Published : 23 Jul 2017 04:07 PM
Last Updated : 23 Jul 2017 04:07 PM

விவாதம்: பெண்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

இன்னும் எத்தனை முறைதான் எழுதுவது என்று கோபமும் குமுறலும் எழுகிறது நடக்கிற நிகழ்வுகளைப் பார்க்கும்போது. பெண்கள் மீதான வன்முறை குறித்து எழுதத் தேவையே இல்லாத நாளுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டும்? ஆண், பெண் பேதத்தைக் கடந்துவிட்டோம், பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் போன்ற வெற்றுப் பரப்புரைகளை நீர்த்துப் போகச் செய்கின்றன ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்கள்.

நீங்கள் இதைப் படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் இந்தியாவின் ஏதோவொரு மூலையில் ஒரு பெண்ணோ, பல பெண்களோ வன்முறைக்கு இலக்காகிக்கொண்டிருக்கலாம். அப்படிப் பாதிக்கப்படுகிற அனைவருமே அதிலிருந்து மீண்டெழுவதற்கான சாத்தியம் ஏதும் இல்லாத இந்தச் சமூகத்தில், பெண்கள் எப்படித்தான் பிழைத்திருப்பது?

இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 34 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் வன்முறை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது. 2014-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவு என ஆசுவாசம் கொள்வதா அல்லது பெண்கள் மீது ஏன் இத்தனை வன்மம் என வேதனைப்படுவதா?

ஆறு வயதுக்கும் குறைவான குழந்தைகளில் தொடங்கி 60 வயதைக் கடந்த பெண்கள்வரை பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது. குறிப்பாக 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களே அதிக அளவில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் இத்தனை குற்றங்கள்தான் நடந்திருக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்குப் பதிவு செய்யப்படாத வழக்குகளின் எண்ணிக்கை அச்சமூட்டுகிறது.

சீரழிக்கப்படும் பெண்கள்

இரண்டு மாதங்களுக்கு முன் ஹரியாணாவில் 20 வயதுப் பெண்ணை அவருடைய காதலரும் காதலரின் நண்பரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிக் கொன்றார்கள். அந்தப் பெண்ணின் முகத்தைச் செங்கல்லால் சிதைத்தார்கள். வயல்வெளியில் நாய்களால் குதறப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது வயிற்றிலிருந்து உணவுக்குழாய் உருவப்பட்டிருப்பதும், அந்தரங்க உறுப்பில் கூர்மையான பொருட்கள் செலுத்தப்பட்டிருப்பதும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

அதற்கு ஒருநாள் முன்பு குருகிராம் (குர்கான்) பகுதியில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்ணை காரில் வந்த மூவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கினார்கள். பிறகு அவர் காரிலிருந்து வெளியே வீசப்பட்டார். பத்து வயது சிறுமி, தன் வளர்ப்புத் தந்தையின் மூலம் கருவுற்ற கொடூரமும் ஹரியாணாவில் நடந்திருக்கிறது. தந்தையால் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்குப் பாலியல் வன்முறைக்கு ஆளான மகள், 40 வயது ஆணால் வன்புணர்வுக்கு ஆளான 21 மாதக் குழந்தை என நினைத்துப் பார்க்கவும் அஞ்சுகிற கொடூரங்கள் இந்தியாவில் நடந்திருக்கின்றன.

இவற்றின் தொடர்ச்சியாக சிம்லாவில் பள்ளி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு சமீபத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்.

இவை அனைத்தையும் செய்தியாகப் படித்துவிட்டுக் கடந்துவிடக் கூடிய அளவில்தான் நாம் இருக்கிறோம். காரணம் இவையெல்லாம் எங்கோ, யாருக்கோ நடந்தவைதானே.

என்ன செய்கிறது அரசு?

பசுக்களின் பாதுகாப்பையே தன் முக்கியக் கடமையாக நினைத்துச் செயல்பட்டுவரும் அரசாங்கத்துக்குப் பெண்களின் பாதுகாப்பு இரண்டாம்பட்சமாகக்கூட தெரியவில்லை என்பதைத்தான் அடுத்தடுத்து நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்கள் உணர்த்துகின்றன. இறைச்சிக்காகப் பசுவைக் கொல்வதைத் தேச விரோத செயலாகக் கருதுகிறவர்கள், பெண்கள் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிச் சிதைக்கப்படுகிறபோது எங்கே போகிறார்கள்? அதுவும் கொல்லப்பட்ட பெண் தாழ்த்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்றால், அவருக்கு நீதி கேட்டுக் குரல் எழுப்புகிறவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பெண்களுக்கென்றே பிரத்யேகச் சட்டங்கள் இருக்கின்றனவே என்று கேட்கலாம். ஆனால், அந்தச் சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும் ஏன் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் குறையவில்லை? சட்டங்களைவிட அவற்றில் மலிந்திருக்கிற ஓட்டைகள் குற்றவாளிகளுக்குச் சாதகமாகவும் பெண்களுக்குப் பாதகமாகவும் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

சட்டம் நமக்குத் துணை நிற்கும் என்ற உறுதியை அரசாங்கம் பெண்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறதா? நிர்பயா வழக்குக்குப் பிறகு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, பாலியல் வன்முறை குற்றங்களில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், நீதி கிடைப்பதற்குள் வாழ்நாளே முடிந்துவிடுமோ என்கிற அளவுக்கு மெதுவாகத்தான் பல வழக்குகள் நடத்தப்படுகின்றன.

நமக்கும் பொறுப்பு உண்டு

எல்லாம் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்று நாம் ஒதுங்கிக்கொள்ள முடியாது. தனிமனித ஒழுக்கம் சீர்குலைகிற இடத்தில்தான் சட்டத்தின் உதவி தேவைப்படுகிறது. தனிமனித ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பதில் வீடும் சமூகமும் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றன. வீட்டுக்குள் காட்டப்படுகிற பாலினப் பாகுபாடுதான் அனைத்துக்கும் மூல காரணமாக இருக்கிறது. ஆணைப் போற்றி வளர்க்கிற பெற்றோர், பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டியவள் என்கிற நஞ்சையும் ஊட்டி வளர்க்கிறார்கள். அதனால்தான் பெரும்பாலான ஆண்கள், பெண்களைச் சக உயிராக நடத்துவதில்லை. ஆளப் பிறந்தவன் ஆண், அவனுக்கு அடங்கி நடக்க வேண்டியவள் பெண் என திரும்பத் திரும்பப் போதித்து வளர்க்கப்படும் ஆண்களால்தான் இந்தச் சமூகம் நிறைந்திருக்கிறது.

இதெல்லாம் ஒரு விஷயமா என்று நாம் புறக்கணித்துவிட்டுக் கடந்துவிடலாம். ஆனால் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகிற வன்முறையின் ஆணிவேர் இந்தப் பாகுபாடுதான். அதனால்தான் தன்னைப் புறக்கணிக்கிற பெண்ணை, தன்னைவிட முன்னேறிச் செல்கிற பெண்ணை ஆணால் இணையாக நடத்த முடிவதில்லை. பெண்ணின் உடல் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம், அவளை வென்றெடுத்துவிட்டதாக நினைத்துக் களிப்புறச் செய்கிறது. கொன்றுவிட்ட பிறகும் அந்த உடலைச் சிதைப்பதன் மூலம் பெண் மீதான வன்மத்துக்கு வடிகால் தேடிக்கொள்ளச் செய்கிறது.

தேவை தனிமனித ஒழுக்கம்

பொதுவெளியில் தங்களை ஒழுக்கசீலராகக் காட்டிக்கொள்ளும் பலரும், தனிமையில் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தங்கள் மன வக்கிரங்களுக்குக் கைக்கு அகப்படுகிற பெண்ணைப் பயன்படுத்திக்கொள்ளும் மன நோயாளிகளாகவே இருக்கிறார்கள். இந்த உலகமே வியந்து பார்க்கிற, பெண்களைத் தாயாக மதிக்கிற, திருமண உறவு என்கிற புனித பந்தத்தைக் கொண்ட நாடு என்று சொல்லிக்கொள்கிற நம் நாட்டில்தான், பெண்கள் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். நீதி கேட்கவும் திராணியற்று செத்து மடிகிறார்கள்.

தனிமனித ஒழுக்கம், பெண்களை மதிக்கும் பண்பு ஆகியவற்றை முன்னிறுத்தாத சமூகத்தில் இருந்துகொண்டு பண்பாடு, பாரம்பரியம் குறித்து வாய்கிழியப் பேசி என்ன பயன்? எங்கிருந்தோ ஒரு மீட்பர் வருவார் என்று பெண்கள் காத்திருக்கத் தேவையில்லை. தற்காப்பே பெண் பாதுகாப்பு என்பதைச் செயல்படுத்த வேண்டும். வெளியே சொன்னால் அவமானம் என்ற கற்பிதத்தை உடைத்து, தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்குத் துணிந்து நின்று போராட வேண்டும். அப்படிப் போராடுகிற பெண்களுக்குப் பக்க பலமாக நிற்பதோடு, அப்படியொரு போராட்டமே தேவையில்லாத சூழலை ஏற்படுத்தித் தருவதுதான் ஆண் மகன் என்பதற்கான அடையாளம் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x