Published : 14 Aug 2016 04:06 PM
Last Updated : 14 Aug 2016 04:06 PM
பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறிவருகின்றனர் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே நேரத்தில்தான் பெண்களுக்கு எதிரான சமூகக் குற்றங்களும் அதிகரித்துவருகின்றன. படித்த பெண்கள்கூட மன ரீதியிலான சிக்கல்களைக் கையாள முடியாமல் தவிக்கின்றனர். கல்லூரி மாணவிகளின் தொடர்ச்சியான தற்கொலைகள் இதைத்தான் சொல்கின்றன.
வாழ்க்கை குறித்த தெளிவையும் புரிதலையும் ஏற்படுத்தத் தவறுகிறது நம் கல்வி முறை என்பதையும் இதுபோன்ற மரணங்கள் நிரூபிக்கின்றன. உயர் பதவியில் இருக்கும் பெண்கள்கூட, ‘என்ன இருந்தாலும் நான் ஒரு பெண்தானே’ என்ற நினைப்புடனேயே செயல்படுவதையும் பார்க்க முடிகிறது. மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறமையோ, சூழ்நிலையைக் கையாளும் நுட்பமோ பலருக்கும் தெரிவதில்லை. காலங்காலமாக இருந்துவரும் மனநிலையால் பெண்களிடம் ஆக்கபூர்வமான திறமைகள் இருந்தும், அவற்றை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர்.
“உலகமயமாக்கல் நம்மை ஆக்கிரமிக்கும் இந்தக் காலத்தில் பெண்கள் இப்படியே இருப்பது சரியல்ல” என்கிறார் மனநல ஆலோசகர் ராஜ மீனாட்சி.
குழந்தைகள் முன்னுக்கு வர வேண்டும் என ஆசைப்படும் அம்மாக்கள்கூட பெண்கள் செய்திகள் பார்க்க அனுமதிப்பதில்லை. தொலைக்காட்சி மூலமாகத் தெரிந்துகொண்ட எதாவது ஒரு உலக விஷயத்தைப் பேசுபவர்கள்கூட, கூட்டங்களில் பங்கேற்கும் தங்கள் மகளிடம், “ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை” என்று மறுக்கும் போக்கும் காணப்படுகிறது. அந்தக் காலத்துடன் ஒப்பிடும்போது பெண்கள் ஓரளவுக்குத் தற்சார்புடன் இருக்கிறார்கள் என்றாலும் ஆண் குழந்தைக்கு இணையான உரிமைகள் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை.
உலக அறிவும் அவசியம்
ஆண்டுதோறும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. ஆனாலும் பெண்களின் படிப்பறிவு சதவீதம், ஆண்களைவிடக் குறைவுதான். பெண்களின் அறிவுத் தேடல் ஏட்டுக்கல்வி யோடு நின்றுவிடுகிறது. ஆண் குழந்தைகளைப் போல ஒரு விஷயத்தைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் சூழல் பெண் குழந்தைகளுக்கு உருவாக்கிக் கொடுக்கபடுவதில்லை.
“அன்றாட நிகழ்வுகளில் அவர்களை நாம் கவனம் செலுத்த விடுவதில்லை, அவர்களும் அதில் அக்கறை காட்டுவதில்லை” என்கிறார் ராஜ மீனாட்சி.
“சமூக நிகழ்வுகளின் மீது சொந்தக் கருத்தை உருவாக்கிக்கொள்வதுடன் அவற்றை நண்பர்களுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் பேசுவதன் மூலம் பெண்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். இக்கட்டான சூழ்நிலைகளை நம்மால் கடந்துவர முடியாது என்கிற பய உணர்விலிருந்து அது அவர்களை வெளியே கொண்டுவரும். காதலனால் மறுதலிக்கபட்ட பெண், தான் முற்றாக கைவிடப்பட்டதாக உணர்கிறாள். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் தீர்வுகளை நோக்கிச் செல்வதற்கான, வழிமுறைகளைக் கண்டறிவதற்கான மனோதிடம், தினசரி நிகழ்வுகளைக் கவனிப்பதிலிருந்துதான் உருவாகும்” என்றும் விளக்குகிறார் அவர்.
உணர்ச்சிவசப்படுவது தீர்வல்ல
சூழல்களின் மீதான பய உணர்ச்சி காரணமாகவும் அவர்களால் சரியான முடிவு எடுக்க முடிவதில்லை என்கிறார் ராஜ மீனாட்சி.
“உலக அளவில் பல்வேறு சம்பவங்களில் கவனத்தைச் செலுத்தும்போது அவள் இயல்பாகவே தனது பிரச்சினைகளை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அதிலிருந்து தன்னம்பிக்கை உருவாகும்” என்கிறார்.
பொதுவாக நாட்டு நடப்புகளைப் பெண்கள் பேசத் தொடங்கினாலே ஆண்களுடன் போட்டிபோடுபவர்கள், தாங்கள் சொல்வதுதான் சரி என்று வாதிடுபவர்கள் என்கிற பார்வைதான் உள்ளது. இந்த பார்வையை மாற்றும் முயற்சியையும் நாம்தான் தொடங்க வேண்டும். அன்றாட நிகழ்வுகளைக் கவனிப்பதன் மூலம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், பெண்களை மையமாக வைத்து உருவாகும் சமூக, அரசியல், பொருளாதாரக் கருத்துகள், நடைமுறைகளைத் தெரிந்துகொள்ள முடியும்.
உணர்ச்சிவசப்படுவதைவிட, நிதானத்துடன் கையாண்டால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணலாம் என்கிறார் ராஜ மீனாட்சி. “யாரோ ஒருவன் தனது மார்ஃபிங் படத்தை வெளியிடுகிறான் என்பது நமக்குத் தொடர்பே இல்லாத ஒரு செயல். இதற்கு எதிர்க்கும் மனநிலையை உருவாக்கிக்கொள்ளாமல், அவற்றை எப்படி நீக்குவது என்கிற கோணத்தில் அணுக வேண்டும். அதை விட்டுவிட்டு மொத்த வாழ்க்கையுமே முடங்கிப் போய்விட்டதாக நினைக்கும் அளவுக்குத்தான் இந்தக் கல்விமுறை இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்துப் பல திசைகளிலிருந்தும் ஆதரவு குரல்கள் வலுத்துவருகின்றன. பல அமைப்புகளும், தனிநபர்களும் முன் நிற்கிறார்கள். அரசும் பல வடிவங்களில் சட்டங்களை மேற்கொண்டுவருகிறது. சட்ட உதவிகளைச் செய்கிறது . இந்த முன்னேறிய வடிவங்கள் எல்லாம் அவர்கள் சமூக நடைமுறைகளைத் தெரிந்துகொள்வதிலிருந்துதான் கிடைக்கும். பெண்கள் தங்களைச் சமகால நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொள்ள அனுமதிக்காமல், தான் பாதிக்கப்பட்டதாக உணரும் நிலை மிக மோசமான முடிவுகளுக்கே வழி வகுக்கும்.
நமக்குள்ளேயே முட்டுக்கட்டையாக இருக்கும் சிலவற்றைச் சரிசெய்தால்தான் சின்னச் சின்ன மனக் குழப்பங்களுக்குக் கூட சிக்கலான தீர்வுகளை நோக்கிச் செல்ல மாட்டோம். நமக்கு முன் ஆயிரம் தீர்வுகள் உள்ளன” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ராஜ மீனாட்சி.
படம்: எல். சீனிவாசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT