Published : 12 Feb 2017 12:10 PM
Last Updated : 12 Feb 2017 12:10 PM
கலைஞர்கள் பலரும் கைவினைக் கலைகளைக் கற்றுத் தேர்ந்த கையோடு படைப்புகளை உருவாக்கி, விற்பனைக்குக் களமிறங்குகிறார்கள். ஆனால் செல்லம்மாளின் வழி, தனி வழி. கைவினைக் கலையைப் பிறருக்குக் கற்றுக்கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.
திருநெல்வேலியில் தன் வீட்டில் கைவினைக் கலை பயிற்சி மையம் நடத்திவரும் செல்லம்மாளிடம் பள்ளி மாணவியர் முதல் குடும்பத் தலைவிகள்வரை கற்றுவருகிறார்கள். சுடுமண் நகைகள், ஃபர் கிளாத் பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியம், தாய் க்ளே பூக்கள், மரங்கள், ஆரி எம்ப்ராய்டரி, ஆயில் ஓவியம், எம்ப்ராய்டரி, ரிப்பன் எம்ப்ராய்டரி, தையல், பானை ஓவியம், தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம், கார் குஷன், க்வில்லிங் பேப்பரில் நகை, ஓரிகாமி, ஆரத்தி தட்டுகள், மேக்ரோமி கூடைகள், பழைய பொருட்களில் கலைப் பொருட்கள், சணல் பை, பட்டு நூல் நகைகள், உல்லன் பொம்மைகள், மியூரல் வேலைகள், காபி ஓவியம் என்று இவரது கைவண்ணங்களின் பட்டியலை வாசித்து முடிப்பதற்குள் மூச்சு வாங்குகிறது. இவற்றைத் தனது கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தி அசத்தியுள்ளார் செல்லம்மாள்.
செல்லம்மாள்
தையல், ஓவியத்தில் முதுநிலைப் பட்டமும், இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் ஆர்ட் அண்ட் கிராப்ட் ஓராண்டு பட்டயமும் பெற்றிருக்கிறார். கைவினைக் கலையைச் சொல்லித்தர வேண்டும் என்பதற்காகவே கிராப்ட் ஆசிரியர் பயிற்சியையும் முடித்திருக்கிறார்.
“என் பாட்டி, அம்மா, சித்தி என்று குடும்பமே கைவினைக் கலையில் ஈடுபட்டிருந்ததுதான் எனக்கும் இந்தத் துறையில் ஈர்ப்பை உருவாக்கியது. படிக்கும் காலத்தில் சென்னை, மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களுக்குச் சென்று பலவிதமான கைவினைப் பொருட்கள், ஓவியங்கள் குறித்துக் கற்றேன். இப்போதும் தமிழகத்தில் நடைபெறும் கண்காட்சி, பயிற்சிகளில் பங்கேற்கிறேன்” என்று சொல்லும் இவர், கடந்த ஒன்பது ஆண்டுகளாக திருநெல்வேலி சாரதா மகளிர் கல்லூரி மாணவியருக்கு கைவினைக் கலைப் பயிற்சி அளித்துவருகிறார். இங்கு மட்டும் சுமார் 1200 மாணவிகள் இளம் கலைஞர்களாக உருவெடுத்திருக்கிறார்கள்.
இவர் கடந்த ஆண்டு சென்னையில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட கைவினைக் கலைஞர்கள் பங்கேற்ற போட்டியிலும் பங்கேற்றுள்ளார். மதுரையில் அகில இந்தியக் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்று, தனது படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT