Published : 16 Jul 2017 11:59 AM
Last Updated : 16 Jul 2017 11:59 AM
பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் அவர்களின் பங்களிப்பு உள்ளது. ஆனால், இந்த நவீன யுகத்திலும் பல்வேறு காரணங்களால் பெண் சிசுக் கொலை தொடர்கதையாக இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள்தொகை நாள் ஜூலை 11அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம், மகப்பேறு ஆரோக்கியம், மனித உரிமை ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த நாளின் முக்கிய நோக்கம்.
உலக மக்கள்தொகை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டு போனாலும் அதில் பெண்களின் எண்ணிக்கை மட்டும் குறைவாகவே இருந்துவருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண்கள் குழந்தைகள் என்ற அளவில் இருக்கிறது.
தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வு மையம் நடத்திய ஆய்வின்படி தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஆயிரத்தி முப்பத்தி மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால் 2015-16-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 954 பெண் குழந்தைகள் மட்டும் பிறப்பதாகத் தெரியவருகிறது. பெண் சிசுக் கொலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துவந்தாலும் பெண் சிசுக்கொலை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
பெண் என்றால் சுமையா?
இன்றைக்கும் பல இந்தியக் குடும்பங்களில் வாரிசாகப் பெண் குழந்தையை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு இல்லை. திருமணச் செலவு, வரதட்சிணை போன்ற காரணங்களால் பல குடும்பங்களில் பெண் குழந்தையைச் சிசுவிலேயே கொல்லும் கொடுமையும் நடக்கிறது. குறிப்பாக இந்தப் போக்கு வட மாநிலங்களிலேயே அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை.
“பல குடும்பங்களில் ஆண் குழந்தை பிறக்கும்வரை குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். பெண் சிசுக் கொலைக்கு எதிராகச் சட்டங்கள் வந்த பிறகு தமிழகத்தைப் பொறுத்தவரை ஸ்கேன் சென்டர் மூலமாகக் கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து கருவிலேயே பெண் குழந்தைகள் கொல்லப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.
இதைக் கட்டுப்படுத்த அரசு, தனியார் ஸ்கேன் மையங்கள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. கருவுற்ற பெண்ணுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றால் எந்தக் காரணத்துக்காக மருத்துவர் ஸ்கேன் எடுக்கச் சொல்லியிருக்கிறார், ஒரு மாதத்தில் ஒவ்வொரு ஸ்கேன் சென்டரிலும் எத்தனை முறை ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது போன்றவை தற்போது பதிவுசெய்யப்படுகின்றன. பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் முறையாக இருந்தால்தான், அடுத்த ஆண்டுக்கான உரிமம் ஸ்கேன் சென்டர்களுக்கு வழங்கப்படும்.
ஆனால், இத்தனை விஷயங்களையும் தாண்டி சில இடங்களில் தற்போதும் பெண் சிசுக் கொலை மறைமுகமாக நடைபெற்றுவருகிறது என்பதை மறுப்பதற்கில்லை” என்கிறார் பொன்னேரி அரசு மருத்துவமனைத் தலைவரான (பொறுப்பு) மகப்பேறு மருத்துவர் அனுரத்னா.
- அனுரத்னா
தண்டனைக்குரிய குற்றம்
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிவது தண்டனைக்குரிய குற்றம். இதற்காகக் கருவில் பாலினத்தைக் கண்டறியும் தடுப்புச் சட்டம் 1994-ல் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டப்படி கருவிலிருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பதைத் தெரிவிக்கும் மருத்துவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இதே குற்றம் இரண்டாவது முறையும் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளுக்கும் 500 ரூபாய் என்று கணக்கிட்டு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து குற்றம் நடைபெறும் பட்சத்தில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனை சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் பெண் சிசுக் கொலைக்கு எதிரான சமுதாயத்தின் பார்வையில் அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் பாலினச் சமத்துவத்தை நோக்கி முன்னேற முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT