Last Updated : 29 Jan, 2017 01:03 PM

 

Published : 29 Jan 2017 01:03 PM
Last Updated : 29 Jan 2017 01:03 PM

பெண் தடம்: உத்வேகம் தந்த பெண் ஆளுமைகள்

பெண் தடம் – இந்தியாவின் நெடிய வரலாற்றில் பரவலாக அறியப்படாத பண்டைய பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்துவதே இந்தக் குறுந்தொடரின் நோக்கம். தத்துவ மேதை கார்கி வாசக்னவி, டெல்லியின் முதல் பெண் ஆட்சியாளர் ரஸியா சுல்தானா, போர்த்துக்கீசியர்களை எதிர்த்துப் போரிட்ட துளு நாட்டின் ராணி அப்பக்கா தேவி, கோண்ட் பகுதியின் ராணி துர்காவதி, முகலாய வம்சத்தில் அரியணை ஏறாமலேயே ஆட்சியில் செல்வாக்கு செலுத்திய நூர்ஜஹான், ஷாஜஹானின் மகள் ஜஹனாரா பேகம், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட கிட்டூர் ராணி சென்னம்மா, பஞ்சாப் பேரரசின் ஜிந்தன் கௌர், நாட்டிலேயே முதன்முறையாக இலவச கல்வியை வழங்கிய ‘போபாலின் பேகம்’ கைகுஸ்ரா ஜஹான் உள்ளிட்டோரைப் பற்றி இந்தத் தொடரில் பார்த்தோம்.

இந்தக் குறுந்தொடரின் அடிப்படை நோக்கம் அதிகம் அறியப்படாத பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்துவதும், அவர்களுடைய அறியப்படாத முகத்தை வெளிக்கொணர்வதும்தான். ஏற்கெனவே நன்கு அறியப்பட்ட ஜான்சி ராணி லட்சுமிபாய், அக்க மகாதேவி உள்ளிட்டோரைப் பற்றி இந்தத் தொடரில் பேசவில்லை.

தகர்ந்த மூடநம்பிக்கை

பொது நம்பிக்கைக்கு மாறாக இந்திய வரலாற்றில் தடம் பதித்து, அதேநேரம் அதிகம் அறியப்படாத பெண்களில் பலரும் இஸ்லாமியர்கள். தலைநகர் டெல்லியில் ஆட்சி நடத்திய முதல் பெண், ஓர் இஸ்லாமியர். இலவச கட்டாயக் கல்வியை முதலில் வழங்க வகைசெய்தவரும் ஓர் இஸ்லாமியப் பெண் ஆட்சியாளர்தான். நூர்ஜஹானும் ஜஹனாரா பேகமும் கலைகளைப் போற்றி வளர்த்தவர்கள். தன் குருவுக்கு எதிராகவே தத்துவக் கேள்விகளை முன்வைத்ததற்காக அறியப்பட்டவர் கார்கி வாசக்னவி. அந்நியருக்கு எதிராக அப்பக்கா தேவி, கிட்டூர் சென்னம்மா, ஜிந்தன் கௌர் ஆகியோர் வீரத்துடன் போராடியிருக்கிறார்கள்.

இப்படி இந்தத் தொடரில் பேசப்பட்ட எல்லா பெண்களும் பெண்களின் மேம்பாட்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வகைகளில் பங்களித்தவர்கள், தங்கள் காலத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர்கள். அதேநேரம், இந்திய வரலாற்றில் தடம் பதித்த முக்கியப் பெண்கள் அனைவரும் இந்தக் குறுந்தொடரில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

வரலாற்று ரீதியிலான ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்தப் பெண் ஆளுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். பல பெண்களைப் பற்றி நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், பண்பாட்டு அடையாளங்கள் இருந்தபோதிலும், வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டே அவர்களுடைய ஆளுமை முன்வைக்கப்பட்டது. அந்த ஆதாரங்களைத் தேடிக் கண்டடைவது அவ்வளவு எளிமையாக இருக்கவில்லை.

புதிய பாதை

இந்தத் தொடர் வெளியான காலத்தில் சிவகங்கைச் சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார்தான் நாட்டிலேயே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முதல் வீராங்கனை என்று குறிப்பிட்டுச் சில வாசகர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். ஆங்கிலேயருக்கு எதிராகத் தற்கொலைப் படைத் தாக்குதலை முதலில் பயன்படுத்திய வீராங்கனை வேலுநாச்சியார் என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். தமிழகம் நன்கு அறிந்தவர் என்பதால் விடுதலைப் போராட்டத்தில் போர் புரிந்த ராணி மங்கம்மாளைப் பற்றியும் பேசவில்லை.

நம்மிடையே இருந்த வீராங்கனைகள் குறித்து விரிவாக எழுத வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாம் முன்வைக்கும் வரலாறு ஆதாரபூர்வமாக இருப்பதும் அதே அளவு முக்கியமாகிறது. வரலாற்று ஆசிரியர்களின் ஆதார நூல்கள் அல்லது வெளிநாட்டவரின் குறிப்புகள் போன்றவை இருக்கும்பட்சத்தில், வரலாற்றைத் திட்டவட்டமாக முன்வைத்துப் பேசுவதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும் வாய்ப்பாக அமையும்.

நம் சமூகத்தில் பொதுவாகவே வரலாற்றுக்குக் குறைவான முக்கியத்துவமே தரப்படுகிறது. மனித சமூகம் படித்த பாடங்கள் அடிக்கடி திரும்பிப் பார்க்கப்படுவதில்லை. அதிலும் பெண்களுடைய வரலாறு, புற உலகில் சாதித்த பெண்களின் வரலாறு போன்றவை பேசப்படுவதில்லை. வரலாற்றில் தங்களுக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பெண்கள் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள், தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கான சில வெளிச்சப் புள்ளிகளாக விளங்கிய சிலர் மட்டுமே இந்தத் தொடரில் அலசப்பட்டார்கள். அவர்கள் தரும் உத்வேகம் நிச்சயமாக நமக்குப் புதிய பாதையைச் சமைத்துக் கொடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x