Published : 09 Jul 2017 01:09 PM
Last Updated : 09 Jul 2017 01:09 PM
கட்டுக்கோப்பான உடல் அமைப்பை முதன்மையாகக் கருதும் துறைகளில் மாடலிங் துறையும் ஒன்று. ஆனால், மாடலிங் செய்ய கச்சிதமான உடம்பு அவசியமல்ல, ஆன்ம பலம்தான் அவசியம் என்பதற்குச் சான்று 29 வயதான, மெலனி கெய்டஸ் (melanie gaydos). இவர், தன் வாழ்நாளில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எத்தனையோ சவால்களைச் சந்தித்துள்ளார்.
இவர் பிறக்கும்போதே ‘எக்டோடெர்மல் டிஸ்பிளேஷியா’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் இவரது உடலின் சிறு எலும்புகள், நகங்கள், பற்கள், சருமத்தின் நுண் துளைகள் ஆகியவற்றில் பிரச்சினைகள் உள்ளன. வழுக்கை தொடர்பான பாதிப்பும் ஏற்பட்டதால் உடலிலுள்ள ரோமங்கள் உதிர்ந்துபோயின. சிறுபிராயத்திலேயே கண் இமை ரோமங்களும் உதிர்ந்து, அவற்றில் சில கண் விழியைக் காயப்படுத்தியதால் பார்வைக் குறைபாடும் ஏற்பட்டது. 26 வயதுக்குள் மூன்று முறை ஒட்டுமொத்தப் பற்களும் மாற்றி அமைக்கப்பட்டன.
தன்னை தொற்றுவியாதிக்காரியாகவும், நோயாளியாகவும் அதுவரை அருவருப்போடு பார்த்தவர்களுக்கு முன்னால் நிமிர்ந்து நிற்க முடிவெடுத்தார் மெலனி. அமெரிக்காவின் கனக்டிகட்டில் பிறந்தவர், நியூயார்க் நகரில் நுண்கலைப் பட்டப் படிப்பை முடித்தார். செயற்கையான பற்கள் தனக்கு இனித் தேவை இல்லை எனத் தீர்மானித்தார். தலை வழுக்கையை மறைக்கச் செயற்கைக் கூந்தலும் வேண்டாம் என்று தூக்கி எறிந்தார். உடை அலங்காரத்தையும் உடல் அழகையும் முன்னிறுத்தும் ஃபேஷன் உலகில் அவலட்சணம் என நிந்திக்கப்பட்ட தன் உடலை அழகின் புதிய அடையாளமாக மாற்றத் துணிந்தார். புதிய கோணத்தில் தன் உடலை முன்னிறுத்தினார். மாடலிங் உலகுக்குப் புதுபுது அர்த்தங்கள் தருபவர்களில் தனித் தடம் பதித்தார்.
உலகப் புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர்களின் கேமரா லென்ஸ்கள் இன்று இவரது உருவத்தை அநேக முறை படம் பிடிக்கின்றன. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் இவரைப் பின்தொடர்கிறார்கள். ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் இவருக்குக் குவிகின்றன. தம்முடைய பலவீனத்தை விடுத்துப் பலத்தைக் கண்டறிந்து முன்னேறுபவர்களே பாராட்டுக்குரியவர்கள். அதிலும் மெலினி தன்னுடைய குறையையே நிறையாக மாற்றிக் காட்டி, உண்மையிலேயே மாற்றத்துக்கான திறனாளியாக உயர்ந்து நிற்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT