Published : 05 Jan 2014 12:00 AM
Last Updated : 05 Jan 2014 12:00 AM

புதுப்பிக்கப்பட்ட உறவும் குற்ற உணர்வும்

நான் இல்லத்தரசி. திருமணமாகிப் பத்து ஆண்டுகளாகின்றன. கண்ணுக்குக் கண்ணாக ஒரு மகன். காதல் திருமணமோ என பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்குப் பாசத்துடன் இருக்கும் கணவன். இதில் எந்தச் சிக்கலுமே இல்லை. ஆனால் என் மனம்தான் சில நாட்களாகக் குற்ற உணர்ச்சியில் மறுகிக் கிடக்கிறது. நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்திருக்கிறேனே என்று என் வாசலை விசாலப்படுத்த விரும்பினார் என் கணவர். எனக்கெனத் தனியாக லேப் டாப் வாங்கிக் கொடுத்து, ஃபேஸ் புக்கை அறிமுகப்படுத்திவைத்தார். ஃபேஸ் புக் மூலம் என் பள்ளி, கல்லூரித் தோழிகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இளமை திரும்பியதுபோல உற்சாகத்துடன் வலம் வந்தேன்.

இவர்களுக்கு நடுவேதான் என் பள்ளித் தோழன் ஒருவனும் ஃபேஸ் புக்கில் அறிமுகமானான். ஆண், பெண் பால் வேறுபாடுகள் தெரியாத அந்தப் பருவத்தில் என் மனதுக்கினியவன் அவன். வகுப்பில் அத்தனை பெண்கள் இருந்தாலும் என்னிடம் மட்டுமே பேசுவான். எதைச் செய்தாலும் என்னைக் கேட்டுத்தான் செய்வான். என்னை யாராவது, ஏதாவது சொல்லிவிட்டால் தாங்க மாட்டான். அவர்களை என்னிடம் மன்னிப்புக் கேட்கவைத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். அப்பாவின் வேலை காரணமாக நாங்கள் வேறு ஊருக்குச் சென்றுவிட்டதால் அவனுடன் தொடர்பே அற்றுப்போயிற்று. ஆனால் அவனை ஃபேஸ் புக் மீட்டுத் தந்தது.

கண்டேன் நண்பனை

பத்து வயதில் பார்த்தவனைக் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து ஃபேஸ் புக்கில் பார்த்த போது பரவசமாக இருந்தது. போன் நம்பர் வாங்கிப் பேசினான். என்னவோ நேற்றுதான் சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை முடிந்து இன்று பார்த்துக்கொண்டதுபோல அத்தனை உரிமையுடன் இருந்தது அவன் பேச்சு. பரஸ்பர நல விசாரிப்புகள் முடிந்து, பழைய கதைகளைப் பேசித் தீர்த்தோம். தினமும் கணவரும், மகனும் கிளம்பியதும் எங்கள் பேச்சு ஆரம்பித்துவிடும். முதல் நாள் விட்ட இடத்தில் இருந்து பேச்சைத் தொடங்குவோம்.

பேச்சு சலித்துப்போன ஒருநாளில் இருவரும் சந்தித்தால் என்ன என்று தோன்றியது. பள்ளித் தோழனைப் பார்க்கச் செல்கிறேன் என்றால் கணவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று தோழி வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு கிளம்பினேன். நகரின் முக்கிய ரெஸ்டாரெண்டில் டேபிள் புக் செய்திருப்பதாகச் சொன்னான். எனக்காக வாசலிலேயே காத்திருந்தவனை, தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டேன்.

நெற்றியில் படர்ந்த முடியும், கண்களில் சிரிப்புமாக எதிர்கொண்டவனைப் பார்த்து ஒரு நிமிடம் ஆடிப்போனேன். “அடப்பாவி, இவ்ளோ அழகா மாறிட்டியே” என்று என் அதிர்ச்சியை வாய்விட்டே சொல்லிவிட்டேன். அதைக் கேட்டுச் சிரித்தவன், “நீயும்தான் அன்னைக்குப் பார்த்த மாதிரி அப்படியே இருக்கே. உன் ஓட்டைப் பல்லு எல்லாம் சரியாகிடுச்சு போல இருக்கே. குதிரை வால் கூந்தல் மட்டும் அப்படியே இருக்கு” என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்தும் என்னை அப்படியே நினைவு வைத்திருக்கிறானே என்று பெருமிதமாகவும் இருந்தது. அவன் பேச்சு, அன்றைய உணவுக்கு சுவைகூட்டியது. பிரியும்போது எதேச்சையாகக் கைகுலுக்கினான். அவன் இயல்பாக இருந்தானா என்று தெரியவில்லை. எனக்குக் குறுகுறுப்பாக இருந்தது. அதை மறைத்தபடியே விடைபெற்றேன்.

தடுமாற வைத்த நெருக்கம்

அடுத்த வாரம் வந்த என் பிறந்தநாள் என் வாழ்வையே திசைமாற்றும் என்று நான் நினைக்கவே இல்லை. முதல் நாள் நள்ளிரவு அவனிடமிருந்து ‘செல்லக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று குறுஞ்செய்தி வந்தது. அதைப் படிக்கும்போது கோபமும், மகிழ்ச்சியும் சேர்ந்தே தோன்றின. வேலைப்பளுவால் என் கணவர் என் பிறந்த நாளையே மறந்துவிட்டிருந்தார். காலை பூங்கொத்து அனுப்பித் தன் வாழ்த்தைப் பதிவு செய்தான் அவன். நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் ரெஸ்டரெண்டுக்கு வரச்சொன்னான். கண்ணை மூடச் சொல்லி, என் விரலில் மோதிரம் அணிவித்தான். மறுக்க முடியாமல் நின்ற என்னைப் பரிசுகளால் திணறடித்தான். கண்களில் ஏக்கத்துடன் விடை கொடுத்த அவனைப் பிரிய மனசே இல்லை. என் மீது பிரியமாக இருக்கும் அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்ற உந்துதலில் அவனை முத்தமிட்டேன். மறுப்பேதுமின்றி ஏற்றுக்கொண்டான்.

ஆனால் அந்த ஒரு செயல் என்னை வாட்டி வதைக்கிறது. வீடு திரும்பியதும் அவன் போன் செய்தான். நான் அழைப்பை மறுத்துவிட்டேன். எது என்னை அவன் பக்கம் ஈர்த்தது? கணவனின் அன்பே அபரிமிதமாக இருக்கும்போது

எங்கே நான் தோற்றேன்? அவன் நண்பன்தான், ஆனால் அதற்கென்று இருக்கும் எல்லையை மறந்துபோனேனா?

கணவரிடம் மறைத்ததுதான் முதல் படி என்று தோன்றுகிறது. “இந்தாம்மா, உன் ஃப்ரெண்ட் லைன்ல இருக்கார்” என்று என் கணவர் தொலைபேசியை என்னிடம் தந்தபோது, கைகள் நடுங்குவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுதான் நான் அவனிடம் கடைசியாகப் பேசியது. ஃபேஸ் புக் கணக்கை ரத்து செய்துவிட்டேன். அவன் நம்பரை என் போனில் இருந்தும் அழித்துவிட்டேன். ஆனால் மெல்ல மெல்லக் கொல்லும் அவன் நினைவுகளை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x