Published : 23 Jul 2017 03:35 PM
Last Updated : 23 Jul 2017 03:35 PM

வாசிப்பை வசப்படுத்துவோம்: சாப்பாட்டு ராமன்கள் ஏன் சமைப்பதில்லை?

‘ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்’ என்ற நூல் 90-களின் இறுதியில் வெளியானது. நகைச்சுவைத் துணுக்குகளின் கிண்டலைத் தாண்டி அவ்வளவு காலம் பெண்களே வீடுகளில் சமைத்தனர்; சமையல் குறிப்புப் புத்தகங்களையும் பெரும்பாலும் அவர்களே படித்தனர். படைப்பூக்கமும் நேர்த்தியும் நிறைந்த சமையல் வேலையிலிருந்து ஆண்கள் வசதியாகக் கழன்றுகொண்டு, பெண்களைச் சமையலறையில் வைத்துப் பூட்டியிருந்தார்கள்.

கிட்டத்தட்ட 75 ஆண்டுகளைக் கடந்து இன்றைக்கும் விற்பனையில் சாதனை படைத்துவருகிறது மீனாட்சி அம்மாளின் ‘சமைத்துப் பார்’ புத்தகம். இதற்கிடையில் யாராவது ஆண்களைச் சமைக்கச் சொல்லி, ஆண்களுக்கான எளிமையான சமையல் குறிப்புகளைப் புத்தகமாக வெளியிடும்போது, அது குறைந்தபட்ச பரபரப்பையாவது உருவாக்கியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் ரொம்ப அசமந்தமாகவும் பொருட்படுத்தாமலும் கடந்துபோகும் தமிழ்ச் சமூகம், அந்தப் புத்தகத்துக்கும் வழக்கம்போலவே எதிர்வினையாற்றியது.

‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ என்று அந்தப் புத்தகத்தின் தலைப்பு கொஞ்சம் கவித்துவமாக மாற்றப்பட்டு வெளியானபோது, அந்தப் புத்தகம் சற்றே வேகமாக விற்றது. அந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து ஆண்கள் சமைப்பதற்குச் சில பயிலரங்குகளும் நடத்தப்பட்டன. எல்லாமே இலுப்பைப்பூவாக இனித்தாலும், ஒரு ஆலையைப் போன்ற பேரியக்கமாக மாறவில்லை. அப்படி மாறிவிட நம்மவர்கள் விடமாட்டார்களோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

ஆண்கள் சமைப்பது தெரியாதா?

சமீபத்தில் வெளியாகியுள்ள ‘ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்’ மூலமாக ஆண்கள் சமைக்க வேண்டியது பற்றியும், சமைக்கும் வேலை என்ற சிறையில் பெண்களை எப்படியெல்லாம் சிக்கவைத்திருக்கிறோம் என்பது பற்றியும் இன்னும் விரிவாக அலசியுள்ளார் ச. தமிழ்ச்செல்வன். இதைப் பற்றிப் பேசுவதற்கு இடை இடையே நிறைய செய்முறைகளும் குறிப்புகளும் கொடுக்கிறார்.

எப்போதுமே நம் சமூகத்தில் சமைப்பது இரண்டாம்தரமான வேலையாகக் கருதப்படுவதும், சாப்பிடுவது நல்ல விஷயமாகக் கருதப்படுவதும் மிகப் பெரிய முரண். வீட்டில் பெண்கள் மட்டுமே சமைத்து, ஆண்கள் சாப்பிட்டுக்கொண்டிருப்பதை ஒடுக்குமுறையின் நீட்சியாகவே கருத வேண்டியிருக்கிறது. தினம் தினம் சாப்பாட்டைக் காரணமாக வைத்து ‘உப்பைக் குறைத்துப் போட்டுவிட்டாய்’, ‘காரமே இல்லாமல் மண்ணு மாதிரி இருக்கிறது’, ‘இனிப்பைத் திகட்டுறது மாதிரியா போடுறது’ என்பது போன்ற குற்றங்குறைகளைச் சொல்லியே பெண்களை ஆண்கள் கொடுமைப்படுத்துவதன் வழி இதை உணரலாம். ஒரு நாளாவது அவர்கள் சமைத்துப் பார்த்தால் எல்லாம் விளங்கிவிடும். அதிகம் வேண்டாம், கீரையை மட்டும் ஆண்கள் சுத்தமாக ஆய்ந்து கொடுத்துவிட்டாலே பாராட்டலாம்.

இப்படிச் சொன்னவுடன் ‘ஆண்கள்தான் கூட்டங்களுக்குச் சமைக்கிறார்கள்’; ‘ஓட்டல்களில் சமைப்பது யார?’ கல்யாணங்களில் சமைப்பது யார் ?’ என்று வீராவேசமாக ஆண்கள் சத்தம் போடலாம். ஆமாம் சமைக்கிறார்கள். ஆனால், அதற்கு வருமானம் கிடைப்பதால் சமைக்கிறார்கள். அதே ஆண்கள், அவர்களின் உழைப்புக்கு எந்தப் பொருளாதாரப் பலனும் கிடைக்காது என்பதாலேயே வீடுகளில் சமைப்பதில்லை. விதிவிலக்குகள் மிகவும் சொற்பமாகவே இருக்கும்.

லட்சக்கணக்கான தோசைகள்

இன்னும் கொஞ்சம் யோசித்தால், இன்றைக்குப் பெரும் உணவகங்களில் லட்சக்கணக்கான சம்பளம் வாங்கும் செஃப்களில் எத்தனை பேர் பெண்கள்? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சமைப்பதையே அன்றாடத் தொழிலாகக் கொண்டிருக்கிற, சுவையில், செய்முறையில், உத்திகளில், புதிய கண்டறிதல்களில் பலப்பல புதுமைகளைச் செய்த பெண்கள் ஏன் அதிகச் சம்பளம் வாங்கும் செஃப்களின் எண்ணிக்கையில் மிகச் சொற்பமாக இருக்கிறார்கள்?

விஷயம் ஒன்றுதான். பெண்ணின் உழைப்புக்குப் பொருளாதாரப் பலனைக் கொடுத்துவிடக் கூடாது. அதேநேரம் குடும்பம், வீடு எனும் இடத்தில் சம்பளம் பெறாத முதன்மைப் பணியைச் செய்வதற்கு அவளை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். அதன்மூலம் அங்கேயே அவளை முடக்கிவிட வேண்டும்.

புத்தகத்தின் ஓரிடத்தில் அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையில் வரும் ஓர் உரையாடலைக் குறிப்பிட்டிருக்கிறார் ச. தமிழ்ச்செல்வன். ஒரு பாட்டியிடம் ‘உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எத்தனை தோசை சுட்டிருப்பீர்கள்?’ என்று கேட்கப்படுகிறது. அதற்கு அவர் ‘லட்சக்கணக்கான தோசைகள்’ என்று சொல்கிறார். சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமாகப் பல வழிகளில் உழைக்கவும் அறிவைப் பயன்படுத்தவும் திறமை பெற்ற பெண்களை, இப்படித் தோசை சுடுவதற்கு மூலையில் உட்கார வைத்துவிடுகிறோம். நம் சமூகம் செய்த, செய்துவருகிற அவலச் சாதனைகளிலேயே பெண்களின் அறிவை, ஆக்கப்பூர்வ உழைப்பை வீணாக்குவதை மிகப் பெரியது என்று சந்தேகமின்றிச் சொல்லலாம்.

சமையல் ஓர் அறிவியல்

‘சமைப்பது ஓர் அறிவியல், முதன்மையான அறிவியல்’ என்று ‘அறிவியலில் பெண்கள்’ நூலில் சொல்கிறார் பேராசிரியர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி. எதை உண்பது, எப்படி உண்பது, எப்படி உண்டால் ஆரோக்கியம், எந்த விகிதத்தில் உண்பது எனப் பல்வேறு நுணுக்கமான அம்சங்களை ஆராய்ந்து, சிந்தித்து உணவுக்கான பொருட்களைக் கண்டறிதல், பக்குவப்படுத்துதல், உண்ணத் தகுந்ததாக ஆக்குதல், சேமித்தல் எனப் பல்வேறு பணிகளைப் பெண்களே காலம்காலமாகச் செய்துவந்திருக்கிறார்கள். அதன் மூலம் மனிதர்களையெல்லாம் காலங்காலமாக ஆரோக்கியமாகவும் சுவையூட்டியும் வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகின் முதன்மைத் தொழிலான வேளாண்மையை, அதன் அடிப்படை முறைகளைக் கண்டறிந்தவர்கள் பெண்கள்தான். இத்தனை சாதனைகளையும் செய்த பெண்களைத்தான் வேலையற்றவர்கள், ஒன்றும் தெரியாதவர்கள் அல்லது எதற்கும் லாயக்கில்லாதவர்கள் என்று முத்திரை குத்தி மகிழ்கிறோம்.

இவ்வளவு காலம் சமையல் என்ற நுணுக்கமும் நேர்த்தியும் நிறைந்த வேலையிலிருந்து ஆண்கள் தப்பித்துவிட்டார்கள். இனிமேலும் அப்படியே விடுவது நிச்சயமாகச் சமூகத்துக்குக் கேடு என்ற தீர்மானத்துடன் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ச. தமிழ்ச்செல்வன்.

சாப்பாட்டோடு கொஞ்சம் சிரிப்பு

புத்தகம் முழுக்கச் சுவை எனும் ரசனை சைவம், அசைவம் என்ற வேறுபாடுகளைக் கடந்து நீக்கமற நிறைந்திருக்கிறது. பெண்களின் வேலைகளைச் சற்றுக் குறைக்கும் நவீனக் கருவிகளைப் பயன்படுத்தத் தடை விதித்து, அவர்களை எப்படியெல்லாம் ‘முற்போக்குவாதி’களும்கூட அடுக்களையிலேயே சிறைப்படுத்துகிறார்கள் என்பது தொடங்கி பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சமையல் சார்ந்த கொடுமைகளை, சமூக அவலங்களை ஆங்காங்கே தொட்டுச் சென்றிருக்கிறார் ஆசிரியர்.

நகைச்சுவை என்ற ரசனையும் புத்தகமெங்கும் விரவிக் கிடப்பது, ஆசுவாசம் தருகிறது. ஒருபக்கம் சமூகரீதியிலான தவறுகளைச் சுட்டிக்காட்டித் தலையில் குட்டினாலும், மறுபுறம் சுய எள்ளல், நகைச்சுவையான மொழிநடை மூலமாகப் புத்தகத்தைச் சுவாரசிய அனுபவமாக்கியிருக்கிறார். தன் உறவினர்கள், நண்பர்கள், உணவு சார்ந்து சந்தித்த புதியவர்கள் எனப் பலருடனும் நிகழ்ந்த அனுபவங்கள், நினைவுகளின் ஊடாக தமிழ்ச்செல்வன் இந்தப் புத்தகத்தில் பயணித்துள்ளார்.

நேர்த்தியில்லாத செய்முறைகள், செய்வதற்காக அல்லாமல் படம் பார்ப்பதற்கான அழகான உணவுப் படங்களைக் கொண்ட புத்தகங்கள் அதிகம் விற்பனையாகும் காலத்தில், ‘சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்’, பல்வேறு சுவையான அம்சங்களைக் கொண்டதாக மிளிர்கிறது. உணவில் பொதிந்து கிடக்கும் ஒடுக்குமுறை அரசியல், நம்முடைய பன்முகப்பட்ட சுவை சார்ந்த பண்பாட்டுப் பெருமிதம், சமைப்பதில் இருபாலினத்தவரிடையே திணிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட அனைத்தையும் பேசும் புத்தகமாக இது வந்திருக்கிறது.

சுவையே உணவின் அடிப்படை. ஆனால், அத்துடன் அது முடிந்துபோவதில்லை என்பதை ஒவ்வோர் அத்தியாயத்திலும் உணர்த்தியிருக்கிறார் தமிழ்ச்செல்வன்.

ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்,
ச. தமிழ்ச்செல்வன்,
பாரதி புத்தகாலயம்,
தொடர்புக்கு: 044- 2433 2924

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x