Last Updated : 16 Jul, 2017 11:56 AM

 

Published : 16 Jul 2017 11:56 AM
Last Updated : 16 Jul 2017 11:56 AM

அஞ்சுவது அஞ்சேல்: பேருந்து, ரயில்களை பெண்கள் நம்புகிறார்களா?

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களில் சென்னையும் ஒன்றாக அறியப்பட்டாலும், பெண்கள் மீதான தாக்குதல்கள் இங்கேயும் பல்வேறு வடிவங்களில் நடந்துகொண்டிருக்கின்றன என்பதே உண்மை.

இந்தப் பின்னணியில் சென்னையில் பெண்கள், சிறுமிகளுக்கான பாதுகாப்பான இடங்களை மீட்டெடுப்பது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறது ‘அவேர்’ (AWARE) அமைப்பு. இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெண்களுக்கு சென்னையின் பொதுப் போக்குவரத்து எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்குச் சமீபத்தில் ஓர் கருத்துக் கணிப்பையும் நடத்தியிருக்கிறது.

பாதுகாப்புப் பிரச்சாரம்

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி, ‘அவேர்’ (AWARE - Awareness for Wo+Men to Advocate their Rights and Equality) நிறுவனம், #NoMoreNirbhaya என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. “2012-ம் ஆண்டு, டெல்லி நிர்பயா பாலியல் வன்புணர்வு சம்பவத்தின் பாதிப்பில்தான் 2013-ம் ஆண்டில் ‘அவேர்’ அமைப்பு உருவானது. எங்கள் பிரச்சாரங்களுக்கு சமூக ஊடகங்களில் கிடைத்த வரவேற்பு, களத்தில் பணியாற்றவும் ஊக்கப்படுத்தியது.

நொச்சிக்குப்பம், செம்மஞ்சேரி பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, பாலினப் பாகுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளைப் பட்டியலிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். இந்தப் பிரச்சாரங்களின் தொடர்ச்சியாகவே ‘சென்னையில் பெண்கள், சிறுமிகளுக்கான பாதுகாப்பான இடங்களை மீட்டெடுத்தல்’ என்ற முயற்சியை முன்னெடுத்தோம்” என்கிறார் ‘அவேர்’ அமைப்பின் இணைநிறுவனர்களில் ஒருவரான சந்தியன் திலகவதி. தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், தற்போது முழுநேரமாக ‘அவேர்’ செயல்பாடுகளை ஒருங்கிணைத்துவருகிறார்.

பேருந்துகளில் பாதுகாப்பு

சென்னையின் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பைப் பற்றி ஓர் உண்மையான களநிலவரத்தை வெளிப்படுத்தியிருக்கிறது, இவர்களுடைய கருத்துக் கணிப்பு. பதினெட்டு வயதிலிருந்து முப்பந்தைந்து வயது வரையுள்ளவர்கள் இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டார்கள். 1,800 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

“சென்னை மாநகர பொதுப் போக்குவரத்தில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு அம்சம் குறித்த கருத்துகள், தனிப்பட்ட பயண அனுபவங்கள் - தேர்வுகள், பாலியல் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட கேள்விகள் உள்ளிட்டவை சார்ந்து எங்களுடைய கருத்துக் கணிப்பு அமைந்தது.

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறோம்” என்கிறார் ‘அவேர்’ அமைப்பின் இணைநிறுவனர்களில் ஒருவரான ஜனனி விஸ்வநாதன். சுற்றுச்சூழல் ஆரோக்கியம், பாதுகாப்பு வல்லுநரான இவர், தற்போது அமெரிக்காவில் வசித்துவருகிறார். அங்கிருந்தபடியே, ‘அவேர்’ அமைப்புக்காகச் செயல்பட்டுவருகிறார்.

போக்குவரத்துக் கழகத்தின் ஒத்துழைப்பு

பலரும் பேருந்து, ரயில் பயணங்களின்போது தாங்கள் சந்தித்த தனிப்பட்ட தாக்குதல்களைக் கருத்துக் கணிப்பில் பகிர்ந்துகொண்டிருந்தனர். கருத்துக் கணிப்பு முடிவுகளுடன் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை ‘அவேர்’ நிறுவனம் அணுகியது. போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து ஒரு பயிலரங்கை ‘அவேர்’ ஒருங்கிணைத்தது.

“குரோம்பேட்டையில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில் 140 ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பங்கெடுத்துகொண்டனர். இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்ட ஊழியர்கள் பலரும் பேருந்துப் பயணங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி போதிய விழப்புணர்வு இல்லாமல் இருந்தனர். அவர்களுக்கு விழிப்புணர்வை அதிகரித்தோம். போக்குவரத்துக் கழகத்தின் இணை இயக்குநர் ஞானப்பிரகாசமும், பிரஜன்யா நிறுவனமும் பயிலரங்குக்கு ஊக்கமளித்தார்கள்” என்கிறார் சந்தியன்.


ஜனனி - சந்தியன் திலகவதி

இந்தக் கருத்துக் கணிப்பின் முக்கிய முடிவுகளை பிரச்சாரம் செய்ய மவுனிகா டாடாவின் ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறது ‘அவேர்’. அத்துடன், EMPOWER என்ற பிரச்சாரத்தின் மூலம் பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்களில் பெண்களுக்குத் தற்காப்பு பயிற்சிகளை வழங்கவிருக்கிறது. SafetiPin என்ற செயலியுடன் இணைந்து தெருக்கள், சாலைகளின் பாதுகாப்பைத் தணிக்கை செய்யும் நடைமுறையை (Safety Audits) சென்னை முழுவதும் நடத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் சென்னையில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த வழிவகுக்கும் என்று அந்த அமைப்பினர் நம்புகிறார்கள்.

‘அவேர்’ பற்றி மேலும் அறிய:>www.facebook.com/awareindia2020/



கருத்துக் கணிப்பு முடிவுகள்

> 71 சதவீதம் பேர், பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதற்கான ஆபத்து இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

> 65 சதவீதம் பேர், இரவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது பெண்களுக்குப் பாதுகாப்பானது என்ற கருத்தை நிராகரித்திருக்கின்றனர்.

> 51.8 சதவீதம் பேர், பொதுப் போக்குவரத்தில் ஒரு பெண் வாய்மொழி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும்போது மற்றவர்கள் உதவிக்கு வருவார்கள் என்ற கருத்தை மறுத்திருக்கின்றனர்.

> 60 சதவீதம் பேர், பாலியல் தாக்குதல் குறித்து ஒரு பெண், போக்குவரத்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தால் விசாரணை நடைபெறும் என்ற கருத்தை நிராகரித்திருக்கின்றனர்.

> 80 சதவீதம் பேர், கூட்டமான பேருந்துகளிலும் ரயில்களிலும் பெண்கள் அதிகமாகப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்பதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

> 81 சதவீதம் பேர், பேருந்துகளும் ரயில்களும் எப்போதும் கூட்டமாகவே இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

> 50 சதவீதம் பேர், பொதுப் போக்குவரத்தில் பல்வேறு தாக்குதலுக்குள்ளானதாகத் (வாய்மொழித் தாக்குதல்கள் - விசில் அடிப்பது, மோசமான வார்த்தைகளால் திட்டுவது - 44.5 சதவீதம், பாலியல் தாக்குதல் - வேண்டுமென்றே இடிப்பது, கிள்ளுவது - 83.7 சதவீதம் ) தெரிவித்திருக்கின்றனர்.

> பொதுப் போக்குவரத்து பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு, 56 சதவீதம் பேர், பத்துக்கு 5-7 மதிப்பெண்கள்வரை கொடுத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x