Last Updated : 09 Apr, 2017 08:30 AM

 

Published : 09 Apr 2017 08:30 AM
Last Updated : 09 Apr 2017 08:30 AM

ஒளி ஓவியர்கள்: டோரதியாவின் துயரத்தின் பாடல்

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்து நிற்கும் தாயும் அவருடைய இரு தோள்களிலும் முகத்தைப் புதைத்து நிற்கும் இரண்டு குழந்தைகளும் இருக்கிற ஒளிப்படம் எடுக்கப்பட்டு 80 ஆண்டுகள் ஆகின்றன. ‘மைக்ரண்ட் மதர்’ (புலம்பெயர்ந்த தாய்) என்று தலைப்பிடப்பட்ட உலகப் புகழ்பெற்ற இந்தப் படம் நமக்குச் சொல்வது என்ன?

நம்மூரில் பட்டினியில் வாடும் குடும்பத்திடமிருந்து இந்தத் தாய், குழந்தைகளின் நிறமும் உடையும் காலமும் வேண்டுமானால் வேறுபட்டிருக்கலாம். உலகின் எந்த மூலையானாலும் அவர்களுடைய பட்டினியும் ஏழ்மையும் இன்றைக்கும் பொதுவானதுதானே. இரு தரப்பினரின் துயரமும் உணர்வுகளும்கூட பொதுவானவைதான். அந்த உணர்வை, துயரத்தை, வலியை இந்தப் படம் நமக்குக் கடத்துகிறது.

1930-களில் அமெரிக்கா சந்தித்த ‘கிரேட் அமெரிக்கன் டிப்ரெஷன்’ எனப்படும் பொருளாதார மந்த நிலையின்போது, வறுமையில் வாடியதால் வேலையும் உணவும் தேடிப் புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தின் துயரம் கசியும் காட்சிதான் இந்தப் படம். இந்தப் படத்தை எடுத்தவர் பெண் ஒளிப்படக் கலைஞர் டோரதியா லாங்கே.

திருப்புமுனை

1920-களில் சான்பிரான்சிஸ்கோவில் வணிக போர்ட்ரெய்ட் ஒளிப்படக் கலைஞராகப் பணி வாழ்க் கையைத் தொடங்கியவர் டோரதியா. கலிஃபோர்னியா மற்றும் கூட்டாட்சி மறுகுடியேற்ற நிர்வாகம் சார்பில் 1935-ல் படங்களை எடுக்க அவர் நியமிக்கப்பட்டார். அந்தப் பணி அவரது வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பொருளாதார மந்த நிலையிலிருந்து தப்பிக்க வேளாண் குடும்பங்கள் வேலை தேடி அமெரிக்காவின் மேற்குப் பகுதியை நோக்கிப் புலம்பெயர ஆரம்பித்தன. அப்போது சான்பிரான்சிஸ்கோவில் உணவுக்காகக் காத்திருந்த மக்கள், நீர்நிலைகளில் உருவான மோதல் என அந்தக் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை நேரடியாகப் பதிவுசெய்ய ஊர் ஊராகச் சாலைகளில் சுற்றினார் டோரதியா.

காட்சி ஆவணங்கள்

டோரதியாவின் படங்கள் மனித மனதின் ஆழத்தில் இருக்கும் பரிவுணர்வைச் சட்டென்று விழிப்புகொள்ளச் செய்பவை. அவை அந்தக் காலத்தின் சிறந்த காட்சி ஆவணங்களாகவும் திகழ்ந்தன. ‘நவீன ஆவணப்படுத்தும் ஒளிப்படக் கலை’யின் முன்னோடியாக டோரதியா கருதப்படுகிறார்.

‘புலம்பெயர்ந்த தாய்’ என்ற அவரது படம், உலகெங்கும் இப்போதுவரை புலம்பெயர்வதன் வலியை உணர்த்துவதற்கான அடையாளச் சின்னமாக இருக்கிறது. நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு அரசு உதவ வேண்டியதன் அவசரத்தையும் அவசியத்தையும் டோரதியாவின் படங்கள் அப்போது உணர்த்தின. இந்தப் பணிக்கு அவருடைய கணவரும் பொருளாதார நிபுணருமான பால் ஷூஸ்டர் டெய்லர் பெருமளவு உதவினார்.

அகலாத நினைவுகள்

கருணை உணர்வையும் அர்ப்பணிப்பு உணர்வையும் கொண்டிருந்த டோரதியா தன் வாழ்க்கையின் கடைசி நாட்களில் கூட கேமராவைத் தூக்கிக்கொண்டு படமெடுக்க உலவியபடி இருந்தார். 1965-ல் டோரதியா இறந்த பிறகு அவரது தனித்தன்மை மிக்க சேகரிப்பைக் கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாந்து அருங்காட்சியகத்துக்குப் பால் ஷூஸ்டர் டெய்லர் வழங்கினார்.

மக்கள் மீதான டோரதியாவின் அக்கறை, எளிய மக்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம், அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தன்மை போன்ற மனித குலத்தின் ஆழ்மன உணர்வுகள் அவரது படங்களையும் அவரையும் என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x