Published : 30 Apr 2017 03:46 PM
Last Updated : 30 Apr 2017 03:46 PM
இந்த ஆண்டு மழை பொய்த்துப்போன நிலையில் வறட்சி தமிழகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கடும் கோடைக் காலத்தில் தண்ணீர்ப் பிரச்சினையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. முன்னெச்சரிக்கையுடன் காலம் காலமாகப் பயன்படுத்தி வந்த நீர் சேமிக்கும் உத்திகளைக் கையாண்டிருந்தால் நம்மால் இந்த வறட்சியைச் சமாளித்திருக்க முடியும். இதை எப்படிச் செய்வது என்று வழிகாட்டுகிறார் ‘நீர் மாதா’ ஆம்லா ருயா.
பாலைவன பூமியாக இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள கிராமங்களில் தடுப்பணைகளை ஏற்படுத்தி, தண்ணீரைச் சேமித்து, விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்திருப்பதால் மும்பையைச் சேர்ந்த ஆம்லா ருயாவை ‘நீர் மாதா’ என்று மக்கள் அன்போடு அழைக்கிறார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் கிராமங்களின் வறட்சியையும் மக்கள் படும் இன்னல்களையும் செய்தித்தாள்கள் மூலம் அறிந்துகொண்டார் ஆம்லா. இந்தியாவிலேயே மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த ராஜஸ்தான் கிராம மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். நேரடியாகக் கிராமங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
பல ஆண்டுகளாக மழையளவு குறைந்த நூறு கிராமங்களில் விவசாயத்துக்கு வழியில்லை. வேலை தேடி நகரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். குடி தண்ணீருக்காகப் பெண்கள் நீண்ட தூரம் நடந்தனர். தண்ணீர் எடுப்பதற்காகவே பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வைத்திருந்தனர். தண்ணீர் குழாய்களில் காற்று மட்டுமே வந்துகொண்டிருந்தது.
தண்ணீர் மட்டும் கிடைத்துவிட்டால் விவசாயம் செய்ய முடியும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். சுகாதாரத்தில் முன்னேற்றம் வரும். கல்வி அறிவு பெருகும் என்று உணர்ந்துகொண்டார் ஆம்லா. நிபுணர்களிடம் கலந்தாலோசித்தார். இறுதியில் பாரம்பரிய முறைப்படி மழை நீரைச் சேமிக்கும் வழியே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார்.
அரசாங்கம் வறட்சியான கிராமங்களில் தண்ணீர்த் தொட்டிகளை வைத்து, தற்காலிகமாகப் பிரச்சினைகளைச் சமாளிக்கவே முயன்றது. ஆனால் ஆம்லா நிலையான தீர்வைத் தந்து, விவசாயிகளுக்கு நீண்ட காலத்துக்கு நன்மையளிக்கும் திட்டத்தை வகுத்தார். ஆகார் அறக்கட்டளையை உருவாக்கினார். விவசாயிகளைச் சந்தித்தார். கிராமங்களில் தடுப்பணைகளை அமைத்து, தண்ணீரைச் சேமிக்கும் வழிமுறைகளைச் சொன்னார். முதலில் விவசாயிகள் நம்பிக்கை வைக்கவில்லை. தொடர்ந்து அவர்களிடம் உரையாடி, நம்பிக்கை ஏற்படுத்தி சம்மதம் பெற்றார். மன்டவார் கிராமத்தில் முதல் இரண்டு தடுப்பணைகளை கிராம மக்கள் உதவியோடு அமைத்தார்.
அடுத்து வந்த மழைக் காலத்தில் அருகில் இருந்த மலையிலிருந்து பெருகிய தண்ணீரால் தடுப்பணைகள் நிரம்பின. மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நிலங்களைச் செப்பனிட்டு, பயிர்களை விதைத்தனர். சில மாதங்களில் நல்ல விளைச்சல் கிடைத்தது. ஒரே ஆண்டில் இரண்டு தடுப்பணைகள் மூலம் மன்டவார் கிராமத்திலிருந்து 12 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது.
அதைக் கண்ட மற்ற கிராம மக்களும் ஆர்வத்துடன் தடுப்பணைகளை உருவாக்க முன்வந்தனர். தடுப்பணையின் அளவைப் பொறுத்து அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் செலவாகும். இதில் 40% பணத்தைக் கிராம மக்களும் மீதியை ஆம்லாவின் அறக்கட்டளையும் ஏற்றுக்கொண்டனர். இரண்டே ஆண்டுகளில் 100 கிராமங்களில் 200 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டன. பெரிய அணைகள் அமைக்கும்போது நிறைய இடம் தேவைப்படும். அங்கு வாழும் மக்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்கள். ஆனால் சிறிய தடுப்பணைகளால் அது போன்ற எந்த விதமான கஷ்டங்களும் வருவதில்லை. செலவும் குறைவு.
சில கிராமங்களில் ஆண்டுக்கு மூன்று முறை பயிர் செய்தனர். மற்றவர்கள் இரண்டு முறை பயிர் செய்தார்கள். கிராமங்களின் முகம் வேகமாக மாறியது. வறண்ட கிராமங்கள் விவசாய கிராமங்களாக மாறின. குழாய்களில் தண்ணீர் வந்ததால் பெண்களின் துயர் மறைந்தது. பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். வீட்டில் கால்நடைகளை வளர்க்க ஆரம்பித்தனர். இதன் மூலம் கிடைத்த பால், நெய், பாலாடைக்கட்டி போன்றவற்றை விற்றதால் வருமானம் அதிகரித்தது. நகரங்களை நோக்கிப் பிழைப்புத் தேடிச் சென்றவர்கள் மீண்டும் கிராமங்களுக்குத் திரும்பினர். வீட்டுக்கு ஒன்று, இரண்டு மோட்டார் பைக்குகள் வந்தன. கிராமத்துக்கு நான்கைந்து டிராக்டர்கள் வாங்கப்பட்டன. வறண்ட கிராமங்களில் வசிப்பவர்களுக்குப் பெண் கொடுக்க மறுத்தவர்கள், ஆர்வத்தோடு பெண் கொடுத்தனர். ஆரோக்கியம், சுகாதாரம் போன்றவற்றிலும் முன்னேற்றம் வந்தது.
ராஜஸ்தானைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா கிராமங்களில் தடுப்பணைகளை அமைத்தார் ஆம்லா. 2.5 கோடி ரூபாய் செலவில் 100 நடுத்தர தடுப்பணைகள் அமைத்து, ஒரே விளைச்சலில் 51 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது. இன்று ராஜஸ்தானில் உள்ள 100 கிராமங்களில் வசிக்கும் 2 லட்சம் மக்கள் மூலம் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வருமானம் பெற முடிகிறது! 60 ஆண்டு காலம் அரசாங்கம் செய்யாததை இரண்டே ஆண்டுகளில் ஆம்லா செய்து கொடுத்ததால், மக்களிடம் நீர் மாதாவாக உயர்ந்து நிற்கிறார்.
கல்வியாளராகவும் சமூக சேவகராகவும் இருக்கும் ஆம்லா, தன் குடும்பத்தினரிடமிருந்தே அதிக நிதியைப் பெற்றுக்கொள்கிறார். இவரது மகனும் மகளும் கோடிக்கணக்கில் தடுப்பணைகள் அமைப்பதற்காக நிதியளிக்கிறார்கள். இவை தவிர நன்கொடைகளும் கிடைக்கின்றன. தடுப்பணைகள் தவிர்த்து, தரமான கல்வி அளிப்பதிலும் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சட்டீஸ்கரில் தடுப்பணைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
“தண்ணீர், மண் வளம், சுற்றுச் சூழலைக் காக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். நான் இறந்தால் கங்கையில் என் அஸ்தியைக் கரைக்கக் கூடாது. சாம்பலைச் செடிகளுக்கு உரமாகப் போட்டால் கால்சியம் சத்து கிடைக்கும். நிறைய பூக்கும். பெரும்பாலானவர்கள் தண்ணீரை மதிப்பு மிக்கதாகக் கருதுவதில்லை. அதன் விளைவுதான் இன்று நாம் சந்தித்துகொண்டிருக்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு. தண்ணீரைத் ‘திரவத் தங்கமாக’ நினைத்து, சிக்கனமாகச் செலவு செய்தால் வரும் சந்ததியினருக்குப் பேருதவியாக இருக்கும்” என்கிறார் இந்த நீர் மாதா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT