட்டுவந்தனர். வேறு பெண் குழந்தைகள் கல்விக் கூடங்களுக்கே செல்லவில்லை. பகல் பொழுதில் இயற்கை உபாதைகளை வீட்டுக்குள்ளேயே கழிக்க வேண்டும். சுத்தம் செய்யும் சுமையும் பெண்களுக்கே, அதுவும் முக்கியமாகத் தாய்மார்களுக்கு. அதன்பின் இந்தப் பெண்கள் பருவமெய்தி திருமணமான பின்னர்தான், இவர்களுக்கு வெளியில் செல்லும் உரிமை கிடைக்கும். இந்த நிலையில் சட்டம் சொல்லும் திருமண வயதுவரை அவர்கள் காத்திருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.
இது சாத்திர மீறலா?
உண்மையில் இந்தப் பயமும் பதற்றமுமே குழந்தைத் திருமணங்களுக்கு அடிகோலுகின்றன. திருமண வயதை 12 என ஆக்க வேண்டும் என்ற சாரதா சட்டம் (1929) முன்வைக்கப்பட்டபோது, பூப்படைவதற்குள் திருமணம் செய்துகொடுத்துவிட வேண்டும் என்பதே எங்கள் மத தர்மம்; அதற்கு மாறாக இந்தச் சட்டத்தைக் கொண்டுவர முடியாது என்று சொல்லித்தான் எம்.கே. ஆச்சார்யா போன்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சரி. எதற்கு இந்தப் பயமும் பதற்றமும்? பெண்கள் மனதில் தன்னிச்சையான காதல் ஆசை போன்றவை தோன்றி, தங்கள் இணையை அவர்களாகத் தேடிக்கொள்ளக் கூடாது என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. ஆக, எவ்வளவு ஆசையாக வளர்க்கப்பட்டிருந்தாலும் பருவமடைந்த பின் தன் தாய், தந்தையருக்கே பெண் சுமையாகக் கருதப்படுகிறாள். காவல் காக்கப்படுகிற ஒரு பொருளாக்கப்பட்டுவிடுகிறாள்.
இது ஒருபுறம் இருக்க, முதலில் குறிப்பிட்டதுபோல் நம் உடலில் வெளியேறும் பல்வேறு கழிவுப் பொருட்களில் இந்தக் கர்ப்பப் பை ரத்தமும் ஒன்று. ஆனால், இது மட்டும் இங்கு தீட்டாகிவிட்டது. மாதந்தோறும் இந்தக் கழிவு ரத்தம் வெளியேறுகையில் தீண்டப்படாதவளாகிறாள் பெண். பிள்ளை பெற்ற வீட்டில் இந்த ரத்தப் போக்கு நிற்கும்வரையிலும், ஒவ்வொரு மாதத்திலும் மாதவிடாய் வரும் நாட்களிலும் வீட்டுக்குள்ளேயே பெண் விலக்கி வைக்கப்பட வேண்டியவள் என்பதுதான் இங்கு சாத்திரம். இந்த விஷயத்தில் தற்போது பெண்கள் ஓரளவு அனுபவித்துவரும் சுதந்திரம் என்பது அந்தச் சாத்திரத்தின் விதிமீறலாகவே பார்க்கப்படுகிறது.
பெண்கள் மாதவிலக்கானதை, ‘தூரமாகிவிட்டாள்’ என்றும் சிலர் சொல்வார்கள். எப்படி அந்தச் சொல் வந்தது? முன்பெல்லாம் மாதவிடாய் நாட்களில் பெண்களை ஊரைவிட்டே தள்ளி காடு அல்லது மலைப் பகுதிக்கு அனுப்பிவிடுவார்களாம். காட்டு விலங்குகளாலும், புழு பூச்சிகளாலும்கூட ஆபத்து நேர்வது உண்டாம். ஒருவேளை இந்த நடைமுறையிலிருந்தே ‘தூரமாவது’ என்ற சொல் வந்திருக்கலாம். அவ்வளவு ஏன்? இருபது முப்பதாண்டுகளுக்கு முன்புவரையில் காம்பவுண்ட் வீடுகளில் இந்த காலத்தில் பெண்கள் ஒதுங்க என்று தனியறை ஒன்று சுகாதாரமற்ற நிலையில் காணப்படும். இன்றும்கூடப் பல பகுதிகளில் அப்படியிருக்க வாய்ப்பிருக்கிறது. இன்னும் நிறைய வேதனை இருக்கிறது சொல்வதற்கு.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT