Last Updated : 04 Sep, 2016 03:58 PM

 

Published : 04 Sep 2016 03:58 PM
Last Updated : 04 Sep 2016 03:58 PM

பெண்ணியம் பேசிய ரஜினிகாந்த்

பர்ஹான் அக்தார், சானியா மிர்ஸா, எம்மா வாட்சன், நிகோல் கிட்மேன், அனா ஹாத்வே, தாய்லாந்து இளவரசி பஜ்ராகிட்டியாபா மஹிடோல் என பல்வேறு பிரபலங்களின் வரிசையில் தற்போது இணைந்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ். பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றத்துக்கான ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்துள்ள இந்தப் புதிய பொறுப்பு பொதுவெளியில் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. அதே நேரம் தன் மகளின் புதிய பொறுப்பினால் நடிகர் ரஜினிகாந்த அடைந்துள்ள பெருமிதம், வேறொரு பார்வையை முன்வைக்கிறது.

அது ராஜாதிராஜா படத்தின் இறுதிக்கட்ட காட்சி. மணமேடையில் ரஜினி நதியாவுக்குத் தாலி கட்டியவுடன் விணுசக்கரவர்த்தி ‘பெண் குழந்தையா பிறந்துட்டா?' என ஒரு கேள்வி கேட்பார். அதற்கு ரஜினியின் ரியாக்‌ஷன்… ‘த்த்தூ'.

‘பெண் குழந்தை வேண்டாம்' என்ற தொணியில் அமைந்த அந்தக் காட்சி ரஜினியின் சுய கருத்தாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு சூப்பர் ஸ்டாராக அவர் எதை முன்னெடுத்துச் சொன்னாலும் அது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

பிரபலம் சொன்னால் எடுபடும் என்ற இதே காரணத்துக்காகத்தான் ஐஸ்வர்யாவும் ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண் குழந்தை குறித்த ரஜினியின் அலட்சியமான மனோபாவம் காட்சிப்படுத்தப்பட்டாலும் அப்போது பெரிதாக விமர்சனங்கள் எழவில்லை. ஆனால், அண்மைக் காலங்களில் ரஜினிகாந்த் படங்களில் பாலின பாகுபாடு சார்ந்த வசனங்கள் கவனமாக தவிர்க்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ், ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் செய்திக்கு ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

“ஐஸ்வர்யா ஐ.நா. உடன் இணைந்து, பெண்களுக்கான சம உரிமைக்காகப் பணியாற்றுவது எங்களுக்குப் பெருமைக்குரிய விஷயமாகும். பெண்களுக்கான சம உரிமைக்காக அவர் செய்துள்ள பணிகளைப் பாராட்டுகிறேன். அவரது பணிகளுக்கு ஆதரவாக இருப்பேன். ஒரு தந்தையாக, உலக நாடுகளுக்கான பெண்கள் அமைப்பின் இந்தியத் தூதுவராக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.

அவர் பெருமைக்குரிய இந்தப் பணியில் இருந்து, பெண்களுக்கான சம உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற இருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சி.

சம உரிமை என்பது, பெண்களுக்கான ஒரு பிரச்சினை மட்டுமல்ல, அவர்களின் சம உரிமைக்காக நாம் அனைவரும் போராட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நிறுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு வீடுகளிலும், அவர்கள் வேலை செய்யும் இடங்களிலும் சம உரிமை கிடைக்க வேண்டும்” என்ற இந்த அறிக்கை, ஒரு தந்தையாக ரஜினிகாந்த் அடைந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு. சம உரிமை என்பது, பெண்களுக்கான ஒரு பிரச்சினை மட்டுமல்ல என ரஜினிகாந்த் கூறியிருப்பது கவனிக்கப்பட வேண்டிய கருத்து.

‘பொண்ணுன்னா அடக்கமா இருக்கணும், இப்படி பஜாரித்தனம் பண்ணக் கூடாது’ என்று தன் படங்களில் பெண்களை மட்டம்தட்டியோ அல்லது பெண்ணுரிமைக்கு எதிராகவோ பேசி நடித்திருக்கும் ரஜினிகாந்த், இன்று தன் மகளின் புதிய பதவி தந்த பெருமிதத்தால் பெண்ணியம் குறித்துப் பேசியிருப்பது நல்லதொரு மாற்றத்துக்கான தொடக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x