Published : 18 Jun 2017 11:52 AM
Last Updated : 18 Jun 2017 11:52 AM
மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவை தீதி (அக்கா ) என்றே அழைக்கிறார்கள்.
கார்கூட இல்லாத, காலில் ரப்பர் செருப்பு மட்டுமே அணிகிற எளிமையாளர். வெளிறிய அல்லது கண்ணை உறுத்தாத நிறங்கள் கொண்ட உடைகளை மட்டுமே விரும்பி அணிபவர்.
இத்தகைய எளிமை, இடதுசாரிகளைத் தோற்கடித்த பிறகு இன்னும் கூடுதலான புகழை அவருக்குத் தேடித் தந்தது. உலகப் பெண் சாதனையாளரில் ஒருவராக அமெரிக்கப் பத்திரிகை அவரைத் தேர்வு செய்திருந்தது.
பல மதங்கள், பல மொழிகள், பல்லாயிரம் சாதிகள், திசைக்கொரு கடவுளர்கள் நிரம்பிய இந்தியாவில் 34 ஆண்டுகள் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட்களை அந்த மாநிலத்தின் அதிகாரத்திலிருந்து வெளியேற்றியது அமெரிக்கப் பத்திரிகையின் பார்வையில் ஒரு சாதனையாகத் தெரிந்திருக்கலாம்.
இளம் வயதில் அரசியலுக்கு வந்த மம்தா, காங்கிரஸ், பா.ஜ.க., ஐ.மு. ஆட்சிகளின்போது நான்கு முறை மத்திய அமைச்சராகப் பொறுப்பில் இருந்திருக்கிறார். மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் தொடர்ச்சியான தோல்வி இவரது அதிரடியான அரசியலுக்குப் பெரும் சவாலாகவே இருந்தது. இதை எதிர்கொள்ளும் விதமாகவே காங்கிரஸை உடைத்து அதன் இன்னொரு துண்டை திரிணாமுல் காங்கிரஸாக மாற்றினார்.
அரசியல் கூர்மை
கம்யூனிச எதிர்ப்பில் அவருக்கு இருந்த அதிதீவிரம் சாதாரணமானதல்ல. அவர் ஒரு மோசமான கலகக்காரராக கம்யூனிஸ்ட்களுக்கும் சிறந்த போராளியாக முதலாளித்துவவாதிகளுக்கும் தெரிந்ததில் வியப்பில்லை.
தீதி அரசியல் கூர்மைமிக்கவர். சிங்கூர் விவசாயிகளின் போராட்டத்தைக் கூர் தீட்டி யானையின் கண்களில் பாய்ச்சும் நுட்பத்தைப் பெற்றிருந்தார். அதிகபட்சமாக 12 லட்சம் ஏக்கர் நிலங்களை நிலச்சீர்திருத்த சட்டத்தின் மூலமாக இந்தியாவில் ஏழைகளுக்கு வழங்கிய ஒரே அரசு மேற்கு வங்க இடதுமுன்னணி அரசுதான். இடதுசாரி அமைப்புகளின் வேராக விவசாயிகளே இருந்தார்கள்.
தருணம் பார்த்துக் காத்திருந்த கொக்கு தனக்கான இரையை மிக லாவகமாகத் தன் அலகால் கொத்திச் சென்றதைப் போல் பா.ஜ.க.விலிருந்து மாவோயிஸ்ட்கள் வரை எதிரும் புதிருமான சக்திகளை ஒன்றிணைத்து அதற்கான வியூகங்களை உருவாக்கி மம்தா வெற்றி கண்டார்.
என்னதான் தொழில்வளர்ச்சி என நியாயப்படுத்தினாலும் விவசாயிகளின் உணர்வைக் கூடுதலான அக்கறையோடு அணுகியிருக்க வேண்டிய இடதுமுன்னணி அரசு அந்த நுட்பமான இடத்தைக் கவனிக்கத் தவறி அடி சறுக்கிய யானையாக விழ நேர்ந்தது.
தேபாகா போன்ற வீரம் செறிந்த நிலமீட்பு போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் விவசாயிகளுக்கெதிரான நிலைப்பாட்டை எடுக்கமாட்டார்கள் என்பதை கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அறிவார்கள். ஆனாலும் சிங்கூர், நந்திகிராம் சம்பவங்கள் இடதுசாரி வரலாற்றில் கறுப்புப் பக்கங்களாக அமைந்துவிட்டன என்றே பலரும் நினைவுகூர்கிறார்கள்.
விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாடு
சிங்கூர் நிலங்களை உயர் நீதிமன்றம் விவசாயிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, “இனி நான் நிம்மதியாகச் சாவேன்” என்று சொன்ன மம்தா மறு புறத்தில் முந்தைய இடது முன்னணி அரசு வழங்கிய 12 லட்சம் ஏக்கர் நிலங்களைப் பறிமுதல் செய்வதில் தீவிரம் காட்டிவருகிறார். இதை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது சமீபத்தில் கொடூரத் தாக்குதல் கட்டவிழ்த்து விட்டதைக் காட்சி ஊடகங்களும் நாளேடுகளும் எடுத்துக்காட்டின.
மாற்று அரசியல் அமைப்பைச் சேர்ந்த (குறிப்பாக இடதுசாரி அமைப்புகளை) பெண்களின் வீடு தேடிச் சென்று வெள்ளைப் புடவை வழங்கி, “உன்னை விதவையாக்குவோம்” என மிரட்டுகிறது திரிணாமுல். 1970-களில் காங்கிரஸ் எப்படியெல்லாம் அடக்குமுறையில் ஈடுபட்டதோ அதே அடக்குமுறையை இம்மியளவும் பிசகாமல் பின்பற்றிவருகிறது திரிணாமுல் பெண்ணரசு என்ற குற்றச்சாட்டும் வளர்ந்துவருகிறது.
ஆண் -பெண் பாகுபாடெல்லாம் ஊழலுக்கு நிச்சயமாக இல்லை. 20 ஆயிரம் கோடி மக்கள் பணத்தைச் சுருட்டிய சாரதா மற்றும் நாரதா மெகா ஊழலில் மம்தாவுக்கும் தொடர்பிருப்பதாக, கைதான அவரது கட்சி எம்.பி.யே சாட்சியமளித்துள்ளார்.
ஊழலில் மாட்டிக்கொண்டிருக்கும் மம்தா, பா.ஜ.க.வைத் தீவிரமாக எதிர்ப்பது போல பாவனை செய்தாலும், அங்கு நிகழும் மதக்கலவரச் சம்பவங்களையோ பெண்கள்மீது அதிகரித்துவரும் வன்முறைகளையோ தடுத்து நிறுத்த முடியவில்லை. பாலியல் வன்முறைக்குள்ளான ஒரு பெண் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, “எனது ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவே இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன” என்ற அவரது அலட்சியமான பதிலைக் கேட்டுப் பத்திரிகையாளர்களே அதிர்ந்துபோனார்கள்.
குழந்தை மற்றும் பெண் கடத்தல் குற்றங்களில் இந்தியாவில் 2-வது மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறதே என்ற அடுத்த கேள்வியை முன்வைக்க விரும்பவில்லை. ஏனெனில், அதிகாரத்தில் இருப்பவர்கள் எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ள விரும்புவதில்லை.
இது ‘பெண்ணதிகார’த்துக்கும் பொருந்தும்தானே!
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT