Published : 17 Nov 2014 01:16 PM
Last Updated : 17 Nov 2014 01:16 PM
மண் மணம் மாறாமல் பேசும் கோவில்பட்டி குருலட்சுமி, எம்.எஸ்., பி.எட்., முடித்திருக்கிறார். அரசு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தயாரிப்பில் இருக்கிறவர், கிடைக்கும் சிறிது நேரத்திலும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் இறங்கிவிடுகிறார்.
பள்ளியில் படிக்கும்போது பாடப் புத்தகமும் வீட்டுப் பாடமுமாக இருந்தவரின் கவனத்தைக் கலைகளின் பக்கம் திருப்பியது கலைக்கென இருந்த தனிப் பயிற்சி வகுப்பு. ஒவ்வொரு வருடமும் குறைந்தது நான்கு கைவினைப் பொருட்களையாவது செய்யக் கற்றுக்கொள்ள வேண்டுமாம். முதலில் கடமைக்காகக் கற்றுக்கொண்டவருக்குப் போகப் போக கலைகளின் மீது ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆசிரியரிடம் கற்றுக் கொண்டதுடன் தன் கற்பனைத் திறனையும் சேர்த்துப் பல பொருட்களைச் செய்தார். காகிதங்களைக் கத்தரித்து விதவிதமான பூக்கள் செய்வதும் பொம்மை அலங்காரமும் குருலட்சுமிக்குக் கைவந்த கலை.
பெரிய வகுப்புக்கு வந்ததும் புத்தகங்களைப் பார்த்தும் இணையதளம் மூலமும் வித்தியாசமான கைவினைப் பொருட்களைச் செய்ய முயல்கிறார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார். கல்லூரியில் தன்னுடன் பயின்ற தோழிகளுக்கும் சிலவற்றைச் செய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறார். மூலப் பொருட்கள் வாங்குவதற்கான பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பலருக்கும் தான் செய்த பொருட்களை விற்பனையும் செய்திருக்கிறார்.
தான் செய்த கைவினைப் பொருட்களை வழக்கமாக இவர் விற்பனை செய்வதில்லை. தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் அவற்றை அன்பளிப்பாகத் தருகிறார். அவர்களின் பாராட்டுதான் தனக்குக் கிடைக்கிற அங்கீகாரம் என்கிறார்.
“சிலர் எம்ப்ராய்டரி, காகிதக் கலை, கைவினைக் கலை என ஏதாவது ஒன்றில் தனித்திறமையுடன் இருப்பார்கள். நான் அனைத்தையும் கற்றுக்கொள்ள விரும்பினேன். அதைச் செயல்படுத்தியும் விட்டேன்” என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் குருலட்சுமி, தன் ஒவ்வொரு செயலுக்கும் தன் தந்தை சுப்பையா துணை நிற்பதாகச் சொல்கிறார்.
“என் தந்தை கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும்தான் என் கலையார்வத்துக்குக் காரணம். நான் எந்தப் பொருளைச் செய்தாலும் அதன் முதல் விமர்சகர் அவர்தான். அவர் வழிகாட்டுதலில் நான் பலவற்றைச் செய்திருக்கிறேன். சின்னச் சின்ன பொருட்களைச் செய்வதற்கான மூலப்பொருட்கள் எங்கள் ஊரிலேயே கிடைக்கும். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்றால் மதுரைக்கோ திண்டுக்கல்லுக்கோ சென்றுதான் வாங்குவேன்” என்று சொல்லும் குருலட்சுமி, சிறு வயது முதலே தன் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக்கி வருபவை கைவினைப் பொருட்களே என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT