Published : 14 May 2017 02:23 PM
Last Updated : 14 May 2017 02:23 PM
பெண் உடல் அதீதத் தூய்மை காக்கப்பட வேண்டிய ஒன்றாகச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தின் கௌரவம், மரியாதை, மாண்பு இத்யாதிகள் அனைத்தும் அந்தப் பெண்ணின் உடலுக்குள்தான். அதிலும் குறிப்பாக அவளது அந்தரங்க உறுப்பில்தான் புதையலைப் போல பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. பெண் தன் விருப்பம் போல் செயல்பட்டால் அந்த மாண்புகள் அனைத்தும் சிதைந்துபோகும் என்பது அவர்களின் ஆழமான நம்பிக்கை.
பெண் தன் சாதி கடந்து காதலித்தாலோ, காதலித்தவனை மணந்துகொண்டாலோ, சாதித் தூய்மையை முன்னிறுத்திப் பெண்ணைப் பெற்றவர்களால் கவுரவத்தின் பெயரால் ஆணவத்துடன் கொன்று புதைக்கப்படும் கொடூரங்கள் அரங்கேறுவது இந்த மனநிலையில்தான். அதிலும் தங்களைக் காட்டிலும் தாழ்ந்த சாதி இளைஞனைத் தன் மகள் கரம் பற்றினால், அவனும் கொன்று வீசப்படுவான். இதன் மூலம் தங்கள் சாதியின் உன்னதத்தைக் காப்பாற்றிக்கொள்வார்கள் சாதியப் புண்ணியவான்கள்.
ஆணின் உடைமையா பெண்?
உடல் என்பது அவளுக்கே சொந்தமில்லாதது. திருமணமான பின் முழுக்க முழுக்க அது அவள் கணவனுக்கு உடைமையாகிறது. படுக்கையறையிலும் கணவனிடம் தன் உடல் தேவையைச் சொல்லக் கூடாது. அது மாபெரும் குற்றம். குறிப்பாக உடலுறவில் தன் சுய திருப்தி பற்றிப் பெண் வாய் திறந்து பேச அனுமதி கிடையாது. கணவனுக்குத் தேவைப்படும் போதெல்லாம், ஓர் இயந்திரத்தைப் போல அவளின் பங்களிப்பு இருக்க வேண்டும். உடலுறவும் அதன் உச்சபட்ச மனநிறைவும் ஆணுக்கு மட்டுமே. ஆணின் உடல் தேவைக்கான ஓர் இயந்திரம் பெண் உடல். இதுதான் காலம் காலமாக இங்கு கடைப் பிடிக்கப்படும் நடைமுறை. பெண்ணின் இயல்பான தேவையை இந்தச் சமூகம் கணக்கிலெடுத்துக் கொள்ளாது. அவள் மீது பரிவும் கொள்ளாது.
அந்த உடைமைப் பொருளை வேறு ஒருவன் தீண்டிவிட்டால் அது எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும்? பெண்ணுக்கு உடல் மட்டுமல்ல, மனமும் சொந்தமில்லை என்பதை வலிந்து திணிப்பதற்கான முயற்சியே இது. விருப்பமில்லாத ஒருவனைத் திருமணம் செய்துகொண்டாலும், அவள் உடல் அந்தக் கணவனின் உடைமையாகக் கைக்கொள்ளப்படும்.
ஆனால், அவளின் மனதுக்குள் அந்தக் கணவன்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்துவது எவ்வளவு மடமையோ அவ்வளவு மடமை, திருமண உறவைத் தாண்டி வேறு ஓர் ஆண் மீது பெண் கொள்ளும் காதலைக் கள்ளக்காதல் எனப் பெயர் சூட்டி ஊடகங்கள் உட்பட அனைவரும் கொக்கரிப்பது. காதல் எப்படிக் கள்ளத்தனமாகும்? ‘என் உடல் மீது நீ கொள்ளும் உரிமையை என் மனதின் மீதும் கொள்ளாதே, அது கட்டற்றது’ என்றுதான் பெண் மனம் பதிலடி கொடுக்கும். அதைத் தங்கள் ஆணைக்குக் கட்டுப்பட வைக்க யாராலும் முடியாது.
நீளும் கேள்விகள்
பெண் திருமண உறவுக்குப் பின் வேறு ஓர் ஆடவனுடன் காதல் கொண்டாலோ, சற்றே மனச்சாய்வு கொண்டாலோ அது கொலைக் குற்றத்தைவிடக் கொடூரக் குற்றமாகப் பார்க்கப்படுகிறது. அதற்குப் பின் அந்தப் பெண் உயிருடன் வாழ்வதைவிடச் செத்துத் தொலையலாம். இதுதான் அவளது சுற்றம், உறவுகளின் எதிர்பார்ப்பு. ஆண், திருமணத்துக்கு முன்னும் பின்னும் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் நட்பும் காதலும் உறவும் கொள்ளலாம். சமூகம் அதை ஏற்றுக்கொள்ளும். சமூகத்தின் பெரும்பான்மையும் அப்படித்தானே இயங்குகிறது. இப்படிப்பட்ட சமூகம் பெண்ணின் காதலைக் கள்ளக்காதல் என்றுதான் முத்திரை குத்திக் கள்ளத்தனமாக சந்தோஷப்பட்டுக்கொள்ளும்.
இங்குதான் பெண்ணின் சுய விருப்பம், சுய சிந்தனை பற்றி எல்லாம் கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், அந்தக் கேள்விகளுக்கான பதில் மட்டும் சமூகத்திடம் இல்லை. பெண்ணை உடைமைப் பொருளாக, சொத்தாகப் பாவிப்பதைச் சமூகம், அதிலும் குறிப்பாக ஆண் சமூகம் எப்போது நிறுத்துகிறதோ அதுவரை நிவேதாக்கள் உற்பத்தியாகிக்கொண்டுதான் இருப்பார்கள்.
இருபது ஆண்டுகள் கணவனைப் பிரிந்து வாழும் ஒரு பெண், தன் உணர்வுகள் அனைத்தையும் பொசுக்கிக் கொண்டு, தன் இறுதிக் காலம் வரை வாழ வேண்டும் என நிர்பந்திப்பது எந்த வகையில் நியாயம்? காலம் காலமாக அவ்வாறே பழகி வந்திருப்பதால், பெண் உடலை உணர்வற்ற தன் உடைமையாகவே நினைக்கும் பழக்கத்தைக் கைவிட மறுக்கிறது ஆண் மனம். சில காலம் பழகினாலும் அவள் தனக்கே உடைமை என நினைப்பதன் பலன்தான், காதலித்தவளைக் காரேற்றிக் கொல்லவும் துணிகிறது ஆதிக்க மனம்.
ஆனால், தன்னை நம்பித் திருமண பந்தத்தின் வழியாக வந்த மனைவியும் ஒரு பெண்தான் என்பதை மிகவும் வசதியாக அது மறந்துவிடுகிறது. அவள் வழியாகப் பெற்ற குழந்தைக்கு எட்டு மாதம் ஆனால் என்ன? எட்டு வயது ஆனால் என்ன? அதெல்லாம் அதற்கு நினைவில் இருப்பதேயில்லை; சமூகத்துக்கும்தான். ஆனால், பெண்ணுக்கு வயது வந்த பிள்ளைகள் இருப்பது மட்டும் தவறாமல் நினைவில் இருப்பதுடன், ‘இந்த வயதிலும் உனக்கேன் இத்தனை உடல் தினவு? என்றும் ‘பொத்திக்கொண்டு’ புலனடக்கத்துடன் இரு என்றும் இலவச ஆலோசனைகளை அள்ளி வீசுவதுடன், இது தொடர்பாக இலவச வகுப்புகள் எடுக்கவும் தயார் நிலையில் காத்துக் கொண்டிருப்பார்கள் பலர்.
புரிந்துகொள்வோம் பெண்களை
பால் மணம் மாறாத பால்ய வயதில் செய்து வைத்த திருமணங்களில் பெண்ணின் விருப்பம் இல்லை; வயது வந்த பின் செய்து வைக்கப்பட்ட திருமணங்களிலும் பெண்ணின் விருப்பம் அறியப்படவில்லை. ஒரே சாதிக் குழுக்கள் கூடி வாழ்ந்த கிராமிய வாழ்க்கை முறையைக் கடந்து நகரங்களில் பல சாதிக் குழுக்களுக்கு மத்தியில் வாழ நேர்ந்தபோது, அடுத்த சாதி இளைஞன் மீது காதல் கொள்ள அனுமதியில்லை. இவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து நொறுக்கப்பட்டு சாதி மறுப்புத் திருமணங்கள் நிகழ ஆரம்பித்த பிறகும்கூட, திருமணம் மட்டுமே தன் விருப்பத்தில் நிகழ்ந்தது.
ஆனால், பெண்ணுடல் எப்போதும் ஆணின் உடைமைதான் என்பதை இன்னமும் மாற்றிக் கொள்ள மறுக்கிறது ஆண் மனம். வயிற்றுப் பசியைப் போலவே உடலின் தேவையும் அதில் திருப்தியும் பெண்ணுக்கு அவசியம் என்பதையும் சேர்த்தே புரிந்துகொள்ள முயலுங்கள்.
எத்தனை யுகங்களுக்குப் பெண் தியாகியாகவே இருக்க வேண்டும் என்பதையும் மறுபரிசீலனை செய்யுங்கள். ஆணோ பெண்ணோ எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் உங்கள் வழியாக வந்தவர்களே தவிர, காலந்தோறும் அவர்கள் உங்கள் அடிமைகள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவும் முயற்சி செய்யுங்கள்.
பெண் மீது வீசியெறியப்படும் வாய்க் கொழுப்பான வார்த்தைகள் பற்றித் தன் ‘பெண் விடுதலை’ என்ற கவிதையில் என்று கோபம் கொப்புளிக்க இவ்வாறு கேட்கிறார் பொதுவுடைமைத் தலைவர் ப.ஜீவானந்தம்...
பாவிகள் பெண்க ளென்னும்
பாதகர் வாய்க்கொழுப்பை
தூவென் றுமிழும் திறன் வேண்டும் –
வேறென்ன வேண்டும்?
சின்னத்தன மாய்ப் பெண்ணை
சித்திரிக்கும் நூற்களை
இன்னே நெருப்பிலிட வேண்டும் –
வேறென்ன வேண்டும்?
இதைவிட வேறென்ன வேண்டும் நமக்கு?
நீங்க என்ன சொல்றீங்க? நடத்தை சார்ந்த விவகாரங்களில் எப்போதும் பெண்ணை நோக்கியே அம்புகள் பாய்வது ஏன்? பெண் எப்போதும் ஏன் கண்காணிக்கப்படுகிறாள்? பெண்ணின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு ஏன் மதிப்பிருப்பதில்லை? சமூகத்தின் புனிதம் அனைத்தும் ஏன் பெண் மீதே சுமத்தப்படுகின்றன? இந்த விஷயத்தில் உங்கள் அனுபவம் என்ன? கருத்து என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம். |
கட்டுரையாளர், எழுத்தாளர்,
பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT