Published : 26 Mar 2017 11:58 AM
Last Updated : 26 Mar 2017 11:58 AM
நாம் உண்ணும் உணவு தரமானதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டியது அரசின் கடமை. பாதுகாப்பான உணவை மக்களுக்கு அளிப்பதைத் தன்னுடைய கடமையாகச் செய்துவருகிறார் கேரள மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அனுபமா.
இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் நான்காம் இடத்தைப் பிடித்தவர். இவர் பதவியேற்ற 15 மாதங்களுக்குள் சுமார் 6,000 கலப்பட உணவுப் பொருட்களைக் கண்டறிந்துள்ளார். 750 நபர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளார். இப்போது கேரளாவில் அனுபமாவின் பெயரைக் கேட்டாலே உணவுக் கலப்படம் செய்வோர் தலைதெறிக்க ஓடுகின்றனர். தான் ஆணையராக இருந்தாலும் களத்துக்குச் செல்லத் தயங்குவதில்லை அனுபமா.
கேரளாவில் பல்வேறு சந்தைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். ஆய்வில் காய்கறிகள், பழங்களில் கிட்டத்தட்ட 300 சதவீதத்துக்குப் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகம். இவை மனிதர்களுக்குப் பெரும் ஆபத்தை உண்டாக்குபவை.
இந்த விஷயம்தான் கலப்பட உணவுப் பொருட்களைக் கண்டறிவதில் இன்னும் முனைப்புடன் அனுபமாவைச் செயல்படவைத்தது. மக்கள் மத்தியில் அரசு நிர்வாகத்தின் மீது நன்மதிப்பையும் உருவாக்கியது.
வீட்டிலேயே தோட்டம் அமைக்கலாம் என்ற இவரது யோசனை, விழிப்புணர்வுப் பிரசாரமாகக் கேரளாவில் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன் பலனாகக் கேரள மக்கள் தற்போது தங்களது வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்க ஆரம்பித்துவிட்டனர். கேரள இதற்கு அரசு ஊக்கத் தொகை வழங்கிவருகிறது. கேரளாவுக்கு 70% காய்கறிகள் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் இருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன. வீடுகளிலேயே தோட்டம் அமைத்துவருவதால் வெளிமாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வரும் காய்கறி இறக்குமதியின் அளவு சற்றுக் குறைந்துள்ளது.
“மக்களுக்கு ஆரோக் கியமாக உணவளிப்பது இன்றைய தேவை. என்னுடைய வெற்றிக்குப் பொதுமக்கள்தான் காரணம். அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் பல விஷயங்களை என்னால் செயல்படுத்தியிருக்க முடியாது” என்கிறார் அனுபமா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT