Last Updated : 02 Nov, 2014 02:55 PM

 

Published : 02 Nov 2014 02:55 PM
Last Updated : 02 Nov 2014 02:55 PM

மரமேறும் தைரிய ராணிகள்

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் பெண்களின் கரங்கள் தொடாத துறை எதுவும் இல்லை. விண்ணிலும் மண்ணிலும் நிகழ்த்தாத சாதனைகள் ஏதுமில்லை. ஒவ்வொரு கணத்திலும் தாங்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் அமைப்புசாரா தொழில்களில் ஆணுக்கு வழங்கப்படும் கூலி, அதே வேலையைச் செய்யும் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. விதிவிலக்காக, கர்நாடகத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் துணிச்சலாகத் தென்னை மரம் ஏறுகிறார்கள். ஆணுக்கு வழங்கப்படும் அதே கூலியைப் பெண் தொழிலாளர்களும் வாதாடிப் பெற்றிருக்கிறார்கள்!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், படிக்காத கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நோக்கில் தென்னை மரம் ஏறும் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்துக்குத் தொழிலாளர்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக‌ தும்கூர் மாவட்டத்தில் 100 இளம்பெண்களுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி வழங்கப்ப‌ட்டது.

வானுயர்ந்த மரங்களில் பெண்கள் ஏறுவார்களா என சந்தேகம் எழுப்பியவர்களின் புருவங்கள் தற்போது ஆச்சரியத்தில் உயர்ந்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில் 100 தொழிலாளர்கள் 220 தொழிலாளர்களாகப் பெருகி இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பப் பொருளாதாரச் சூழலும் சமூக அந்தஸ்தும் மேம்பட்டிருக்கின்றன. பகுதி நேரத்தில் மரம் ஏறி மாதம் 6000 முதல் 8000 ரூபாய்வரை சம்பாதிக்கிறார்கள்.

வழிகாட்டும் பயிற்சி

“கிராமத்தில் சரியான வேலையும், அதற்குரிய கூலியும் கிடைக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டோம். என் கணவரும் பக்கத்து வீட்டுக்காரரும் தென்னை மரம் ஏறி கைநிறைய சம்பாதிச்சாங்க. பழைய முறைப்படி காலில் கயிறுக் கட்டிக்கொண்டு ஏறாமல், மெஷின் மூலம் ஏறுவதால் ஈஸியாக இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு நாள் வீட்ல இருக்கும்போது அந்த மெஷினை வெச்சி நானே ஏறிப்பார்த்தேன். அவ்வளவு ஒண்ணும் கஷ்டமா இல்லை. அதனால் தென்னை மரம் ஏறும் பயிற்சியில் சேர்ந்தேன்” என்கிறார் அக்கை லட்சுமி.

இவர்களுக்கு வேளாண் விஞ்ஞானிகளும் மரம் ஏறும் தொழிலில் நல்ல அனுபவம் உள்ளவர்களும் ஒரு வாரம் பயிற்சியளிக்கிறார்கள். மரத்தைக் கவ்வி எவ்வாறு எளிதாக ஏறுவது, மர‌ம் ஏறும் கருவியை எப்படிக் கையாள்வது, அறுவடைக்குச் சரியான தேங்காயை எப்படிக் கண்டறிவது, பதமான இளநீரைக் கண்டுபிடிப்பது எப்படி, தேவையில்லாத மட்டைகளை எப்படிக் களையெடுப்பது, தென்னை மரங்களுக்கு எந்தெந்த இயற்கை உரங்களை இடுவது, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்வது, முதலுதவி போன்ற அனைத்து பயிற்சிகளும் இங்கே வழங்கப்படுகின்றன.

“சைக்கிள் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய மரம் ஏறும் கருவியை எங்களுக்கு இலவசமா கொடுத்தாங்க. கிட்டத்தட்ட எட்டரை கிலோ எடையுள்ள இந்தக் கருவி சுமார் 400 கிலோ எடையைத் தாங்கும். இதனால் பெண்களும் தைரியமாக மரம் ஏறி, தேங்காயைப் பறிக்க முடியும். உடல் வலிமை என்பதெல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. 18 வயசுல இருந்து 35 வயசு வரையிலான பெண்கள்தான் மரம் ஏறும் வேலை செய்கிறோம்” என்கிறார் கல்ப மரம் ஏறும் மகளிர் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாகம்மா.

வளமான வருமான‌ம்

பெண்கள் மரம் ஏறித் தேங்காய் பறிப்பதைப் பார்த்துப் பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இவர்களைப் பார்க்கிறவர்கள் எல்லாம் மரம் ஏறுவது அத்தனை எளிதான வேலையா என்று கேட்கிறார்களாம். “வேறு வேலைக்கு போய்க்கொண்டிருந்தவங்ககூட இப்போ எங்களைப் பார்த்து தென்னை மரம் ஏறுகிறார்கள்.

முன்பெல்லாம் 60 ரூபா 80 ரூபா கூலிக்கு ஊர் ஊராகத் திரிஞ்சோம். பிழைப்புத் தேடி பெங்களூருக்குப் போனோம். வாடகை கட்ட முடியாம தவிச்சோம். பிள்ளைகளை படிக்கவைக்க முடியாம அலைஞ்சோம். சரியான சோறும் நிம்மதியான தூக்கமும் இல்லாம கிடந்தோம். வாழ்க்கையே நரகமாக இருந்தது. இப்போ பரவாயில்லை. சொந்த ஊர்ல,சொந்த வீட்ல எந்தக் குறையும் இல்லாம இருக்கிறோம். ஆடு, மாடுகளை கவனிச்சிக்கிட்டு காட்டுல ஏதோ வெள்ளாமை பண்ணிட்டு இருக்கிறோம். மீதி நேரத்துல மரம் ஏறும் வேலைக்குப் போறோம். பிள்ளைகளும் பக்கத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போறாங்க. படிப்பு கெடாம இருக்குறதே போதும்” என்கிறார் நாகம்மா.

மரத்தின் உயரத்தைப் பொறுத்து 30 ரூபாயிலிருந்து 40 ரூபாய்வரை வாங்குகிறார்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது 150 முதல் 250 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். மாத வருமானம் 6000 முதல் 8000 ரூபாய்வரை கிடைக்கிறது. “நல்ல வருமானம் கிடைப்பதால் செலவு போக மீதி பணத்தைச் சேமிக்கவும் முடிகிறது” என வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் நாகம்மா.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x