Published : 05 Feb 2017 12:32 PM
Last Updated : 05 Feb 2017 12:32 PM
பிறரிடம் கைகட்டி வேலை செய்வதைவிட, சுய தொழில் செய்வதே சிறந்தது என்பது லூர்து சசிகலா தெரசாளின் கொள்கை. ராமநாதபுரத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் இவர், வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்கிற கட்சியைச் சேர்ந்தவர்.
“உத்தரகோசமங்கை பக்கத்துல இருக்கற மரியராயபுரம்தான் எங்க கிராமம். நாங்க விவசாய குடும்பம். என்னால எட்டாவது வரைக்கும்தான் படிக்க முடிஞ்சது” என்று சொல்லும் லூர்து சசிகலா, தன் பெற்றோருக்கு உதவியாக விவசாய வேலைகளில் ஈடுபட்டார். கறவை மாடுகள் வளர்ப்பது, பால் கறந்து அதை10 கி.மீ. தூரம்வரை சைக்கிளில் சென்று விற்றுவருவது, விறகு வெட்டி கரிமூட்டம் போடுவது போன்ற பல வேலைகளைச் சிறு வயதிலிருந்தே செய்துவந்தார். ஆட்டோ ஓட்ட வேண்டும் என்று லூர்துவின் மனதில் பல காலமாக ஆசை இருந்தது.
இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. ஒரு மகன் பிறந்தான். குடும்பப் பிரச்சினையில் கணவர் தாக்கியதில் கை, கால்கள் இயங்காமல் முடங்கிப்போனார் இவரது அண்ணன். அந்தத் துயரமான சம்பவத்துக்குப் பிறகு கணவருடன் சேர்ந்து வாழ லூர்து சசிகலாவுக்கு விருப்பமில்லை. மகனை அழைத்துக்கொண்டு ராமநாத புரத்துக்கு வந்தார். மகனை நல்ல விதமாக வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கிரைண்டரில் மாவு அரைத்து, பாக்கெட்டுகளில் அடைத்து விற்றார். அதிலிருந்து கிடைத்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தினார். மகனை மெட்ரிக் பள்ளியில் படிக்கவைத்தார். ஒரு கிரைண்டரில் ஆரம்பித்த தொழில், நான்கு கிரைண்டர் வாங்குகிற அளவுக்கு வளர்ந்தது.
“நேரம் கிடைக்கும்போது கார் ஓட்டக் கத்துக்கிட்டேன். லைசென்ஸ் எடுத்தேன். கடன் மூலம் ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டினேன். அதுவரைக்கும் ஆட்டோ டிரைவரா ஆண்களையே பார்த்துவந்த மக்கள், என்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டாங்க. குறிப்பாகப் பெண்கள் என் ஆட்டோவில் சவாரி செய்ய ஆர்வமாக வந்தாங்க. நானும் எந்த நேரமா இருந்தாலும் ஆட்டோ ஓட்டத் தொடங்கினேன். இதனால் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆண்கள் என்னைத் துரத்தும் வேலைகளைச் செய்தாங்க. நான் எதையும் கண்டுக்காம என் வேலையில் மட்டும் கவனமா இருந்தேன்” என்று சொல்லும் லூர்து சசிகலா, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். தொந்தரவு அதிகமானதால் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோரிடம் புகார் செய்தார். அவர்கள் சசிகலா, அந்த ஸ்டாண்ட் அருகிலேயே ஆட்டோ ஓட்ட நடவடிக்கைகள் எடுத்தார்கள்.
அடையாளம் அவசியம்
“கொஞ்ச நாள் நிம்மதியா ஆட்டோ ஓட்டினேன். இப்போ கலெக்டர் வேற ஊருக்கு மாறிட்டதால எங்க ஸ்டாண்டுல திரும்பவும் எனக்குத் தொல்லை தொடங்கிடுச்சு. என்ன பண்றது? போராட்டத்தோடுதான் ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கேன்” என்று தான் சந்தித்துவரும் சிக்கல்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் லூர்து சசிகலா.
பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆட்டோ ஓட்டுநராக ஆனதாகச் சொல்லும் இவர், பெண்கள் அனைவரும் சுயதொழில் செய்வது நல்லது என்கிறார்.
“ஒரே வேலையில் தேங்கிடாம அடுத்தடுத்து வெவ்வேறு தொழில்களைச் செய்யும்போது வாழ்க்கை சுவாரசியமா இருக்கும். ஆம்னி கார் வாங்கி ஸ்கூல் சவாரி எடுக்கணும்ங்கறதுதான் என் அடுத்த
இலக்கு. நான் ஆட்டோ ஓட்டுறதைப் பத்தி நிறைய பேர் பெருமையாகப் பேசுவாங்க. அதனால என் மகனுக்கு என்னைப் பத்தி ஒரே பெருமிதம். நான் என்னைக்குமே உழைக்க பயந்ததே இல்லை. அந்த உழைப்புதான் என்னைத் தலைநிமிர்ந்து வாழவைக்குது” என்று கம்பீரமாக விடைகொடுக்கிறார் லூர்து சசிகலா.
படம்: கே.தனபாலன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT