Published : 07 May 2017 10:53 AM
Last Updated : 07 May 2017 10:53 AM
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணையே அந்தக் குற்றத்துக்குப் பொறுப்பாக மாற்றும் கொடுமை காலங்காலமாக நம் சமூகத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவிடாமல் வாழ்நாள் முழுதும் அவள் மீது களங்கம் கற்பித்துத் துன்புறுத்திக்கொண்டேயிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகப் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவியை அவள் படிக்கும் பள்ளி நிர்வாகமே துன்புறுத்தியிருப்பது கொடுமையின் உச்சம்.
டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளி, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பதினைந்து வயது மாணவியைப் பள்ளிக்கு வரக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறது. அந்த மாணவி பள்ளிக்கு வருவதால் தங்கள் பள்ளியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாக அந்தப் பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. பள்ளிக்கு வருவதை நிறுத்தினால்தான் பதினோராம் வகுப்புக்குத் தேர்ச்சி சான்றிதழ் வழங்குவோம் என்றும் மிரட்டியிருக்கிறது.
அந்த மாணவியின் பெற்றோர் டெல்லி மகளிர் ஆணையத்திடம் இது குறித்துப் புகார் அளித்திருக்கின்றனர். அந்தப் புகாரைத் தொடர்ந்து, மகளிர் ஆணையம் கல்வித் துறைக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியிருக்கிறது.
அந்த மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகம் தங்களுடைய மகளை மிக மோசமாக நடத்தியதாகத் தெரிவித்திருக்கின்றனர். “எங்கள் மகள் தினமும் பள்ளிக்கு வந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடுமாம். அவளது பாதுகாப்புக்குப் பள்ளி நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் சொல்லியிருக்கிறது” என்கின்றனர் அந்த மாணவியின் பெற்றோர். இந்த மாணவி கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி ஓடும் காரிலிருந்து வீசியெறியப்பட்டிருக்கிறார். மகளிர் ஆணையம் மாணவியின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அந்தத் தனியார் பள்ளியின் பெயரை வெளியிடவில்லை.
“எங்கள் மகள் பள்ளியை விட்டு அவளாகவே வெளியேறிவிட வேண்டுமென்று, தோழிகள் யாரையும் வகுப்பறையில் அவள் பக்கத்தில் அமரவிடாமல் பள்ளி நிர்வாகம் தடுத்திருக்கிறது. பள்ளியின் பேருந்திலும் அவளை அனுமதிக்கவில்லை. இதனால் தினமும் நாங்களே அவளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்துவருகிறோம். எங்கள் மகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மனிதத்தன்மையற்ற வகையில் பள்ளி நிர்வாகம் நடந்துகொண்டிருக்கிறது” என்று அந்த மாணவியின் பெற்றோர் புகாரில் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தப் பிரச்சினை தீவிரமானது என்று சொல்லும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி, “எந்தத் தவறும் செய்யாமல் அந்தப் பெண்ணுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. நிச்சயம் இதை ஏற்றுக்கொள்ள முடியாது”என்கிறார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக ஐந்து நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு கல்வித் துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த வாரம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது உச்ச நீதிமன்றம், “இந்த நாட்டில் ஒரு பெண்ணால் ஏன் நிம்மதியாக வாழ முடியவில்லை” என்று கேள்வி எழுப்பியிருந்தது. இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது, ஆமாம், இந்த நாடு ஒரு பெண்ணை நிம்மதியாக வாழ அனுமதிப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT