Published : 27 Apr 2014 12:00 AM
Last Updated : 27 Apr 2014 12:00 AM
இந்தப் பூமியில் எதுவுமே வீண் இல்லை, எல்லாப் பொருளுக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது என்கிற எண்ணத்துக்குச் சொந்தக்காரர் கவிதா. சென்னை கே.சி.ஜி கல்லூரியின் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் இறுதியாண்டு மாணவியான இவர், பென்சில் பிடிக்கத் தொடங்கிய வயதில் இருந்தே கலைகளோடு தொடர்பு உண்டு. ஐந்து வயதிலேயே ஓவியங்கள் வரைவது, பானைகளில் வண்ணம் தீட்டுவது என்று தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார். பயன்படாத பேனாக்கள், பாட்டில்கள் இவற்றை வைத்து புதுவிதமான கலைப் பொருட்களை உருவாக்குவதும் இவருடைய பொழுதுபோக்குகளில் ஒன்று.
நண்பர்களுக்குப் பரிசு
நான்காம் வகுப்புப் படிக்கும்போதே தன் கையால் செய்த பொருட்களை, தன் நண்பர்களுக்குப் பிறந்தநாள் பரிசாசக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
“நம்மைச் சுற்றி நிறைய பொருட்கள் இருக்கும்போது, எதற்கு வீணாகக் காசைச் செலவழித்து பரிசுகள் வாங்கணும்? அதனால நானே கிரீட்டிங் கார்டு, பெயிண்டிங், வால் ஹேங்கிங்னு நிறைய கிஃப்ட் செய்து என் ஃப்ரெண்ட்ஸுக்குக் கொடுப்பேன். அவங்களோட மகிழ்ச்சியும் பாராட்டும் என்னை ரொம்ப உற்சாகப்படுத்துச்சு. அதனால தொடர்ந்து புதுவிதமான கிராஃப்ட் செய்யத் தொடங்கினேன். நிறைய கலைகளை நானே கத்துக்கிட்டு செய்தாலும், சில கிராஃப்டை செய்ய முறையா பயிற்சியும் எடுத்துக்கிட்டேன். அம்மாவும், பாட்டியும்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ஏன்னா அவங்களும் கிராஃப்ட்ல கலக்குவாங்க” என்று சொல்லும் கவிதா, இந்திய அளவில் நடந்த கிராஃப்ட் பஜாரில் பங்கேற்று, டாப் 25 நபர்களில் ஒருவராகத் தேர்வாகியிருக்கிறார்.
“இப்போ நிறைய பேசப்படுற விஷயம் குளோபல் வார்மிங். இந்தப் பூமிக்கு என்னால பெருசா எந்த நன்மையும் பண்ண முடியலைன்னாலும் சிறு துரும்பா இருந்து ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். அதனால ஈகோ ஃப்ரெண்ட்லி கிராஃப்டைத் தேர்ந்தெடுத்தேன். க்வில்லிங் எனப்படும் காகிதங்களில் நகைகள் செய்யும் கிராஃப்டைச் செய்கிறேன். வேண்டாம் என்று தூக்கியெறியும் பொருட்களிலும், மறுசுழற்சிக்கு உகந்த பொருட்களிலும் கிராஃப்ட் செய்கிறேன்” என்று சொல்லும் கவிதா, பள்ளிக் குழந்தைகளின் இந்தக் கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில் சம்மர் வகுப்புகள் எடுக்க இருக்கிறாராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT