Published : 09 Jul 2017 01:08 PM
Last Updated : 09 Jul 2017 01:08 PM
பெண் பருவமடைதல் என்னும் நிகழ்ச்சி இந்தச் சமுதாயத்தில் தேவைக்கு அதிகமாகவும் தவறான போக்கிலும் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் இனப்பெருக்கம் செய்கிறார்கள். இது இயற்கையே. ஆனால் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே மனிதர்களின் வாழ்க்கையா? இனப்பெருக்கம் செய்வதில் மகிழ்ச்சியும் துன்பமும் கலந்தே இருக்கிறது.
அதுபோல் நாம் மகிழ்ச்சியடைவதற்கும் பாதிக்கப்படுவதற்கும் இனப்பெருக்கத்துடன் தொடர்பில்லாத எத்தனையோ அம்சங்கள் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இனப்பெருக்கம் செய்வதற்கான ஓர் அம்சமே, இங்கு முழு வாழ்க்கையாக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் வேறு எந்த விலங்கினமும் இல்லை. காட்டில் பயணிப்பது, கடலில் பயணிப்பது, மலையேறுவது, மண்ணை முகர்வது, மனித அறிவின் கண்டுபிடிப்புகளை ரசிப்பது, செவ்வாய் கோளுக்கு ஒருவழிப் பயணமாகக்கூட துணிந்து செல்வது என எல்லாமே வாழ்க்கைதான்.
இதுவும் வாழ்க்கைதான்
இவையெல்லாம் ஆணுக்கு என்னவிதமான மகிழ்ச்சியை, வாழ்க்கையின் அர்த்தத்தைத் தருமோ அதே மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும்தான் பெண்ணுக்கும் தரும். ஆனால் பருவமடைதல் என்னும் நிகழ்ச்சி மூலமாகப் பெண்ணின் மனதுக்கும் கண்களுக்கும் ஒரு கலாச்சாரத் திரையைப் போடுகிறது இந்தச் சமுதாயம். புதிதாய்ப் பிறந்துவிட்டதைப்போல் பூரிக்கிறாள் பெண். அன்றிலிருந்து அவள் மனம் தனது கணவன் யார் என்னும் கேள்விக்குள் சிக்கிக்கொள்கிறது.
அவளுக்கு நடத்தப்படும் சடங்குகள், அவற்றின் அர்த்தங்கள், அந்தச் சடங்கில் கலந்துகொள்ளும் பெண்களின் உரையாடல்கள், கேலிப் பேச்சுகள் இவையெல்லாம் சேர்ந்து அவளது மனதை புதிதாகக் கட்டமைக்கின்றன. தன்னைத் தானே ஒரு பாலியல் பண்டமாக பெண்ணை உணரவைப்பதில் இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.
நல்லதொரு மாற்றம்
பெண்ணைப் பொறுத்தவரை இனப்பெருக்கம் முழு வாழ்வாகிறது. ஏற்கெனவே பத்து வருடங்களுக்கு மேல் இந்தப் புவியில் வாழ்ந்துவருகின்ற இந்தப் பெண், தனது வாழ்க்கைக்குள் இனி பத்து வருடங்கள் கழித்து வரப்போகும் ஓர் ஆணின் வரவே தனக்குப் புதிய வாழ்க்கை தரப்போகிறது என்கிற அடிமைத்தனமான, சிந்தனைக்கு ஆட்படுத்தப்படுவது இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது. கல்வியும்கூட நல்ல மாப்பிள்ளை கிடைப்பதற்கான கருவியாகிப்போகிறது. கல்யாணம் வாழ்க்கையின் லட்சியமாகிறது.
வீடுகளுக்குள் தீண்டாமை நிலவும் கொடுமையை இந்தச் சமுதாயத்தின் முற்போக்குத் தளங்கள், புரட்சியாளர்கள் எந்த அளவுக்கு உரத்துப் பேசியிருக்கிறார்கள்? ஒவ்வொது மாதமும் உதிரப் போக்கு நிகழும் தினங்களில் அந்தக் குழந்தைக்கு தனி தட்டு, தனி டம்ளர், தனி பாய், வசதியிருந்தால் தனிஅறை இல்லையெனில் ஓர் ஒதுக்குப்புறம்.
மனிதர்களை மட்டுல்ல செடிகளைக்கூட தொட்டுவிடக் கூடாதாம். செடி, பட்டுப்போய்விடுமாம். கோயிலுக்குப் போகக் கூடாது. வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளக் கூடாது. பெண் குழந்தைகளைப் படிக்க வைத்ததால் முதலில் உடைந்தது இந்தத் தீட்டு வளையம்தான்.
ஒருவகையில் சானிட்டரி நாப்கின் கம்பெனிக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்தக் கம்பெனியின் விளம்பரம் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் வந்து பேசத் தொடங்கியபோது முதலில் எரிச்சல், பிறகு கண்டனம், கிசுகிசுப்பான சிரிப்புகள் வந்தன. ஆனால், இவையெல்லாம் மாறி இப்போது ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களுக்குக் கடைக்குப் போய் சானிட்டரி நாப்கின் வாங்குகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
தன்மானமே முன் நிபந்தனை
இந்த வளர்ச்சி பெண்களின் நடமாட்டத்தை அதிகரித்திருக்கிறதே தவிர, அவள் அந்த நாட்களில் புனிதமற்றவளாகிறாள் என்கிற கருத்தாக்கத்தை உடைத்திருக்கிறதா? உதாரணமாகத் தங்கள் கம்பெனி சானிட்டரி நாப்கின் பயன்படுத்தினால் மாதவிடாய் நாட்களில்கூட பெண்கள் உயரம் தாண்டலாம், தூரம் தாண்டலாம் என்று விளம்பரம் கொடுக்கும் இந்த நிறுவனங்கள் தங்களது நாப்கின்கள் சுத்தத்தைத் தருவதால் அதை உபயோகிக்கும் பெண்கள் கோயிலுக்குப் போகலாம், திருமணங்களுக்குப் போகலாம், பிற மங்கல காரியங்களில் ஈடுபடலாம் என்று விளம்பரம் கொடுக்க முடியுமா என்று கற்பனைசெய்து பாருங்கள்.
எந்தவொரு காரணத்தை வைத்தும் என்னைப் புனிதமற்றவள், தீட்டானவள் என்று சொல்கிற உரிமை இந்தச் சமுதாயத்துக்குக் கிடையாது என்று பெண் நினைக்க வேண்டும். அந்தத் தன்மானம், பெண் விடுதலைக்கான முன் நிபந்தனை.
பேசப்படாத வேதனை
பெண்ணுடலில் இனப்பெருக்க உறுப்பின் வளர்ச்சி, அவளின் கலாச்சார சிறையாக மாற்றப்படுவது ஒருபுறம் இருக்கட்டும். உடற்கூறியல் ரீதியாக இந்த வளர்ச்சி பற்றி அவள் அறிந்துகொள்வது அரிதாகிப்போகிறது. தனது உடலின் புதிய செயற்பாடுகள் பற்றிப் பேசும் சமூக உரிமை அவளுக்கு மறுக்கப்படுவதே அதற்கு அடிப்படைக் காரணம்.
நமது மொழியும் நம்மை விலக்கி வைக்கிறது. கர்ப்பப்பையின் கழிவு ரத்தம், தீட்டு - விலக்கு - தூரம் என்றழைக்கப்பட்டு இறுதியில் பொதுவெளியில் உச்சரிக்கப்படக் கூடாத விஷயமாகிவிடுகிறது. அப்போதிலிருந்து பெண் குழந்தை தனது தந்தை, சகோதரர்களிடமிருந்து அந்நியப்படுத்தப்படுகிறாள். தூக்கி வளர்த்த தந்தையும் உடன்விளையாடிய சகோதரர்களும் அந்நிய மனிதர்களாகிறார்கள்.
வயிறு வலிக்கிறது,சோர்வு வருகிறது, புதிய அனுபவம், புதிய வேதனை. ஆனால், இதையெல்லாம் தாயிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடிகிறது. அதை மெல்லிய குரலில் ரகசியமாகவே அக்கம் பக்கம் பார்த்தே பேசவேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் ஆரோக்கியமான, மருத்துவ ரீதியான ஆலோசனை அந்தக் குழந்தைக்கு எப்படிக் கிடைக்கும்? ஒரு புதிய அனுபவத்தை அதுவும் பெரும்பாலும் வேதனை தரும் அனுபவத்தை அந்தக் குழந்தை சந்திக்கிறது. அதேநேரத்தில் அந்தக் குழந்தை சொல்லக் கூடாத விஷயமாக. அது இருப்பதையும் எதிர்க்கொள்ள நேர்கிறது.
இப்படி பேசா உலகம் உருவாவது பல்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மருத்துவ உலகம்கூட போதுமான அளவு இந்தப் பேசா உலகத்தை நோக்கி தனது கவனத்தைத் திருப்பவில்லை. எய்ட்ஸ் நோயைவிட அதிக பாதிப்புகளை கர்ப்பப்பை நோய்களால் பெண்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால், எய்ட்ஸ் நோய்த் தடுப்புக்கு நாம் எடுத்துக்கொண்ட அக்கறையில் எத்தனை சதவீதம் கர்ப்பப்பை நோய்கள் பற்றிய அறிவைப் பரப்ப எடுத்துக் கொண்டிருக்கிறோம்? ஒருமுறை சென்னை சாஸ்திரி பவனில் மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கான கருத்தரங்கை அதன் செயலர் மணிமேகலை ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் பங்கேற்ற மருத்துவர் ராஜமகேஷ்வரி, பெண்கள் தங்கள் உடம்பைப் பாதுகாப்பது குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். குறிப்பாகப் பெண்களின் பிறப்புறுப்பைச் சுருக்கி, விரித்து பயிற்சியளிப்பதன் மூலம் எவ்வாறு சிறுநீரக நோய்களைத் தடுக்கலாம் என்று விவரித்தார். இப்படி மொழி தடைசெய்யப்பட்ட உலகத்துக்குள் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய எத்தனை விஷயங்கள் இருக்கின்றன! இவற்றைப் பேசக் கூடாது என்று தடை செய்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இவையெல்லாம் பெண்களின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிக்கும் விஷயங்கள் என்பதையும் நாம் அறிய வேண்டும்.
(இன்னும் தெளிவோம்)
கட்டுரையாளர்,
பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT