Published : 24 Jun 2017 04:24 PM
Last Updated : 24 Jun 2017 04:24 PM
இந்தியாவில் தூர்தர்ஷன் அலைவரிசையில் 2014 -ம் ஆண்டு, ‘மேய்ன் குச் பி கர் சக்தி ஹூன்’ (‘என்னால்/ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும்’) என்ற தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. உலக அளவில் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட தொடர்களில் இதுவும் ஒன்று என இந்தியாவின் பொது ஒளிபரப்புத் துறை கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருக்கிறது. இதுவரை உலகம் முழுவதுமுள்ள ஐம்பது நகரங்களில் நாற்பது கோடிக்கும் மேற்பட்டோர் இந்தத் தொடரைப் பார்த்திருக்கிறார்கள் என்கிறது பொது ஒளிபரப்புத் துறை. இரண்டு சீசன்களாக 131 அத்தியாயங்களாக இந்தத் தொடர் ஒளிபரப்பானது.
பெண்கள் எதிர்கொள்ளும் பெண் சிசுக்கொலை, கருக்கலைப்பு, குடும்ப வன்முறை, குடும்பக் கட்டுப்பாடு, அமில வீச்சு, குழந்தைத் திருமணம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வூட்டும்வகையில் இந்தத் தொடர் அமைந்திருந்தது. பார்வையாளர்களின் கோரிக்கைக்கிணங்க இந்தத் தொடர் கடந்த டிசம்பர் 2016-லிருந்து 16 மாநில தூர்தர்ஷன் அலைவரிசைகளில் மறு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அத்துடன் 216 அகில இந்திய வானொலி அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாகிறது. இதுவரை 13 மொழிகளில் இந்தத் தொடர் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், ‘பாப்புலேஷன் ஃபவுண்டேன் ஆஃப் இந்தியா’ (PFI) என்ற அறக்கட்டளை இதைத் தயாரித்திருக்கிறது.
ஸ்நேகாவின் கதை
இந்தத் தொடர் இளம் மருத்துவர் ஸ்நேகா மாத்துர் வாழ்க்கையில் எதிர்கொண்ட உண்மைச் சம்பவங்களைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரதாப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த அவர், மும்பையில் ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவருகிறார். அவரது கிராமத்தில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் அவரைப் பெரிய அளவில் பாதிக்கின்றன. தன் கிராமத்துக்கு ஒரு மருத்துவர் அவசியம் என்பதை உணரும் அவர், பிரதாப்பூரில் ஆரம்பிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்குகிறார். கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். கிராமத்துப் பெண்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி பல ஆரோக்கியமான சமூக மாற்றங்களை உருவாக்குகிறார்.
“இந்தத் தொடரைத் தொடங்குவதற்கு முன்னர், மத்தியப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எங்களுடைய ‘பிஎஃப்ஐ’ குழு பயணம்செய்தது. அங்கே களத்திலிருந்து எங்களுக்குக் கிடைத்த தரவுகளோடு இந்தத் தொடருக்கான அடிப்படையை உருவாக்கினோம். தொலைபேசி, குரல் பதிவு செய்யும் கருவி ஆகியவற்றின் வாயிலாகப் பலரும் தங்கள் அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்துகொண்டார்கள். எங்களுக்குக் கிடைத்த நிஜ வாழ்க்கைக் கதைகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து ஸ்நேகாவின் வாழ்க்கைக் கதைகளை உருவாக்கினோம்” என்று சொல்கிறார் பிஎஃப்ஐ செயல் இயக்குநர் பூனம் முத்ரேஜா.
பெண்களின் பாலியல் நலன்
இந்தத் தொடரின் முதல் சீசன் குழந்தைத் திருமணம், பாலினத் தேர்வு, குடும்ப வன்முறை, இனப்பெருக்க சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளைப் பற்றிய சமூகப் பார்வைகளைப் பேசியிருந்தது. அத்துடன், இந்தப் பிரச்சினைகளைப் பெண்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் விளக்கியிருந்தது.
மன நலம், உடலில் ஏற்படும் பாலின மாற்றங்கள், மாதவிடாய் சுகாதாரம், உடல் சார்ந்த பாலியல் வன்முறை, பாலினப் பாகுபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இந்தத் தொடரின் இரண்டாவது சீசனில் அலசப்பட்டன. இந்தப் பிரச்சினைகள் இளைஞர்களின் பார்வையிலிருந்து விவாதிக்கப்பட்டிருந்தன.
தற்போது தயாராகிக்கொண்டிருக்கும் மூன்றாவது சீசனும் இளைஞர்களது பாலியல் ஆரோக்கியம், உரிமைகள், கருத்தடைத் தேர்வுகள், பாலினச் சமத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற இந்தியச் சமூகத்தின் முக்கியப் பிரச்சினைகளை அலசவிருக்கிறது. தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி அலைவரிசையில் மட்டுமில்லாமல் தனியார் அலைவரிசைகளிலும் டிஜிட்டல் இணையதளங்களிலும் இந்தத் தொடரை வெளியிட ‘பிஎஃப்ஐ’ திட்டமிட்டிருக்கிறது.
சமூகப் பார்வையில் மாற்றம்
தென் ஆப்பிரிக்காவில் ஒளிபரப்பான ‘சோல் சிட்டி’ (Soul City) என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, பெண்களிடம் எச்.ஐ.வி. வைரஸ் பரவுவதைப் பெரிய அளவில் குறைத்திருக்கிறது. ‘மேய்ன் குச் பி கர் சக்தி ஹூன்’ தொடர் உருவாக்குவதற்கு ‘சோல் சிட்டி’யும் ஒரு பெரிய தூண்டுதலாக இருந்திருக்கிறது. பொழுபோக்குக் கல்வியால் சமூகப் பார்வைகளில் நேர்மறைத் தாக்கத்தை எளிதாக ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொடரை எடுத்ததாகச் சொல்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இந்தத் தொடர் ஒளிபரப்பான பிறகு நடைபெற்ற ஆய்வுகள் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
மத்தியப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ‘மேய்ன் குச் பி கர் சக்தி ஹூன்’ தொடரின் முதல் சீசன் ஒளிபரப்பான பிறகு ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிட்டத்தட்ட நாற்பது சதவீதப் பெண்கள் இளம் வயதில் திருமணம் செய்துகொள்வதால் தாய்-சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்துவதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தொடர் ஒளிபரப்பாவதற்கு முன்னர் இருபது சதவீதப் பெண்களே இந்தக் கருத்தை சொல்லியிருக்கின்றனர். அத்துடன் குடும்ப வன்முறை பற்றிய பார்வையையும் இந்தத் தொடர் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றியிருக்கிறது.
இந்தத் தொடரின் இயக்குநர் ஃபெரோஸ் அப்பாஸ் கான், “இந்த ஒரு தொலைக்காட்சி தொடர் எல்லாவற்றையும் மாற்றிவிடாது. ஆனால், நம்முடைய பழமைவாத சமூகத்தில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பாலுறவைப் பற்றிப் பேசுவதில்லை. மாதவிடாய், கருத்தடைத் தேர்வு, சுய இன்பம் பற்றி இதுவரை எந்தத் தொடரிலும் விவாதிக்கப்பட்டதில்லை. நாங்கள் அதைச் செய்திருக்கிறோம். அதுதான் எங்கள் தொடரின் வெற்றிக்குக் காரணம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தொடரைப் பார்க்க: >mkbksh.com/episodes/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT