Published : 23 Jul 2017 03:51 PM
Last Updated : 23 Jul 2017 03:51 PM
ஜூன் முதல் வாரத்தில் லண்டனில் தொடங்கிய விம்பிள்டன் திருவிழா கடந்த வாரம் நிறைவுற்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் எதிர்பார்ப்புக்கு மாறாக ஸ்பெயினைச் சேர்ந்த முகுருஸா, வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி முதன் முறையாகப் பட்டம் வென்றார். இந்த இருவருக்கும் அப்பாற்பட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த விம்பிள்டனில் கலந்துகொண்டனர். இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் எக்டரினா மாக்ரோவா-எலனா வெஸ்னினா, மார்டினா ஹிங்கிஸ் ஆகிய வீராங்கனைகள் வெற்றிகளைக் குவித்திருக்கிறார்கள்.
தோல்வியைத் தந்த மனநெருக்கடி
வெற்றிபெற்றவர்களைத் தாண்டி இந்த விம்பிள்டனில் இரண்டாம் இடம்பிடித்த வீனஸ் வில்லியம்ஸ் பார்வையாளர்களின் கவனத்தைத் தொடக்கத்தில் ஈர்த்தார். அவர் இந்த விம்பிள்டன் பட்டத்தை வென்றால், அதிக வயதில் விம்பிள்டன் பட்டம் வென்ற பெண் என்ற சாதனையைப் படைத்திருப்பார். அந்தச் சாதனையை நோக்கி தொடக்கத்திலிருந்தே மிகுந்த ஆற்றலுடன் ஆடிவந்தார். ஆனால், இறுதிப் போட்டியில் பலவீனமடைந்து இளம் வீராங்கனையான முகுருஸாவிடம் தோற்றார்.
விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் தனது வாகனத்தில் சென்றபோது வீனஸ் வில்லியம்ஸ் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். வாகனம் விபத்துக்குள்ளாகி ஒரு தம்பதி கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். விம்பிள்டன் இறுதிப் போட்டியை நோக்கி வீனஸ் முன்னேறிக்கொண்டிருந்த காலகட்டத்தில், விபத்தில் காயமுற்றவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். தன் கணவரின் மரணத்துக்குக் காரணமான வீனஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறந்தவரின் மனைவி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த மன நெருக்கடிக்கு இடையில் வீனஸ் விளையாடியதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
வீனஸுக்கு அடுத்தபடியாகக் கவனம் ஈர்த்த இன்னொரு வீராங்கனை மாண்டி மினெல்லா. லக்ஸம்பர்க் வீராங்கனையான இவர் நாலரை மாதக் கர்ப்பத்துடன் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்றார். தனது நாலரை மாத சிசுவை வயிற்றில் சுமந்தபடி தொடக்கநிலையில் சிறப்பாக ஆடினாலும், அவரால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. 64 பேர் அடங்கிய சுற்றிலேயே வெளியேறிவிட்டார். உலக டென்னிஸில் கோலோச்சி வரும் செரீனா வில்லியம்ஸும் கர்ப்பமாக இருப்பதால், இந்த விம்பிள்டனில் பங்கேற்கவில்லை.
கடந்த ஆண்டு விம்பிள்டனில் ஊனமுற்றோருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பெண்கள் சக்கர நாற்காலி ஒற்றையர் பிரிவில் நெதர்லாந்தைச் சேர்ந்த டி க்ரூட், சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சக்கர நாற்காலி கலப்புப் பெண்கள் பிரிவில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோர்டன் வைலே - ஜப்பானைச் சேர்ந்த எய் கமிஜி ஆகிய இருவரும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
டென்னிஸ் ராணி
1877-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் உயர்வானது. இந்தப் போட்டியில் 1844-ம் ஆண்டிலிருந்து பெண்கள் பங்கேற்றுவருகிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த மோட் வாட்ஸன்தான் விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் பெண். 1904 வரை இந்தப் பட்டத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்களே தொடர்ந்து வென்றுவந்தனர். 1905-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மே சட்டன், இங்கிலாந்துப் பெண்களின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சட்டனுக்கு அடுத்தபடியாக சூசன் லெங்லான் என்னும் பிரெஞ்சுப் பெண் தொடர்ந்து ஐந்து முறை விம்பிள்டன் பட்டம் வென்று உலகையே திரும்பிப் பார்க்கவைத்தார். ஆஸ்துமா உள்ளிட்ட பல உடல்நலக் கோளாறுகளால் வீட்டுக்குள் அடைந்து கிடந்த சூசனின் கவனத்தைத் திசை திருப்ப, அவருடைய பெற்றோர் டென்னிஸைப் பழக்கியுள்ளனர். அது அவருக்குப் பிடித்துப்போக, தீவிரமாக விளையாட ஆரம்பித்தார். பங்குபெற்ற போட்டிகளில் எல்லாம் முதலில் தோல்வியே கண்டார். தளராமல் ஆடி சூட்சுமங்களும் நம்பிக்கையும் கூடிய பிறகு, அவருக்கு வெற்றி குவிந்தது. 1914-லிருந்து 1924 வரை 31 பட்டங்களை வென்று பெண்கள் டென்னிஸின் ராணியாகத் திகழ்ந்தார்.
ரத்தின நவரத்திலோவா
அவருக்குப் பிறகு அமெரிக்காவின் மார்ட்டினா நவரத்திலோவா 1982-லிருந்து 1987 வரை தொடர்ந்து ஆறு முறை விம்பிள்டன் பட்டம் வென்று சூசனின் சாதனையை முறியடித்தார். முன்னதாக 1978, 1979 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்தும் 1990-ல் ஒரு முறையும் விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளார். 9 முறை விம்பிள்டன் பட்டம் வென்று, அதிக முறை இப்பட்டத்தை வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ், ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃப், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் போன்ற பல முன்னணி வீராங்கனைகள் பிறகு வந்தாலும் மார்ட்டினாவின் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
இந்தியப் பெண்கள் டென்னிஸைப் பொறுத்தவரை ஷிகா உபராயும் நிருபமா வைத்யநாதனும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், யு.எஸ். ஓபன் ஆகியவற்றில் முதல் சுற்று ஆட்டம்வரை முன்னேறியிருக்கிறார்கள். சானியா மிர்சா, யு.எஸ். ஓபனில் நான்காவது சுற்றுவரை தனியாக முன்னேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து விம்பிள்டன் பெண்கள் இரட்டையர் பட்டத்தை 2015-ல் வென்று, இந்திய தேசியக் கொடியை விம்பிள்டன் பட்டியலில் இவர் சேர்த்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT