Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM

குளிர்சாதனப்பெட்டியில் எதை வைக்கலாம்?

வீட்டில் இருக்கும் மனிதர்களைத் தவிர மற்ற அனைத்தையும் குளிர்சாதனைப்பெட்டியில் வைத்துவிடுவார்கள் போல. குளிர்சாதனப்பெட்டியில் பொருட்களை வைப்பதற்கும் வரைமுறை உண்டு.

• காய்கறி, பழங்களை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு இறுகக்கட்டி வைப்பதால் உள்ளே ஆவியடித்து காய்கறிகளும் பழங்களும் அழுகிவிடக்கூடும். இதைத்தவிர்க்க அவற்றை வலைப்பின்னல் பைகளில் போட்டு வைக்கலாம். கறிவேப்பிலை, கீரை, பூ போன்றவற்றை காய்கறிக் கென இருக்கும் பகுதியில் வைக்கா மல் குளிர்சாதனப்பெட்டியின் கதவில் இருக்கும் அறைகளில் வைக்கலாம்.

• சூடான பொருட்களை வைக்கக்கூடாது. இதனால் மின்செலவு அதிகரிப்பதுடன், ஏற்கனவே குளிர்நிலையில் இருக்கும் பொருட்களின் குளிர்ச்சி குறைந்து அவை கெட்டுப்போகவும் கூடும்.

• குளிர்சாதனப்பெட்டியை சமையலறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாகவே மற்ற அறைகளைவிட சமையல் அறையின் வெப்பநிலை சற்று கூடுதலாக இருக்கும். அங்கே வைப்பதால் குளிர்சாதனப்பெட்டியின் உள்ளே குளிர்ச்சி குறையலாம். இதைப் புரிந்துகொள்ளாமல் சிலர், ‘எங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் சரியாக வேலை செய்யவில்லை. டெம்ப்ரேச்சரை எவ்வளவு குறைத்தாலும் ஃப்ரிட்ஜினுள் குளிர்ச்சி குறைவாக இருக்கிறது’ என்று புகார் சொல்வார்கள். தவிர சமையலறையின் எண்ணெய்ப்பிசுக்கு படுவதால் குளிர்சாதனப்பெட்டியும் அதனுள் பொருத்தப்பட்டு இருக்கும் கேஸ்கட்டும் அழுக்கடைந்து பிசுக்குத்தன்மையுடன் இருக்கும். இதனால் குளிர்சாதனப்பெட்டி எளிதில் துருப்பிடிக்கவும்கூடும்.

• ஒவ்வொரு மாதமும் குளிர்சாதனப்பெட்டியைச் சுத்தம் செய்வது நல்லது. வெதுவெதுப்பான நீரில் சிறிது சமையல் சோடா, எலுமிச்சை சாறு அல்லது வினிகர் கலந்து மென்மையான துணியால் உள்பாகங்களைத் துடைக்க வேண்டும். சோப்பைத் தவிர்க்க வேண்டும். அது குளிர்சாதனப்பெட்டியினுள் தேவையில்லாத மணத்தை ஏற்படுத்துவதுடன் மென்மையான பகுதிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். வெளிப்பாகத்தை காரத்தன்மை குறைந்த குளியல் சோப்பு அல்லது ஷாம்பு கலந்த நீரில் துடைக்கலாம். கேஸ்கட்டையும் நன்றாகத் துடைத்து பராமரிக்க வேண்டும்.

• குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப குளிர்சாதனப்பெட்டியை வாங்குவது நல்லது. சிலர் தேவையே இல்லையென்றாலும் டபுள் டோர் மற்றும் அதிக கொள்ளளவு கொண்டவற்றை வாங்குவார்கள்.

• அசைவ உணவு மற்றும் ஐஸ்கிரீம் வகைகளுக்கு மட்டும்தான் ஃப்ரீசரைப் பயன்படுத்த வேண்டும். சிலர் தேவையே இல்லாமல் ஃப்ரீசரினுள் ஐஸ் டிரேவை வைப்பார்கள். சிலர் டம்ளர் அல்லது வேறு பாத்திரங்களில் தண்ணீரை நிரப்பி வைப்பார்கள். இதையும் தவிர்க்க வேண்டும்.

- விஷாலி, சென்னை-4.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x