Published : 21 May 2017 12:17 PM
Last Updated : 21 May 2017 12:17 PM
பதினாறு ஆண்டுகளாகத் தொடரும் மாபெரும் சத்தியாகிரகப் போராட்டம் அது. போராட்டப் பந்தலுக்குக் கீழே உள்ள குப்பைகளைச் சுத்தம் செய்து, போராட்டத்திலும் முனைப்புடன் பங்கேற்கிறார் 90 வயது கன்னியம்மாள். தள்ளாத வயதிலும் பல முறை தடியடிகள் வாங்கிச் சிறை சென்றுள்ள இவருக்கு, டெல்லியில் உள்ள ‘சுதேசி ஆந்தலோன்’ அமைப்பு ‘சுதேசாபிமான் புரஸ்கார்’ விருதை அறிவித்துள்ளது.
யார் இந்தக் கன்னியம்மாள்?
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கிராமம் பிளாச்சிமடை. இங்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அந்நிய நாட்டுக் குளிர்பான நிறுவனம் நிலத்தடி நீரைப் பெருமளவு உறிஞ்சியதோடு, விளை நிலங்களில் கழிவுகளை வெளியேற்றியது. இதனால் நிலங்கள் நஞ்சாகின. தோல் நோய், காச நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் பரவின.
அந்தக் குளிர்பான நிறுவனத்தை எதிர்த்து மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆலையை மூட வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆலைக்கு முன்பு காலவரையற்ற சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் பந்தலில் அமர்ந்து இடையறாது செய்த போராட்டங்கள் பல்வேறு வடிவங்களை எடுத்து உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஈர்த்தன.
மேதா பட்கர் உட்பட ஏராளமான சூழலியல் செயல்பாட்டாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு, போராட்டங்களிலும் பங்கேற்றுப் பேசினார்கள். 2004-ம் ஆண்டு குளிர்பான ஆலை மூடப்பட்டடாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தரப்படவில்லை. அதனால் 16 ஆண்டுகளைக் கடந்தும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பாலக்காடு ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் இதற்காக மற்றொரு தொடர் சத்தியாகிரகத்தை இதே போராட்டக் குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.
குளிர்பான நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மயிலம்மா. இவர்தான் ஓர் அமைப்பை உருவாக்கி, குளிர்பான நிறுவனத்துக்கு எதிராகத் தனிநபர் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தவர். பின்னர் அதில் பலரும் பங்கேற்க, பெரும் போராட்டமாக உருவானது. பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மயிலம்மா, தன் போராட்டக் குணத்துக்காக ‘அவுட் லுக்’ இதழின் ஸ்பீக் அவுட் விருதையும் இந்திய அரசின் ஸ்ரீசக்தி விருதையும் பெற்றார். 2007-ம் ஆண்டு நோயால் மறைந்துவிட்டார்.
மயிலம்மாவின் சின்னம்மாதான் இந்தக் கன்னியம்மாள். பிளாச்சிமடையில் உள்ள போராட்டப் பந்தலைச் சுத்தப்படுத்தி, பானையில் தண்ணீர் நிரப்பிவிட்டு, 20 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பாலக்காடு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.
“எங்க போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்கும் வரை நான் ஓய மாட்டேன். ஏன்னா நான் மயிலம்மாவின் சின்னம்மா. குளிர்பான ஆலை வர்றதுக்கு முன்னாடி ஒரு தோட்டத்துல வேலை செஞ்சுட்டிருந்தேன். அந்த முதலாளி மகன் கடன்பட்டு தன் நிலத்தைக் குளிர்பான ஆலைக்கு வித்துட்டார். அது எங்களுக்கு ஆரம்பத்துல தெரியலை. ஆலைக்காரர்களிடம் கேட்டபோது, குடும்பத்துக்கு ஒருத்தருக்கு வேலை கொடுப்போம்னு சொன்னாங்க. பிறகு பத்தாவது படிச்சிருந்தால்தான் வேலைன்னாங்க. அப்புறம் படிச்சவங்களுக்கும் வேலை தரலை. அதைக்கூடப் பொறுத்துக்கிட்டோம். எங்க சுத்துபத்து ஊர்களில் எல்லாம் விவசாயம் நல்லா இருந்தது. அங்கெல்லாம் தண்ணீர் ரொம்பக் கீழே போயிடுச்சு.
அதை எடுத்து சோறு, குழம்பு பொங்கினா சீக்கிரமே கெட்டுப் போச்சு. எல்லாருக்கும் கை, காலெல்லாம் அரிப்பு. குழந்தை குட்டிகள் வயிறு வீங்கிச் செத்தும் போச்சு. அப்புறம்தான் போராட்டத்துல மயிலம்மா மாதிரி பெண்கள் உட்கார்ந்தோம். ஆலை முன்னாடியே போலீஸை விட்டு அடிச்சாங்க. ஜெயில்லயும் பல முறை தள்ளினாங்க. நாங்க விடலை. வெளியே வந்தால் போராட்டம். உள்ளே இருந்தால் கோஷம்னு உறுதியோட இருந்தோம். அப்போ இருந்து இப்ப வரைக்கும் பந்தலுக்கு நான்தான் முதல்ல வருவேன். ராத்திரி போராட்டத்துல உட்கார்ந்திருந்த ஆண்கள் கிளம்பிடுவாங்க. அப்புறம் அவங்க தூங்கின இடம், சமைச்ச இடத்தையெல்லாம் சுத்தம் செஞ்சு, பகல் சாப்பாட்டுக்குத் தயார் செய்வேன்.
இப்படியேதான் வாழ்க்கை பதினாறு வருஷமா ஓடுது. இழவு, கல்யாணம் எல்லாமே போராட்டத்துக்கு அப்புறம்தான். என் பெரிய மகள் இறந்தாள். அப்புறம் பேரன் இறந்தான். அப்போதுகூட போராட்டக் களத்தில் என் வேலைகளை முடிச்சிட்டுதான் போனேன். அந்த அளவுக்கு இந்தப் போராட்டம் எனக்கு முக்கியம். எங்க மக்களுக்கு நஷ்ட ஈடு முக்கியம்” என்று கம்பீரமாகச் சொல்லும் கன்னியம்மாள், விருது குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
பிளாச்சிமடை போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், “சுதேசி ஆந்தலோன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்துள்ளனர். ஆண்டுதோறும் சூழல் போராளிகளைக் கவுரவிக்கும் விதமாக, ‘சுதேசாபிமான் புரஸ்கார்’ விருதை வழங்கிவருகிறார்கள். இந்த ஆண்டு அந்த விருது கன்னியம்மாளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
முதுமையிலும் பிறருக்காகப் போராடும் கன்னியம்மாளின் தொய்வில்லாத போராட்டத்துக்கு விரைவில் வெற்றி கிடைக்கட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT