Published : 30 Apr 2017 03:49 PM
Last Updated : 30 Apr 2017 03:49 PM

போகிற போக்கில்: நடனமாடும் பொம்மைகள்!

கணினி அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றிய கீதா குணாவுக்கு, பொம்மை தயாரிப்பில் பெரிய அளவில் இறங்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு களத்தில் இறங்கி, இன்று வெற்றிகரமான தொழிலதிபராக வலம்வருகிறார்.

திருச்சியைச் சேர்ந்த கீதா, பி.டெக், எம்.இ. படித்தவர். சிறு வயதிலிருந்தே சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்று கனவு. அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது பாரம்பரியக் கைவினைப் பொருட்களைத் தயாரித்து, விற்கும் எண்ணம் உருவானது. புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று கைவினைப் பொருட்கள் தயாரிப்பு குறித்து அறிந்துகொண்டார். தனியாகத் தொழில் செய்யும் நம்பிக்கை வந்தவுடன் பேராசிரியர் வேலையிலிருந்து விலகினார்.

“சிறிய அளவில் தலையாட்டி பொம்மைகள் தயாரிப்பில் இறங்கினேன். தொழில் நல்லபடியாக நடந்தது. தற்போது தலையாட்டி பொம்மை, நாட்டிய மங்கை, நடனமாடும் பொம்மை, கதகளி பொம்மை, குதிரை பொம்மை, ஜோடி பொம்மைகள், சுவர் பொம்மை என்று தயாரிப்புகளை அதிகரித்து, ஒன்பது வகையான பொம்மைகளை விற்பனை செய்துவருகிறேன். பிளாஸ்டர் ஆஃப் பாரீஸில் தயாரிக்கப்படும் இந்தப் பொம்மைகளை அழகுபடுத்த 48 விதமான வண்ணங்களைப் பயன்படுத்துகிறோம். 55 பெண்களுக்கு வேலை கொடுத்திருக்கிறேன். இவர்கள் அனைவரும் முறையாகப் பயிற்சி பெற்றவர்கள். தினமும் நான்கு ரகங்களில் 100 பொம்மைகளைத் தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்” என்று கீதா சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் விற்பனையை விரிவுபடுத்தி யிருக்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறார். 200 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

“பல்வேறு கைவினைக் கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்களைச் சேகரித்து, ஓரிடத்தில் விற்பனை செய்ய திருச்சியில் பிரத்யேகமாக ஒரு விற்பனையகத்தைத் தொடங்கவிருக்கிறோம்.

இங்கே குறைந்த விலையில் கலைப் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதைப் பல ஊர்களுக்கு விரிவுபடுத்தும் எண்ணமும் உள்ளது” என்று கனவை விரிவாக்கிக்கொண்டே செல்கிறார் கீதா குணா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x