Published : 08 Jan 2017 03:36 PM
Last Updated : 08 Jan 2017 03:36 PM
தங்கல் திரைப்படம் போல இருக்கிறது குலமங்களம் சிலம்பம் சகோதரிகளின் கதை. தங்கள் தந்தையிடம் சிலம்பம் கற்றுக்கொண்டு தேசிய, மாநில, மாவட்ட அளவில் பதக்கங்களை அள்ளிவருகிறார்கள் முத்துலட்சுமி, நந்தினி, ஐஸ்வர்யா ஆகிய மூன்று சகோதரிகள்!
“ஒருகாலத்தில் போர்க்கலையாக இருந்த சிலம்பம், பின்னர் கிராமத் திருவிழாக்களில் நடைபெறும் விளையாட்டாக மாறிப் போனது. அவ்வப்போது சில திரைப்படங்களில் மட்டுமே சிலம்பத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். சிலம்பம் இன்று பெரும்பான்மை மக்களிடமிருந்து அன்னியப்பட்டுவிட்டது. எங்கள் அப்பா சிலம்பம் பயிற்சியாளர். சற்று வித்தியாசமானவர். மதுரையில் ஒரு கிராமத்தில் வசித்தாலும் தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளுக்கும் சிலம்பம் பயிற்சியளித்தார். சிலம்பத்தில் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித்தர விரும்பினார்” என்று தாங்கள் சிலம்பம் கற்கக் காரணமான அப்பா பாலமுருகனைப் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார் மதுரை லேடிடோக் கல்லூரியில் பயிலும் முத்துலட்சுமி.
2011-ம் ஆண்டு தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் சென்னையிலும், 2016-ம் ஆண்டு டெல்லியிலும் பங்கேற்று 2 முறை தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார் முத்துலட்சுமி. பாலமந்திரம் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் நந்தினி, மாநில அளவிலான சிலம்பம் போட்டிகளிலும் எட்டாம் வகுப்பு படித்து வரும் ஐஸ்வர்யா மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். மூன்று சகோதரிகளும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிச் செல்வதற்காகக் கடுமையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
”தனக்குப் பிறகும் இந்தக் கலை இருக்கவேண்டும் என்று நினைத்த எங்கள் அப்பா, அவரே எங்களுக்குக் குருவாக இருந்து சிலம்பக் கலையைக் கற்றுத் தருகிறார். பெண்களுக்கு ஏதாவது ஒரு தற்காப்புக்கலை அவசியம் தெரிந்திருக்கவேண்டும் என்று நினைத்ததால் ஆரம்பத்தில் தற்காப்புக்காகவே இந்தக் கலையைக் கற்றுக்கொண்டோம்.
நாட்கள் செல்லச் செல்ல சிலம்பத்தின் அருமையை உணர ஆரம்பித்தோம். உடற்பயிற்சிக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் சிலம்பத்தில் அடங்கியுள்ளன. சுருள், வேல்கம்பு, சூரியபுத்து, சிலம்பம் என்று இதில் பல வகைகள் உள்ளன. தற்போது ஒவ்வொரு நுணுக்கத்தையும் கற்றுவருகிறோம். தினமும் காலை ஒருமணிநேரம் சிலம்பம் பயிற்சியில் ஈடுபடுகிறோம். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறுவதும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இந்தக் கலையைக் கொண்டுசெல்வதும் எங்களின் நோக்கம்” என்று விடைகொடுக்கிறார் முத்துலட்சுமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT