Last Updated : 15 Dec, 2013 02:31 PM

 

Published : 15 Dec 2013 02:31 PM
Last Updated : 15 Dec 2013 02:31 PM

துணிவு இருந்தால் எதையும் சாதிக்கலாம்

பெண்களை இன்னும் எத்தனை நாளுக்குத்தான் மென்மையோடும் பூக்களோடும் ஒப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்? அவர்களுக்குள் இரும்பைவிட உறுதியான மனத்தின்மையும், எதையும் சாதிக்கும் திறமையும் இருப்பதை எப்போதுதான் உணர்வார்களோ? - இந்த ஆதங்கத்தைத் தன் திறமையால் உடைக்கிறார் வான்மதி. இரும்போடும், இரும்பு சார்ந்த தொழிலோடும் இவருக்கு நீண்ட கால பிணைப்பு உண்டு.

திரைப்பபடங்களில் வில்லன்களைத் துரத்தித் துரத்தி அடிக்கும் இடமாகவும், ரவுடிகளின் புகலிடமாகவும் காட்டப்படும் கண்டெய்னர் செய்யும் இடம்தான் வான்மதியின் களம். ஆண்களே தாக்குப்பிடிக்க முடியாமல் திணறும் இந்தத் துறையில் 25 ஆண்டுகளாக நீடிக்கிறார் இவர்.

“என் சொந்த ஊர் நெய்வேலி. அப்பா என்.எல்.சி.யில் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் திடீரென இறந்த பிறகு குடும்பம் கஷ்டமான நிலையில் இருந்தது. எனக்கு 4 சகோதரிகள் இருந்ததால், பி.காம். முடித்த கையுடன் வேலை தேடினேன். அப்போதுதான் சென்னைக்கு வந்து கண்டெய்னர் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த அலுவலகத்தில் தட்டச்சுப் பணியாளராகத்தான் என் பணியைத் தொடங்கினேன். பிறகு மண்டல மேலாளர் அளவுக்கு உயர்ந்தேன். அப்போதுதான் கண்டெய்னர் தொழில் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். என்னை 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்தபோது வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தத் தொழிலில் இறங்கினேன்’’ என இந்தத் தொழிலோடு தனக்கு ஏற்பட்ட பரிச்சயத்தை அடுக்குகிறார் வான்மதி.

புதுமைகளே வெற்றி தந்தன

ஆரம்பத்தில் இந்தத் தொழிலில் தாக்குப்பிடிக்க முடியாது என்று பலரும் பயம் காட்டிய நிலையில் தன்னம்பிக்கையோடு களத்தில் இறங்கிப் போராடி வெற்றி பெற்றவர் வான்மதி. கண்டெய்னர் பிசினஸ் என்றாலே உடைந்த கண்டெய்னர்களைப் பழுது நீக்குவது, திறக்க முடியாதக் கதவுகளைச் சரி செய்வது போன்ற ஆர்டர்களே பணிக்கு வரும். ஆனால் இவர் கையாண்ட வெளிநாட்டு உத்திகள், இந்தத் துறையில் வான்மதியைத் தனித்து அடையாளப்படுத்தின.

“பெரிய நிறுவனங்களில் பணிகள் நடைபெறும் போது அங்கேயே தங்க நேரிடும். எல்லோருக்கும் வீடு அமைத்துக்கொடுப்பது என்பது நிறுவனங்களால் முடியாத காரியம். அப்படிச் சிலர், கண்டெய்னரில் கதவு, ஜன்னல் வைத்து வீடு போலக் கொடுக்க முடியுமா என்று கேட்டபோது அந்தப் பாணியில் வீடுகள் செய்ய ஆரம்பித்தோம். இப்போது கண்டெய்னர்களுக்குள்ளேயே சமையலறை, தனி அறை, ஏ.சி. அமைப்பது போன்ற ஆடம்பர வீடுகளும் வந்து விட்டன. புதிய புதிய மாடல்களில் பலர் இப்போதும் கண்டெய்னர் வீடு கேட்கிறார்கள்’’ என்கிறார் வான்மதி.

போட்டி அதிகம்

ஒரு தொழில் என்றாலே போட்டி, பொறாமை இருப்பது இயல்பு. அதுவும் துறைமுகம் சார்ந்த வேலை என்றால் கேட்கவே வேண்டாம். தொழில் போட்டி காரணமாக அடிக்கடி மிரட்டல் வருவது இவருக்கு வாடிக்கையான ஒன்று. ஆனாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் வேலையைச் செய்து வருகிறார் வான்மதி. இந்தத் துறைக்கு பெண்கள் வர விரும்புகிறார்களா? என்று கேட்டால், ‘இல்லை’ என்று வருத்தத்துடன் கூறுகிறார்.

“கண்டெய்னர் செய்யும் இடம் என்றாலே ரவுடிகள் இருப்பார்கள், சட்ட விரோத செயல்கள் நடக்கும் என்ற எண்ணம் என் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கே உள்ளது. நான் வரும்போது தைரியமாக என்னுடன் களத்துக்கு வருவார்கள். வேறு அலுவல் வேலையை கொடுத்து அனுப்பினால், போக பயமாக இருக்கிறது என்று ஒதுங்கிக் கொள்வார்கள். எனக்கு வரும் மிரட்டல்களையெல்லாம் பார்த்து என் மகளே இந்தத் தொழில் எனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டாள். இதுதான் யதார்த்தம். ஆனால் எதையும் சாதிக்கும் துணிவு இருந்தால் நிச்சயம் எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம்” என்று தன்னம்பிக்கையுடன் சொல்லும் வான்மதி, ‘பாவை’ என்ற இதழையும் நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x