Published : 05 Oct 2014 02:03 PM
Last Updated : 05 Oct 2014 02:03 PM
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலினரீதியான கருதுகோள்கள் மற்றும் பாலியல் வல்லுறவு குறித்த விவாதம் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் நமது திரைப்படக் கலாச்சாரத்தை ஒருவராவது குற்றம்சாட்டுவார். “இந்தியா தனது பெண்களை இவ்வளவு பரிதாபகரமாக நடத்துவதற்கு என்ன காரணம்?” என்ற சிக்கலான கேள்விக்கு எளிய விளக்கமாகவும், உடனடியாகக் குற்றம்சாட்டுவதற்குத் தோதான பொருளாகவும் சினிமா இருக்கிறது.
இந்திய சினிமாத் துறையில் பெண்கள் அதீதமாகக் கவர்ச்சி பொருளாக்கப்படுவது இதற்குக் காரணமாக இருக்கலாம். பாலிவுட் படங்களில் பெண்கள் பாலியல் பிம்பங்களாகத் தொடர்ந்து காண்பிக்கப்படுகிறார்கள். ‘அயிட்டம் சாங்’ என்று சொல்லப்படும் கவர்ச்சிப் பாடல்கள் பிரபலமாக உள்ளன. அரைகுறை உடையணிந்த கவர்ச்சிப் பெண்களை அட்டைப் படங்களாகக் கொண்டு வெளியிடும் பத்திரிகைகள் விற்கின்றன. செக்ஸ் ஜோக்குகள் மற்றும் பெண்களை மோசமாக விமர்சிக்கும் பாடல்கள் கொண்ட படங்கள் வர்த்தகரீதியாக வெற்றிபெறுகின்றன. வலுவான பெண் கதாபாத்திரங்களைக் கொண்டு சொற்பமான படங்களே வந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரே வகையான நாயகிகளைச் சிறு மாறுதல்களுடன் பாலிவுட் களைப்பேயின்றித் தொடர்ந்து காட்டிக்கொண்டேயிருக்கிறது.
சமீபகாலம்வரை திரைப்படங்களுக்கும் பாலியல் பாகுபாட்டுக்கும் இடையிலான உறவு குறித்து எந்த நிரூபணமும் இல்லாமலேயே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வில் இந்திய சினிமாவில் காண்பிக்கப்படும் பெண்கதாபாரத்திரங்கள்தான், இந்தியாவில் நிலவும் பாலின ரீதியான கருதுகோள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டுக்குக் காரணம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ராக்பெல்லர் அமைப்பின் நிதி உதவி பெறும் ஜீனா டேவிஸ் இன்ஸ்டிடியூட், ஊடகங்களுக்கும் பாலினரீதியான அணுகுமுறைக்கும் இடையிலான உறவு குறித்து ஆய்வு நடத்தியுள்ளது. வெறும் உடல் அழகின் அடிப்படையிலேயே பெண்கள் சினிமாவில் மதிக்கப்படுகிறார்கள் என்பதையும், கதாபாத்திர மாகக்கூட அவர்கள் விஞ்ஞானிகளாகவோ பொறியாளர்கள் வேடமோ ஏற்பதில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைப்படங்களில் 35 சதவீதப் பெண் கதாபாத்திரங்கள் உடலைக் காட்டுவதற்கே முன்நிறுத்தப்படுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது.
திரைப்படத் துறையில் பெண் இயக்குநர்களின் சதவீதம் 9. பெண் தயாரிப்பாளர்கள் 15 சதவீதம். திரைக்கதையில் பணிபுரிபவர்கள் 12 சதவீதம் பேர். உலக அளவில் திரைத்துறையில் பணிபுரியும் பெண்களின் சதவீதத்தை ஒப்பிடும்போது இந்தச் சதவீதம் மிகவும் குறைவு.
மக்களைத் திருப்தி செய்வது
ஏன் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன? பார்வையாளர்களின் பொழுதைப் போக்கவா? சிந்தனையைத் தூண்டவா? கற்பிக்கவா? லாபம் எடுப்பதற்கா? பாலிவுட்டில் வெற்றிபெற்ற பெரும்பாலான படங்கள், நமது பார்வையாளர்கள் பொழுதுபோக்கை விரும்புகிறார்கள் என்பதையே காண்பிக்கின்றன. திரைத்துறையினரும் அவர்களின் தேவையைத் தொடர்ந்து பூர்த்திசெய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக மோசமான பாடல்களும், நகைச்சுவையும் பார்வையாளர்களைக் கவர்கின்றன.
சினிமா விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வக்கிரம் மிகுந்த ‘கிராண்ட் மஸ்தி’ திரைப்படம் நூறு கோடி வசூலைக் குவித்தது. அதேபோல சமூகச் செயல்பாட்டாளர்களை வழக்குப் போடுவதற்குத் தூண்டிய ராப் பாடகர் யோ யோ ஹனி சிங்கின் பாடல்கள் விற்பனை அட்டவணையில் முன்னணியில் உள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து நைட்கிளப்புகளையும் அவர் பாடல்கள்தான் அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன.
ஜீனா டேவிஸ் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின் முடிவுகள் ஒன்றும் அத்தனை ஆச்சரியத்துக்குரியதல்ல. இந்தியச் சமூகத்திலிருந்து இந்தியத் திரைப்படத் துறை வேறுபட்டதல்ல. பாலியல் வன்முறை சார்ந்த ஜோக்குகளுக்குச் சிரிக்கும் இந்தியர்கள்தான் பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு எதிராகக் குரல்கொடுத்து, அதிகபட்ச தண்டனைகளைக் கோருகின்றனர். அதேபோலவேதான் சினிமாத் துறையினரும் பெண்கள் மீது நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்தபடியே, பாலியல் பண்டங்களாகத் திரையில் பெண்களைச் சித்தரித்துவருகின்றனர்.
“பெண்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மற்றும் கதைகளை வர்த்தகம் செய்வது கடினம்” என்று கூறியிருக்கிறார் கங்கணா ரணாவத். ஆனாலும் அவரே பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ‘குயின்’ படத்தில் நடித்திருக்கிறார். எளிமையான, மணமகனால் புறக்கணிக்கப்பட்ட பின் தனியாக உலகத்தை எதிர்கொள்ளும் சுதந்திரப் பெண்ணாக உருமாறும் கதாபாத்திரம் அது. இந்தியாவில் மட்டும் 60 கோடி ரூபாயை இப்படம் சம்பாதித்துத் தந்துள்ளது.
திரைப்படங்கள் சார்ந்த வர்த்தகத்தை மட்டுமே கொண்டு ஆண்மயமாகவே திரைப்படங்கள் எடுப்பதை நியாயப்படுத்திவிட முடியாது. பெண்களை மையமாகக் கொண்டு வெளிவரும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பைப் பார்வையாளர்கள் அளித்துள்ளனர். ப்ரிநீதி சோப்ராவின் ஹசீ தோ பசீ ஒரு உதாரணம்.
இந்தியாவின் எந்த திரையரங்குக்குள் சென்றாலும் அரைகுறை ஆடையில் பெண்கள் திரையில் தோன்றும்போதெல்லாம் பார்வையாளர்கள் விசிலடித்து, ஆரவாரித்து ஆபாசமான விமர்சனங்களையும் வெளியிடுவதைக் கேட்கலாம். இந்த மாதிரியான விமர்சனங்களுக்குக் காரணம் குறிப்பிட்ட நடிகையின் ‘தாராளம்’ மற்றும் நடன அசைவுகள்தான் என்று பெரும்பாலான ஆண்களும், சில பெண்களும் சொல்வதையும் கேட்கலாம்.
படத்தில் ஒரு நடிகை உடைகளைக் களைவதற்குத் தயக்கம் காட்டவில்லையெனில், திரைக்கு வெளியேயும் அவர் தனக்கான மரியாதை மற்றும் சுதந்திரத்தைக் கோரக் கூடாது என்பதே இங்கு பொதுக் கருதுகோளாக உள்ளது. அதனாலேயே நடிகைகள் தங்கள் கதாபாத்திரம் வேறு, தாம் வேறு என்பதை வலியுறுத்த முயற்சிக்கும்போது பார்வையாளர்களுக்கும், ஊடகத்தினரில் ஒரு பகுதியினருக்கும் இரண்டுக்கும் இடையிலான எல்லைக்கோடு கூடுதலாகக் குழம்பிவிடுகிறது.
இந்த ஆய்வுகளின் உள்கிடக்கை என்னவெனில், திரைப்படம் எடுப்பது இந்தியாவில் கூடுதலாக பொறுப்புள்ள செயலாக இருக்க வேண்டும் என்பதே. கவர்ச்சி பொம்மைகளாகப் பெண்களை மாற்றாமல், சக்திவாய்ந்த கதாபாத்திரங்களை உருவாக்குவதும், திரைப்படத் துறையில் பெண்களை அதிகம் பங்கேற்க வைப்பதும்தான் இதன் நோக்கம். இறந்த காலத்தில் நிலவிய நம்பிக்கைகளும் புராணிகங்களும்தான் இன்று நாம் பெண்கள் மீது கொண்டிருக்கும் புரிதலை உருவாக்கியவை. திரைப்படங்களும் அதையே செய்கின்றன.அவற்றைப் பற்றி இப்போதே கேள்வி கேட்கத் தொடங்குவோம், மெதுவாகவும் உறுதியாகவும்.
© ‘தி இந்து’ ஆங்கிலம்
தமிழில்: ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT