Published : 08 Dec 2013 12:00 AM
Last Updated : 08 Dec 2013 12:00 AM
வேண்டாம் எனத் தூக்கி எறியும் காகித அட்டைகளைக்கூடக் கண்கவரும் வாழ்த்து அட்டைகளாக மிளிரச் செய்கிறார் ரமா பாலாஜி. ஒரு பொருள் குப்பையாவதும் கோபுரத்தை அடைவதும் நம் பார்வையில்தான் இருக்கிறது என்று விளக்கம் தருகிற ரமா, தேர்ந்த கைவினைக் கலைஞர்.
வண்ணங்களும் அவை தருகிற மலர்ச்சியும் ரமா பாலாஜியைக் கலைகளின் மீது சிறுவயதிலேயே காதல்கொள்ள வைத்திருக்கின்றன. தொடர்ச்சியான பயிற்சியும் பதினேழு வருடக் கலை அனுபவமும் இவருக்குத் தூரிகையை ஆறாம் விரலாக மாற்றியிருக்கின்றன. 20 வகையான பெயிண்ட்டிங், 30 வகையான பொம்மைகள், 25 வகையான பூக்கள் என பல கலைகளைக் கற்றுவைத்திருக்கிறார். எம்ப்ராய்டரியையும், ஃபேஷன் ஜுவல்லரியையும் விட்டுவைக்கவில்லை. அவற்றிலும் கரைகண்டிருக்கிறார். சிறு வயதிலேயே பல கலைகளைக் கற்றுக்கொண்டாலும் திருமணத்துக்குப் பிறகுதான் இதில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார்.
“திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பொழுதுக்கும் விட்டத்தையோ தொலைக்காட்சியையோ பார்த்துக்கொண்டிருப்பது எனக்குப் பிடிக்காது. அதனால் பல கலைகளையும் தேடித்தேடிக் கற்றுக்கொண்டேன். என்னிடம் பயிற்சிக்கு வரும் மாணவர்கள், அனைத்து கலைகளையும் ஒரே இடத்தில் கற்றுக்கொண்டால் வசதியாக இருக்கும் என்று சொன்னார்கள். அவர்களுக்காகவே புதுப்புது கலைகளைக் கற்றுக்கொண்டு வருகிறேன்” என்கிறார் ரமா.
தன்னிடம் பயிலும் மாணவர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தியது நிறைவைத் தந்ததாகக் குறிப்பிடுகிறார். “தங்கள் குழந்தைகளின் படைப்புகளைப் பார்த்த பெற்றோர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பெருமிதமும்தான் எனக்குக் கிடைத்த வெற்றி. நான் தயாரிக்கும் கலைப்பொருட்களை நண்பர்களும் தெரிந்தவர்களும் வாங்கிச் செல்கிறார்கள். எம்ப்ராய்டரிக்கும் நிறைய ஆர்டர்கள் வருகிறது. கடைகளில் விற்பதைவிட 50 சதவீதம் குறைவான விலையில் என்னிடம் பொருட்கள் கிடைப்பதால் வாடிக்கையாளர்களுக்குக் குறைவில்லை” என்று சொல்லும் ரமா, சமீபத்தில் அமெரிக்கா மற்றும் லண்டனில் சிறந்து விளங்கும் புதுவிதமான கலையைக் கற்றுக்கொண்டிருக்கிறார்.
“இதை பார்ச்மென்ட் கிராஃப்ட் என்று சொல்வார்கள். ஒரே அட்டையில் பலவிதமாக வரையலாம். நன்றாக ஓவியம் வரையத் தெரிந்தால் பத்து நிமிடங்களில் ஒரு அட்டையை வரைந்து முடித்துவிடலாம். அட்டையில் நூல் வைத்து தைத்தது போலத் தோன்றுவதுதான் இதன் சிறப்பம்சம்” என்கிறார் ரமா.
நீங்களும் பங்கேற்கலாம்
பார்த்ததுமே உங்களுக்குள் இருக்கும் கலை உணர்வு மெல்லத் தலைகாட்டுகிறதா? உடனே அதை வெளிப்படுத்துங்கள். அது புகைப்படமோ, ஓவியமோ, ஆடைகளில் வரையும் அலங்கார டிசைனோ எதுவாக இருந்தாலும் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள், உலகறியச் செய்கிறோம். penindru@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
படங்கள்: க.பரத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment