Published : 24 Jul 2016 03:06 PM
Last Updated : 24 Jul 2016 03:06 PM

பார்வை : எதற்கு இத்தனை கேள்விகள்?

நம் சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்கிற கேள்விகளைவிடப் பெண்கள் எதிர்கொள்கிற கேள்விகள் அதிகம். அவை ஏற்படுத்துகிற வலிகளும் மன உளைச்சல்களும் அதிகம். தன்னை நோக்கி வீசப்பட்ட தவறானதொரு கேள்வியை அநாயாசமாக எதிர்கொண்டு உடைத்தெறிந்திருக்கிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா. தன் வாழ்க்கைப் பயணம் குறித்து சானியா எழுதிய Ace against odds என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது. அதை முன்வைத்து சானியாவைப் பேட்டி கண்டார் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேஸாய். பல்வேறு கேள்விகளுக்கு நடுவே, “குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குடும்பத்துடன் இருத்தல் பற்றியெல்லாம் உங்கள் புத்தகத்தில் இல்லையே. எப்போது செட்டில் ஆகப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார் ராஜ்தீப். “ஏன் இப்போது நான் செட்டில் ஆகவில்லையா?” என்று சிரித்தபடியே கேட்கிற சானியா, “ஒரு பெண்ணாக நான் எதிர்கொள்கிற கேள்வி இது. உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை என்ற இடத்தைப் பிடித்தது வாழ்க்கையில் செட்டில் ஆவது இல்லையா? குழந்தை பெற்றுக்கொள்வதுதான் வாழ்க்கையில் நிறைவடைவது என்ற உங்கள் நோக்கத்தை நான் ஏமாற்றிவிட்டேனா?” என்று பதில் அளித்திருக்கிறார்.

தன் தவறை உணர்ந்த ராஜ்தீப், “நிச்சயம் ஒரு ஆண் விளையாட்டு வீரரிடம் இப்படியொரு கேள்வியை நான் கேட்டிருக்க மாட்டேன்” என்று சொன்னதுடன் தன் செயலுக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

எது பெண்ணின் அடையாளம்?

உலகத் தர வரிசையில் முன்னிலை வகிக்கும் ஒரு பெண்ணிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்வி, பெண்கள் குறித்த பொதுப் புத்தி அணுகுமுறைக்கு ஒரு சோறு பதம். ஒரு பெண் எவ்வளவுதான் படித்து, சுயதொழில் செய்து, வாழ்வில் முன்னேறித் தனக்கெனத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டாலும் இந்தச் சமூகம் அவளை எப்படி நடத்தும் என்பதற்கு ராஜ்தீப் எழுப்பிய கேள்வியே உதாரணம். ஆனால் சானியாவைப் போலவே அனைத்துப் பெண்களும் இப்படியான கேள்விகளுக்குத் தெளிவாகவும் துணிச்சலுடனும் பதில் சொல்கிறார்களா? மனதுக்குள் எந்தவொரு வலியும் இல்லாமல் அத்தனை கேள்விகளையும் கடந்து வந்துவிட முடிகிறதா? அந்தக் கேள்விகளைத் தூக்கிபோட்டுவிட்டு சுயத்தைத் தொலைக்காமல் இருக்க முடிகிறதா?

கிராமமாக இருந்தால் இருபது வயதிலும் நகர்ப்புறங்களில் இருபத்தைந்து வயதிலும் ஒரு பெண்ணைப் பார்த்து கேட்கப்படுகிற கேள்விகளில் முதன்மையானது, “எப்போ கல்யாணம்?” என்பதுதான். அந்தப் பெண்கள் தர்மசங்கடத்தில் நெளிய, விடாமல் அடுத்தடுத்த கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். “அதது காலாகாலத்துல நடக்கணும்” என்ற அறிவுரையால் படிப்பைப் பாதியில் நிறுத்திய, எதிர்காலம் தொலைத்த பெண்களின் எண்ணிக்கை பெரும் பட்டியலாக நீள்கிறது.

வீட்டுக்குள் நிறைந்திருக்கும் புழுக்கம்

“வீட்டுக்குள்ள வயசுப் பொண்ணை வச்சிக்கிட்டு இருக்கறது வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கற மாதிரி இருக்கு” என்று புலம்புகிற பெற்றோர்களில் யாராவது, திருமணம் மட்டுமே பெண்ணின் இலக்கல்ல என்பதை உணர்ந்திருக்கிறார்களா? ஒரு பெண் பிறப்பெடுப்பதே திருமணச் சந்தையில் விலைபோகத்தான் என்ற எண்ணம் இன்னும் எத்தனை காலத்துக்கு நீடிக்கும்?

“ஏன் உங்கள் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை?” என்ற கேள்விக்கு, “திருமணம் என்பது அவளுடைய தனிப்பட்ட விருப்பம். சரியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிற தெளிவையும் அறிவையும் அவளுக்கு ஏற்படுத்தித் தருவதுதான் எங்கள் கடமை” என்று ஏன் எந்தப் பெற்றோரும் சொல்வதில்லை?

திருமணம் ஆகிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று ஆசுவாசப்பட முடியாமல், “கல்யாணமாகி மூணு வருஷமாச்சா? இன்னுமா குழந்தையில்லை?” என்று விடாமல் கேள்விகள் துரத்திவரும். “அதைச் சாப்பிடு, இதைத் தவிர்த்துவிடு, டாக்டரைப் போய்ப் பார், ஏதாவது தோஷம் இருக்கும், ஜோசியரைப் பார்” என்று ஆளாளுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்.

திருமணம் ஆகிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று ஆசுவாசப்பட முடியாமல், “கல்யாணமாகி மூணு வருஷமாச்சா? இன்னுமா குழந்தையில்லை?” என்று விடாமல் கேள்விகள் துரத்திவரும். “அதைச் சாப்பிடு, இதைத் தவிர்த்துவிடு, டாக்டரைப் போய்ப் பார், ஏதாவது தோஷம் இருக்கும், ஜோசியரைப் பார்” என்று ஆளாளுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்.

சமூகம் என்பது யார்?

ஆண்களிடம் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவதுண்டு. ஆனால் அவை சற்று வீரியம் குறைந்தவை. குழந்தை பற்றிய கேள்விகள் பெரும்பாலும் பெண்களை நோக்கிக் கேட்கப்படுகிறவையாகவே இருக்கின்றன. வெளியில் கேட்கப்படுகிற கேள்விகளை ஓரளவு சமாளித்து நிமிரும் பெண்கள்கூட, வீட்டுக்குள் செலுத்தப்படுகிற வன்முறையால் உருக்குலைந்து போகிறார்கள். “கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆச்சு. இன்னும் ஒரு புழு, பூச்சிக்கு வழியைக் காணோம்” என்ற அமில வார்த்தைகள் எத்தனை உறுதிகொண்ட பெண்ணையும் சிதைத்துவிடும் வல்லமை கொண்டவை. “உங்களுக்கென்னங்க, புள்ளையா குட்டியா?” என்று போகிறபோக்கில் விஷத்தைக் கக்கிவிட்டுச் செல்கிறவர்களும் உண்டு.

சொந்தப் பயன்பாட்டுக்காக அரசாங்கக் கடனுக்கு விண்ணப்பித்தபோது, “உங்களுக்கு என்ன மேடம் குழந்தையா? குடும்பமா? யாருக்காகச் சேர்த்துவைக்கப் போறீங்க?” என்று சக ஊழியர்கள் கேட்டதை மிகுந்த வலியுடன் பதிவுசெய்திருந்தார் தோழி ஒருவர். கேள்வி கேட்டவரும் அதில் பங்கேற்றவர்களும் ஆசிரியர்கள்!

சமூகம் வகுத்துவைத்திருக் கும் அளவுகோலின்படி சரியான வயதில் திருமணமாகி, குழந்தை பெற்றுக்கொண்டால்தான் வாழ்க்கையில் ஒரு பெண் நிறைவுபெற்றதாக அர்த்தமா? அதைத் தாண்டி அவளுடைய கல்வி, வேலை, ஆளுமை எதுவுமே அவள் நிறைவுபெற்றதற்கான சான்றில்லையா? எது நிறைவு என்பதை முடிவுசெய்யும் உரிமைகூடப் பெண்ணுக்கு இல்லையா? அனைத்துக்கும் காரணம் இந்தச் சமூகமும் அதன் பொதுப் புத்தியும்தான் என்று விரல் நீட்டிவிட்டு நகர்கிறோமே, நாம் அந்தச் சமூகத்தின் அங்கம் இல்லையா?



நீங்க என்ன சொல்றீங்க?

வாசகர்களே, திருமணம் செய்துகொள்வதும் குழந்தை பெற்றுக்கொள்வதும்தான் ஒரு பெண்ணின் நிறைவை உறுதிசெய்கின்றனவா? குழந்தை பெற்றுக்கொள்ளாத அல்லது பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள் தொடர்ந்து கேள்விகளால் துளைக்கப்படுவது ஏன்? இதில் உங்கள் அனுபவம் என்ன? கருத்து என்ன? பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x