Published : 30 Apr 2017 03:45 PM
Last Updated : 30 Apr 2017 03:45 PM
கணினி மென்பொருள் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்றும் ஜெட் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்கள் ஸ்விஃப்ட் அமைப்பினர்.
கணினியைக் கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜைத் தெரிந்துகொண்ட அளவுக்கு, அந்தக் கணினி முழுமைப் பெற உதவிய அனலிட்டிகல் இன்ஜினியர் அடா லவ்லேஸைத் தெரியாது. இன்று பெண்கள் இல்லாத துறைகள் என்று எதுவும் இல்லை. ஆனால் அவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். கணினி மென்பொருள் துறையில் பெண்களின் பங்களிப்பு 5.8 சதவீதம்தான்.
ஐ.டி. துறையில் பணிபுரியும் திவ்யா, ஸ்ரவ்யா, ஐ.ஐ.டி.யில் பி.எச்.டி படிக்கும் டிட்டி, தனியார் நிறுவனத்தின் எச்.ஆர். தாமரை, வடிவமைப்பாளர் ராஜலட்சுமி என்று பல்வேறு தளங்களில் பணிபுரியும் இளம் பெண்களைக் கொண்டு செயல்பட்டுவருகிறது ஸ்விஃப்ட்.
“எங்கள் அமைப்பின் நோக்கம் மென்பொருள் சார்ந்த விஷயங்களில் பெண்களின் பங்களிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதுதான். ஒரு பொறியியல் மாணவனுக்குக் கிடைக்கும் கணினி சார்ந்த அறிவு அதே படிப்பு படிக்கும் ஒரு மாணவிக்குக் கிடைப்பது பெரிய போராட்டமாக உள்ளது. ஐ.டி. துறையில் ஆண்களின் பங்களிப்பு இருக்கும் அளவுக்குப் பெண்களின் பங்களிப்பு இருப்பதில்லை. ஐ.டி. துறையில் நுழைவதே பெண்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது. விக்கிபீடியா தளத்தில் யார் வேண்டுமானாலும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிரலாம்.
இது போன்ற விஷயங்கள்கூடப் பெண்களுக்குத் தெரிவதில்லை. கணினி படிக்கும் மாணவிகளுக்குக்கூட இது குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அமைப்பின் மூலமாகக் கல்லூரி, பல்கலைக்கழகம், ஐ.டி. நிறுவனங்களில் உள்ள பெண்களுக்கு, கணினி மென்பொருள் சார்ந்த விஷயங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று கற்றுத் தருகிறோம். பெண்களுக்கான பொதுப்பிரச்சினைகளையும் நாங்கள் விவாதிக்கத் தவறுவதில்லை” என்கிறார் ஸ்விஃப்ட் ஒருங்கிணைப் பாளர்களில் ஒருவரான ஸ்ரவ்யா.
ஸ்விஃப்ட் இணையதளத்தில் மென்பொருள் சார்ந்த விஷயங்களைக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல், அந்த மென்பொருளில் எப்படிப் பெண்களும் இணைந்து செயல்படலாம் என்பதையும் கற்றுக் கொடுக்கிறார்கள். கூகுள் வரைபடம் போல ’ஓபன் ஸ்ட்ரீட் மேப்’ என்ற வழிகாட்டும் வரைபடம் உள்ளது. இந்த மென்பொருளில் எப்படி ஒருவருக்குத் தெரிந்த விஷயங்களைப் பதிவிடலாம் என்று செயல்முறை விளக்கமாகக் கற்றுத் தரப்படுகிறது.
“ஓபன் ஸ்ட்ரீட் மேப் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருள். அதில் யார் வேண்டுமானாலும் தங்கள் பங்களிப்பைச் செலுத்த முடியும். கூகுள் மேப் போன்ற மென்பொருளை ஒரு நிறுவனமோ, கல்வி நிலையமோ தங்களுடைய இருப்பிடத்தை அந்த கூகுள் வரைபடத்தில் தெரிவிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். அந்த நிறுவனம் அளிக்கும் தகவலைக் கொண்டுதான் நாம் செயல்பட முடியும். உதாரணத்துக்கு, போர் நடைபெற்றுவரும் சிரியாவில் ஒருவர் கூகுள் மேப்பைப் பயன்படுத்தி ஓர் இடத்துக்குப் போக விரும்புகிறார். ஆனால் கூகுள் நிறுவனம் சிரியாவின் பழைய வரைபடத்தை வழங்கினால், அவர் தவறான வழியில் சென்றுவிடுவார். அப்போது ஒருவருக்கு என்ன வழங்க வேண்டும், வழங்கக் கூடாது என்பது தனிப்பட்ட நிறுவனத்தின் முடிவாக மாறிவிடுகிறது.
ஆனால் இந்த மென்பொருளில் யார் வேண்டுமானாலும் தகவல் அளிக்கலாம், அந்தத் தகவல் சாதாரணமாகச் சாலையில் இருக்கும் கோயில், ஏ.டி.எம்., மரம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதுபோன்ற செயல் மூலம் அந்த மென்பொருளைப் பலர் பங்களிப்புடன் செயல்படுத்த முடியும். மென்பொருள் சார்ந்த விஷயங்கள் தனிநபரிடம் இல்லாமல் பலரின் பங்களிப்புடன் இலவசமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். எங்கள் அமைப்பின் சார்பில் இந்த ஓபன் ஸ்ட்ரீட் மேப் மென்பொருளைப் பயன்படுத்தி இதுவரை சென்னையில் உள்ள சுமார் எண்பது நூலகங்களைப் பதிவு செய்திருக்கிறோம்” என்று பெருமையாகச் சொல்கிறார் ஸ்ரவ்யா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT