Published : 25 Sep 2016 12:17 PM
Last Updated : 25 Sep 2016 12:17 PM

களம் புதிது: உறுதிக்குக் கிடைத்த விருது!

கணவருக்கு உதவிசெய்யத் தென்னை நார் தொழிற்சாலைக்குள் நுழைந்தவர், இன்று இந்தியாவின் சிறந்த நார் தொழிற்சாலை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் நார் தொழிற்சாலை நடத்தும் கவிதா, முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துவருகிறார். இவர் கிராமப்புறப் பெண்களைக் கொண்டு தென்னை மட்டையில் இருந்து நார் உற்பத்தி செய்து, அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார்.

தென்னை நார், கயிறு உற்பத்தியில் கேரளாவே முன்னிலை வகிக்கிறது. அடுத்தபடியாகத் தமிழகத்தில் மதுரை, ராஜபாளையம், பொள்ளாச்சி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உட்பட பரவலாக 5,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தென்னை நார், கயிறு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் நார் மற்றும் தென்னை நார் கட்டிகள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய கயிறு வாரியம் ஆண்டுதோறும் சிறந்த தொழில்முனைவோர் விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்குத்தான் கவிதா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பெண்களால் கிடைத்த ஊக்கம்

கணவர், குடும்பம், குழந்தைகள் என்று பம்பரமாகச் சுழலும் இல்லத்தரசிதான் கவிதாவும். திடீரென தொழிலதிபர் அவதாரம் எடுத்தது எப்படி?

“நான் பி.எஸ்சி. முடித்திருக்கிறேன். என்னுடைய கணவர், தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுவந்தார். குழந்தைகள் வளர்ந்து உயர் கல்வி படிக்கத் தொடங்கியதும் அவருக்கு உதவி செய்வதற்காக எங்களுடைய தென்னை நார் தொழிற்சாலைக்குள் நுழைந்தேன்” என்று சொல்லும் கவிதா, கடினமான இந்தப் பணியில் பெண்கள் ஈடுபட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

“அவர்கள் உறுதியோடு வேலைசெய்யும்போது நாம் ஏன் தயங்க வேண்டும் என்று நானும் இந்தத் தொழிலில் முழு நேரமும் ஈடுபடத் தொடங்கினேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தத் தொழிற்சாலையை என்னுடைய முழுப் பொறுப்பில் விட்டுவிட்டார் என் கணவர்” என்று சொல்கிறார் கவிதா.

இவர்களது தொழிற்சாலையில் ஏற்றுமதி ரக நார் யூனிட், நார் கழிவு கட்டி யூனிட் ஆகிய இரண்டு யூனிட்கள் செயல்படுகின்றன. 130 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 99 சதவீதம் பேர் பெண்கள். ஓட்டுநர் பணியை மட்டும் ஆண்கள் கவனித்துக்கொள்கின்றனர். மதுரை சுற்று வட்டாரத்தில் உள்ள பத்து கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் தங்கள் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அளித்திருக்கிறார் கவிதா. தென்னை நார், தென்னை நார் கழிவுக் கட்டிகளை உற்பத்தி செய்து சீனா, அமெரிக்கா, பெல்ஜியம், இலங்கை, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறார்.

“தினமும் ஏழு டன் தென்னை நாரும், ஐந்து டன் தென்னை நார் கழிவுக் கட்டிகளையும் ஏற்றுமதி செய்கிறேன். தென்னை நாரிலிருந்து தயாராகும் கட்டிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அங்கு மண்ணுக்கு பதில் இந்த நார் கழிவுக் கட்டிகளில் விதைகளைப் பரப்பி விவசாயம் செய்கின்றனர். தென்னை நார் கழிவுத் தூளை உற்பத்தி செய்வது மிகுந்த சிரமம். மூன்று மாதம் வரை தண்ணீரை ஊற்றிப் பதப்படுத்தி, வெயிலில் காயவைத்து அதில் விதை முளைப்புத் திறன் ஏற்படுத்திய பிறகே, ஏற்றுமதி செய்ய முடியும். இந்தத் தூள் கிலோ எட்டு ரூபாய்க்கு விற்பனையாகிறது. தென்னை நார் கிலோ எட்டு ரூபாய் முதல் 12 ரூபாய்வரை போகிறது. தற்போது உள்நாட்டு வியாபாரிகள் மூலமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன். விரைவில் நானே நேரடியாக ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார்.

தன்னிடம் பணிபுரியும் பெண்களின் குழந்தைகளின் கல்விச் செலவுகளுக்கு உதவிசெய்கிறார் கவிதா. சிறந்த பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்துகிறார். இதுபோன்ற தொழிலாளர் நலச் செயல்கள் கவிதாவை வெற்றியை நோக்கி நகர்த்துகின்றன. இந்த விருது இன்னும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லும் கவிதா, லூதியானாவில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கையால் விருது வாங்கவிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x