Published : 01 Jan 2017 02:15 PM
Last Updated : 01 Jan 2017 02:15 PM
பெண்களைப் பண்டமாக்கிக் காட்சிப்படுத்துவது தமிழ்த் திரைப்படங்களுக்குப் புதிதில்லை. அந்த வழக்கத்தையொட்டித் திருவாய் மலர்ந்திருக்கிறார் திரைப்பட இயக்குநர் சுராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கத்தி சண்டை’ படத்தைத் தொடர்ந்து இணையதளம் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் “நாயகிகள் முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்துத் திரையரங்குக்கு வருகிறவர்கள் நடிகைகளைக் கவர்ச்சியாகப் பார்க்கத்தான் விரும்புவார்கள்” என்று சொல்லியிருக்கிறார். அதோடு, “ஆடை வடிவமைப்பாளர், முட்டிவரை மூடியபடி இருக்கிற உடையைக் கொண்டுவந்தால் அவற்றை நான் ஆங்காங்கே கத்தரித்துவிடச் சொல்வேன். கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவது இதற்காகத்தான் என்று சொல்வேன்” என்றும் முத்துக்களை உதிர்த்திருக்கிறார்.
வேண்டாமா சமூகப் பொறுப்பு?
திரைப்படங்களில் பெண் களைச் சதைப் பிண்டமாகக் காட்சிப் படுத்து வது கண்டிக்கத்தக்து என்றால் அவர்கள் அப்படி நடிப்பதுதான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு என்று அதை நியாயப்படுத்துவது ஆணாதிக்கத்தின் உச்சம். தன்னுடைய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அனைத்து நடிகைகளிடமும் மன்னிப்பு கேட்பதாகச் சொல்லியிருக்கிறார் சுராஜ். ஒரு பெண்ணைத் தரக்குறைவாகப் பேசிவிட்டு, மன்னிப்பு கேட்பதாலேயே எல்லாமே நேர்செய்யப்பட்டுவிட்டது என்று நினைக்கிற மனோபாவத்தின் வெளிப்பாடுதான் இதுபோன்ற மலிவான பேச்சும் அதைத் தொடரும் மன்னிப்பும். பொதுமக்களிடம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படம் போன்ற துறைகளில் பணியாற்றுகிறவர்கள் குறைந்தபட்ச சமூகப் பொறுப்புடன் இயங்க வேண்டும் என்பதை சுராஜைப் போன்ற இயக்குநர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எது உங்கள் தேர்வு?
நடிகைகளைப் பற்றி தரக்குறை வாகப் பேசியிருக்கும் இயக்குநர் சுராஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று நடிகைகள் தமன்னாவும் நயன்தாராவும் தெரிவித்திருகிறார்கள்.
“நடிகைகளின் ஆடை குறித்த இயக்குநர் சுராஜின் கருத்து கோபமூட்டுவதாக மட்டுமல்ல காயப்படுத்து வதாகவும் இருக்கிறது. நடிகைகள் என்றால் ஆடை களைகிறவர்கள் மட்டும்தானா?” என்று கேட்கிற தமன்னாவின் கேள்விக்குப் பின்னால் இருக்கிற நியாயத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. “நான் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன்தான். ஆனால் அது எனக்கு சவுகரியமாகவும் என்னுடைய விருப்பத் தேர்வாகவும் இருக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் நயன்தாரா.
ஒரு நடிகை தான் எந்தவிதமான ஆடையணிந்து நடிக்க வேண்டும் என்று முடிவுசெய்வது அவரது தனிப்பட்ட விருப்பம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அந்த வகையில் நயன்தாராவின் கருத்தும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே. ஆனால் இப்படியொரு கருத்தை அவர் எந்தச் சூழலில் சொல்கிறார் என்பது வேறொரு கேள்வியை எழுப்புகிறது.
தான் நேரடியாகச் சம்பந்தப்பட்ட அல்லது தனக்கு நேரவிருக்கிற சம்பவங்களுக்கு மட்டுமே கொதித்தெழுவதும், அப்போது வந்து அறம் பேசுவதும் ஏற்புடையதா?
பெண்களுக்கு மரியாதை தருவதைப் பற்றியும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் வெளிவந்த ‘பிங்க்’, ‘தங்கல்’ திரைப்படங்களைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் அவரேதான் தனக்கு சவுகரியமான ஆடை குறித்தும் விருப்பத் தேர்வு குறித்தும் சொல்கிறார். அவர் குறிப்பிடுகிற சவுகரியத்துக்கும் விருப்பத் தேர்வுக்கும் சமூகப் பொறுப்பு என்பது தேவையில்லையா? தன்னைப் போன்ற சக நடிகை விமர்சனத்துக்குள்ளாவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கறையோடு பேசுகிற, பெண்ணிய கருத்துக்களைச் சொல்கிற நயன்தாராவின் பெண்ணிய மதிப்பீடு என்ன? இயக்குநரின் அநாகரிகப் பேச்சுக்கு எதிராகத் துணிச்சலுடன் தன் கண்டனத்தைத் தெரிவிக்கும் நயன்தாரா, பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்க்கக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரே பல படங்களில் போகப் பொருளாகக் காட்சிப்படுத்தப்பட்டபோது ஏன் மறுக்கவோ எதிர்த்துக் குரல்கொடுக்கவோ இல்லை என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
பெண்களின் கண்ணியத்துக்கு எதிரான செயல்களைச் செய்கிறவர் இயக்குநரோ, நடிகையோ யாராக இருந்தாலும் அவர்கள் செய்வது சரியா? அவர்களுக்குச் சமூகப் பொறுப்பு தேவையில்லையா? ‘பொழுதுபோக்கு’ என்ற போர்வையில் பெண்களைக் காட்சிப் பொருளாக்குவதும் பண்டமாக்குவதும் நியாயமா? திரைப்படங்கள் என்பவை பார்த்துவிட்டுக் கடந்து செல்ல மட்டுமே என்று நினைக்காமல் அவற்றை வாழ்வின் அங்கமாகவே பார்க்கிற இளைஞர்கள் நிறைந்திருக்கிற இந்தச் சமூகத்துக்குத் திரைப்படங்கள் வழியாக நாம் சொல்ல நினைப்பது என்ன?
தோழிகளே, இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன? அனுபவம் என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT