Published : 28 Aug 2016 03:21 PM
Last Updated : 28 Aug 2016 03:21 PM
13 வயதில் திருமணம், 14 வயதில் குழந்தை, 24 வயதில் கணவரின் கொலை முயற்சியிலிருந்து தப்பித்தல், 26 வயதில் தொலைக்காட்சியில் சமையல் கலைஞர். 32 வயதில் எழுத்தாளர்.
ஆப்கானிஸ்தானில் பிறந்து, அகதியாக ஈரானில் வளர்ந்தவர் ஜாரா யகனா. அகதிகளின் வாழ்க்கை கடினமானது. ஜாராவின் அம்மா கடின உழைப்பாளி. தன் குழந்தைகளுக்கு அனைத்து வேலைகளையும் பழக்கினார். சிறிய வயதிலிருந்தே ஜாராவுக்குப் படிப்பின் மீது அளவற்ற ஆர்வம். அம்மாவின் பார்வையில் பொறுப்பற்ற குழந்தையாகத் தெரிந்தார். 11 வயதில் சமையல் செய்யும்போது தீய்ந்து போவது தெரியாமல், விக்டர் ஹ்யுகோ எழுத்துகளைப் படித்துக்கொண்டிருந்தார் ஜாரா. அம்மாவுக்கு வந்த கோபத்தில் அடி பின்னிவிட்டார். ஆனாலும் சமையலைவிடப் புத்தகங்களே ஜாராவை ஈர்த்தன.
வேதனை நிறைந்த மணவாழ்வு
13 வயதில் திருமணம். அவரைவிட இரு மடங்கு வயது அதிகமான கணவர். தாம்பத்தியம் குறித்து எதுவும் அறியாத ஜாரா, அன்று இரவு கணவரின் அறைக்குள் நுழைந்தார். கண் விழித்துப் பார்த்தபோது, ஒரு மருத்துவமனையில் படுத்திருந்தார். ஒரே இரவில் திருமண வாழ்க்கை அவருக்கு நரகமாக மாறியிருந்தது. வலியும் வேதனையும் தவிர அந்தக் கொடூர இரவு குறித்து வேறு எதுவும் நினைவில்லை.
அடுத்த ஆண்டே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார் ஜாரா. பிறவிக் குறைபாட்டுடன் பிறந்த அந்தக் குழந்தை, நான்கே ஆண்டுகளில் இறந்தும்போனது. போதைப் பழக்கத்துக்கு அடிமையான கணவனால் தினமும் வீட்டில் வன்முறைகளைச் சந்தித்துவந்தார் ஜாரா.
2007-ம் ஆண்டு ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் வந்து சேர்ந்தனர். ஒருநாள் இரவு, போதைப் பொருள் வாங்குவதற்குப் பணம் கொடுக்கவில்லை என்று ஜாராவிடம் சண்டை போட்டுவிட்டு வெளியேறினார் கணவர். சிறிது நேரத்தில் ஜாராவின் வீடு தீப்பற்றி எரிந்தது. இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியேற முயன்றார். கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, மூன்று பேரையும் காப்பாற்றினர்.
விடியலின் தொடக்கம்
இனியும் கணவருடன் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்த ஜாரா, காபூலுக்குச் சென்றார். கிடைக்கும் வேலைகளைச் செய்து, குழந்தைகளைக் காப்பாற்றினார். ஒரு நண்பர் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமையல் கலைஞர் வேலை கிடைத்தது. அம்மா கற்றுக்கொடுத்த சமையலும் ஜாராவின் படிப்பும் புதிய வாழ்க்கைக்குக் கைகொடுத்தன. தானே மீண்டும் வாழ்க்கையைக் கட்டமைத்தார். குழந்தைகளைப் படிக்க வைத்தார். நாடகங்களில் பங்கேற்றார். பெண் உரிமைகள் தொடர்பான இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். கணவரை விவாகரத்து செய்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன் வாழ்க்கையை மையமாக வைத்து, பெண்கள் படும் துயரங்களை நாவலாக எழுத ஆரம்பித்தார்.
Light of Ashes என்ற பெயரில் அது புத்தகமாக வெளிவந்தது. மூன்றே மாதங்களில் 1000 பிரதிகள் விற்றது. ஆப்கானிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக விற்ற புத்தகம் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது.
“என் மகளும் நானும் எங்கள் சொந்தப் பெயரிலேயே நாவலில் வருகிறோம். அதிகாரம் என்பது இரு பாலினருக்கும் பொதுவானது. ஆப்கானிஸ்தானில் திருமணத்தின் மூலம் நடைபெறும் பாலியல் வன்முறைகளை, பலாத்காரம் என்றே அழைக்க வேண்டும். பலாத்காரம் குறித்துப் பேசும் உலகம், திருமணம் மூலம் நடைபெறும் பாலியல் பலாத்காரங்களைப் பற்றிப் பேசுவதில்லை. சமூகம் விவாதிக்காத இதுபோன்ற பெண்களின் பல பிரச்சினைகளை இந்த நாவல் மூலம் சொல்லியிருக்கிறேன். இந்த நாவலைப் படிக்கும் ஆண்கள், தாங்கள் இப்படி ஒரு ஆணாக இருக்கக் கூடாது என்று நினைக்கின்றனர்.
இது ஒரு நல்ல மாற்றம். என் தோழியின் கணவர் நாவலைப் படித்த பிறகு, வீட்டு வேலைகளில் தோழிக்கு உதவி செய்துவருவதாகச் சொன்னார். சமூகத்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அது நாவலின் வெற்றிதான்! என் முதல் மகள் நர்கீஸின் மரணம் குறித்து எழுதும்போது மிகவும் துன்புற்றேன். என்னால் மூன்று மாதங்களுக்கு எழுதவே முடியவில்லை.
நாவலைப் படிப்பவர்களும் என்னைப் போலவே உணர்வதாகச் சொல்கிறார்கள். நீங்கள் ஒரு பெண்ணாக உங்கள் உரிமைகள் குறித்துப் பேசும்போது எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். ஆண்களுக்கு எதிரானதாகப் பார்க்கப்படும். உங்களை எப்படித் தடுத்து நிறுத்த முடியும் என்று யோசிப்பார்கள். அதற்காக அநியாயங்களைக் கண்டும் காணாமல் வாழக் கூடாது. இன்று நாம் நம் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தால்தான் நம் எதிர்காலத் தலைமுறைப் பெண்களாவது மனிதர்களாக மதிக்கப்படுவார்கள்’’ என்கிறார் எழுத்தாளர் ஜாரா யகனா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT