Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM
கதைகளின் ராணி' என சக எழுத்தாளர்களால் வர்ணிக்கப்பட்டவர் வை.மு. கோதைநாயகி. நாடகசிரியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், கர்நாடக இசைப் பாடகி, சுதந்திரப் போராட்டத் தியாகி, சமூக ஆர்வலர் என பன்முகத்தவராக விளங்கிய வை.மு. கோதைநாயகி, 1901ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று காஞ்சிபுரம், நீர்வளூர் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் என்.எஸ். வெங்கடாச்சாரி - பட்டம்மாள்.
கோதைக்கு ஒரு வயதாகும்போதே தாய் இறந்துவிட்டார். பால்ய விவாகம் வழக்கத்தில் இருந்த காலகட்டம் அது. 1907ஆம் ஆண்டு கோதைக்கு ஐந்து வயதானபோது, ஒன்பது வயதான வை.மு. பார்த்தசாரதிக்கு மணமுடித்து வைக்கப்பட்டார்.
கோதை படிக்க வேண்டுமென விருப்பப்பட்டார் பார்த்தசாரதி. மாமியாரிடமிருந்து தமிழையும், தெலுங்கையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் கோதை. 1924 முதல் தெருக்குழந்தைகளை அழைத்துவந்து அவர்களுக்குக் கதை சொல்லி மகிழ்ந்த கோதை, திருவாய்மொழி பாசுரங்களைப் தொடந்து பாடுவதன் மூலம் தமிழ்மொழிச் செறிவை வளர்த்துக்கொண்டார்.
குழந்தைகளுக்குப் பழைய புராணக் கதைகள் அனைத்தும் சொல்லித் தீர்ந்துபோன ஒரு கட்டத்தில், சமூகம் சார்ந்த புதிய கற்பனைக் கதைகளை அவர் சொல்ல ஆரம்பித்திருந்தார். குழந்தைகளை மட்டுமல்லாது வீட்டுப் பெரியவர்களையும் அவரின் கதை சொல்லும் பாங்கு வெகுவாக ஈர்த்திருந்தது.
கோதையின் கதை சொல்லும் திறனையும், கீர்த்தனைகளை இசைப்பதில் அவருக்கிருந்த லயிப்பையும் கண்டு வியந்த பார்த்தசாரதி, அக்காலத்தில் பிரபல நாடக நிறுவனங்களாக இயங்கிய அன்னையர் நாடக கம்பெனி, மதுரை பாய்ஸ் கம்பெனி, தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் கம்பெனி முதலிய நாடக கம்பெனிகள் அரங்கேற்றிய பல நாடகங்களைப் பார்க்க கோதையை அழைத்துச் சென்றார். அதுவே கோதையின் படைப்பிலக்கியத்திற்கு வித்திட்டிருக்கிறது.
தமிழில் சரளமாக எழுதப் போதிய பயிற்சி இல்லாத காரணத்தால், தோழி பட்டம்மாளிடம் தான் சொல்பவற்றை அப்படியே எழுதித் தரச்சொன்னார். அப்படி அவர் படைத்த முதல் நாடகத்தின் பெயர் 'இந்திர மோகனா'. இந்நூலை 1924ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி நோபிள் பிரஸ் வெளியிட்டது.
பிரபல இதழ்களான தி இந்து, சுதேசமித்திரன், நியூ இந்தியா வெளியிட்ட விமர்சனங்கள் இந்நூல் பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்கான காரணங்களாக அமைந்தன.
இந்த வரவேற்பு கோதையின் எழுத்தார்வத்தை அதிகப்படுத்தியது. பட்டம்மாளிடமே எழுதுவதற்கும், படிப்பதற்கும் கற்றுக்கொண்டார். பிறகு 'வைதேகி', 'பத்மசுந்தரம்' ஆகிய நூல்களைப் படைத்தார். இத்தருணத்தில் வடுவூர் துரைசாமி அய்யங்காரிடமிருந்து அழைப்பு வர, தன் கணவரோடு சென்று அவரைச் சந்தித்தார் கோதை. 'மனோரஞ்சனி' என்ற மாத இதழொன்றை அப்போது நடத்திவந்தார் வடுவூரார். படைப்புகளை அவ்விதழில் தொடராக எழுதிப் பின் நூலாகக் கொண்டுவருவது அவர் வழக்கம். இப்பாணியிலேயே கோதையின் நூல்களையும் கொண்டுவர யோசனை கூறினார். இரண்டாண்டுகளாக நடத்தப்பட்டுவந்து நிறுத்தப்பட்டிருந்த 'ஜகன்மோகினி' இதழை வாங்கி நடத்துவது குறித்தும் எடுத்துக் கூற, 'ஜகன்மோகினி' இதழின் பொறுப்பினைக் கோதை எடுத்துக்கொண்டார்.
48 பக்கங்களுடன் அவ்விதழ் 1000 பிரதிகள் அச்சாயிற்று. கோதையின் 'பத்மசுந்தரம்', 'ராதாமணி' நாவல்கள் தொடராக வெளிவந்தன. ஆண்டுதோறும் ஒன்றிரண்டு தனி நாவல்களையும் அவர் எழுதினார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, சுத்தானந்த பாரதி, ராஜாஜி, சோமசுந்தர பாரதி, டி.கே.சி. போன்ற ஆளுமைகளின் படைப்புகளையும் வெளியிட்டார். 48 பக்க இதழை 72 பக்க இதழாக உருமாற்றினார்.
கோதையின் ஐந்து நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. ‘அனாதைப் பெண்’, ‘ராஜமோகன்’, ‘தியாகக்கொடி’ (1937), ‘நளினசேகரம்’ (1942), 'சித்தி' (1968) ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. இதில் 'சித்தி' படத்துக்காக சிறந்த கதாசிரியர் விருதைப் பெற்றார்.
கோதை பல இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். கேட்ட மாத்திரத்திலேயே வசீகரிக்கின்ற குரல் வளம் கொண்டிருந்த கோதையின் ரசிகர்களில் மகாகவி பாரதியாரும் ஒருவர். 'ஆடுவோமே' பாடலைக் கோதை இசைப்பதற்கெனவே அவர் எழுதியதாகவும் கூறப்படுகிறது. கோதை இயற்றிய தனிப் பாடல்களும் கீர்த்தனைகளும் இசைத்தட்டுகளாக வெளிவந்துள்ளன.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னிபெசண்ட் அம்மையார் மூலம் சமூக சேவகி அம்புஜம் அம்மாளின் தொடர்பு ஏற்பட, சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை இணைத்துக்கொண்டார் கோதை. 1925இல் காந்தியையும், கஸ்தூரிபாயையும் சந்தித்து வந்த பிறகு, கதராடைகளையே அணிய ஆரம்பித்தார்.
1931ஆம் ஆண்டு மகாத்மாவின் அழைப்பை ஏற்றுக் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு 6 மாத சிறைத்தண்டனை பெற்றார். 1932இல் லோதி கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார். சிறைவாசத்தின்போது 'சோதனையின் கொடுமை' , 'உத்தம சீலன்' ஆகிய நாவல்களைப் படைத்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 10 ஏக்கர் நிலத்தை காங்கிரஸ் அரசு அவருக்கு வழங்க, அதை வினோபா பாவேயின் பூமி தான இயக்கத்துக்குத் தந்துவிட்டார்.
05-02-1956இல் அவரது ஒரே மகனான வை.மு. சீனிவாசன் உடல்நலக் குறைவால் இயற்கை எய்த, அவரின் பிரிவின் துயர் தாங்காத கோதை படுக்கையில் வீழ்ந்தார். 20-02-1960இல் உயிர் நீத்தார். இவர் மறைவு குறித்து தி இந்து, ஆனந்த விகடன், கல்கி, சுதேசமித்திரன் முதலிய இதழ்கள் தலையங்கம் வெளியிட்டன.
சுமார் 115 நூல்களை எழுதியுள்ள கோதை 1958இல் எழுதிய நாவல் 'கிழக்கு வெளுத்தது'. 'துப்பறியும் ராஜாராம் நாயுடு' மற்றும் 'குளிர்ந்த நெஞ்சம்' ஆகிய நாவல்கள் அவர் எழுதி முற்றுப் பெறாமல் போனவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment