Published : 10 Nov 2014 11:58 AM
Last Updated : 10 Nov 2014 11:58 AM

வேதனைக்குப் பின்னும் வாழ்க்கை

பெண் குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டும், அவர்களிடம் என் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னை ஒரு தன்னார்வ ஆசிரியை ஆக்கியது. ஒரு அரசாங்க ஆசிரியர் ஓய்வுபெறும் வயதில் நான் எனது ஆசிரியர் பணியை ஆரம்பித்தேன்.

அரசாங்க மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலரை அணுகிப் பணி செய்வதற்கு வாய்ப்பு கேட்டபோது, மிகவும் வேடிக்கையாகவும் எதிர்மறையாகவுமே அவர்களது அணுகுமுறை இருந்தது. சந்தேகமான கேள்விகள் மற்றும் பார்வைகளையே எதிர்கொண்டேன். இறுதியில் என்னைப் புரிந்துகொண்ட ஒரு உதவித் தலைமை ஆசிரியரின் உதவியால் ஒரு மாநகரப் பெண்கள் பள்ளியில் சேர்ந்தேன்.

அங்கிருந்த ஆசிரியர்களின் அணுகுமுறை எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னை வேற்றுக் கிரகவாசி போலப் பார்த்தார்கள், வசதியான பெண்ணுக்கு இந்த வயதில் எதற்கு வேலை என்றும் நினைத்தார்கள். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவதில் எனக்குள்ள ஈடுபாட்டால் மற்ற பிரச்சினைகளை நான் பொருட்படுத்தவேயில்லை.

எனது கனிவு மற்றும் அன்பான தோழமையால் மாணவிகள் தங்களது சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கும் ஆலோசனைக்காக என்னைத் தேடிவரத் தொடங்கினார்கள். இதற்குள் சில ஆசிரியர்களின் ஏற்பையும் நட்பையும் பெறத் தொடங்கினேன்.

அந்தப் பள்ளியில் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ப்ளஸ் டூ மாணவி எனக்கு அறிமுகமானாள். வணிகவியல் பிரிவு மாணவியான அவள் 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கியிருந்தாள். எப்போதும் கலகலப்பாக இருப்பவள். இறுதித் தேர்வுக்கு இரண்டு மாதங்கள் இருந்தபோது திடீரென்று கவிதா மனச்சோர்வில் ஆழ்ந்தாள். தோழிகளையும் தவிர்த்தாள். தேர்வில் தோல்வியும் அடைந்தாள். இந்தச் சூழலில்தான் வணிகவியல் ஆசிரியர் கவிதாவை என்னிடம் அனுப்பினார்.

முதலில் கவிதாவிடம் என்ன பிரச்சினை என்று கேட்டபோது பேசுவதற்கே மறுத்தாள். பிறகு மெல்லத் தனது பிரச்சினையைச் சொல்லி அழுதாள். அவளுடைய அப்பா டீக்கடை நடத்துபவர். அம்மா, ஒரு தம்பி கொண்ட சின்ன குடும்பம் அது. இரண்டு அறைகளே கொண்ட மிகச் சிறிய வீடு அவர்கள் வசிப்பது. கடந்த சில மாதங்களாக கவிதாவின் அம்மாவுக்கு முன்பாகவே அவளுடைய தந்தை அவளிடம் தவறாக நடந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

தினசரி மாலை நான்கு மணிக்கு கவிதாவைப் பள்ளிக்கூடம் முடிந்ததும் டூவீலரில் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். மனைவியை வெளியே அனுப்பிவிட்டு கவிதாவுடன் உறவு கொள்ளத் தொடங்கியிருக்கிறார். கவிதாவின் அம்மாவால் கணவனின் நடத்தையைக் கண்டிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கவிதாவுக்கு மதியம் ஆனாலே வயிற்றைக் கலக்கத் தொடங்கியது. பாடத்தில் கவனம் செல்லாது. பள்ளிவாசலில் காத்திருக்கும் தந்தை வடிவில் இருக்கும் காமுகனின் நினைவு அவளைப் படுத்தி எடுக்கத் தொடங்கியது. வீடு நரகமானது.

கவிதாவின் அம்மாவை அழைத்தோம். அவரும் அழுதார். கவிதாவின் இறுதித் தேர்வு தொடர்பாக ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சொல்லி கவிதாவின் அப்பாவைத் தொலைபேசியில் கூப்பிட்டோம். அவரும் வந்தார். நாங்கள் குறிப்பிட்ட விஷயத்தைப் பேசத் தொடங்கியதும் முதலில் வன்மையாக மறுத்தார். பின் அதெல்லாம் சொந்த விஷயம் என்றார். நாங்கள் போலீஸூக்குப் போவோம் என்று மிரட்டியதும்தான் அடங்கினார்.

கவிதாவை அவளுடைய அம்மாவின் சம்மதத்துடன் ஒரு மகளிர் தங்கும் விடுதியில் சேர்த்தோம். தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்றாள். கல்லூரிப் படிப்பையும் அருமையாக முடித்தாள். வேலையில் சேர்ந்து பெற்ற முதல் சம்பளத்தை எனக்கு அன்பளிப்பாகவும் கொடுக்க வந்தாள். என்னால்தான் தன் வாழ்க்கையே மாறியதாகக் கண்ணீரோடு சொன்னாள். அவளது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும், தன்னம்பிக்கைக்கும் ஈடு இணையே இல்லை!

- ஜி. இந்திரா, கோயம்புத்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x