Published : 29 Jan 2017 01:03 PM
Last Updated : 29 Jan 2017 01:03 PM
தமிழ்நாட்டில் ஓலைச்சுவடியைப் படிக்கக்கூடிய ஒரே பெண் ஜெயவாணிஸ்ரீ! ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாததால், மேற்படிப்பு முடித்து பேராசிரியரானார். தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். இதுவரை 23 நூல்களையும் 111 கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் இவரது பூர்விகம். இவருடைய பெற்றோர் படிக்காவிட்டாலும் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் கூட்டுறவு பட்டயவியல், கணினியில் பல்தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு, ஓவியம், தையல் என்று பலவற்றையும் கற்றுவந்தார் ஜெயவாணிஸ்ரீ.
ஒருமுறை கர்நாடக மாநிலத்தில் ஆசிரமத்துக்குச் சென்றபோது, சைவ சித்தாந்தம் நூலைப் படித்திருக்கிறார். அப்போதுதான் ஜெயவாணிஸ்ரீக்குத் தமிழ் மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது. கல்லூரிப் படிப்பை முடித்ததும் சில தனியார் கல்லூரிகளில் பேராசிரியையாகப் பணியாற்றினார். தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் பணிபுரிந்தபோது தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி மொழிகளைக் கற்றுக்கொண்டார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கை தயாரிக்கும்போது பல தமிழறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு, தன்னுடைய தமிழ் ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொண்டார் ஜெயவாணிஸ்ரீ.
“தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் என்னை ஈர்த்துக்கொண்டேயிருந்தது. அடிக்கடி அங்கு சென்றதால் ஒலைச்சுவடிகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜோதிடத்தையும் படித்தேன். தமிழ்நாட்டிலேயே ஓலைச்சுவடிகளை வாசிக்கத் தெரிந்த ஒரே பெண் நான்தான். தமிழுக்கு உரை எழுதிய உ.வே.சா. பணியாற்றிய கல்லூரியில் வேலை செய்ய வேண்டும் என்ற என் ஆசை விரைவிலேயே ஈடேறியது. உ.வே.சா. பாடம் எடுத்த அதே வகுப்பில், அவர் அமர்ந்த மூங்கில் நாற்காலியைப் பயன்படுத்திவருவதைப் பெருமையாக நினைக்கிறேன்” என்று மெய்சிலிர்க்கும் ஜெயவாணிஸ்ரீ, கும்பகோணம் ஆடவர் கல்லூரியில் பணியாற்றிவருகிறார்.
சரஸ்வதி மகால் நூலகத்தில் அச்சிட்டு வெளிவராத பல நூல்களுக்கு உரை எழுதிப் பதிப்பித்துவருகிறார். சங்க இலக்கியங்களைச் செய்யுள் வடிவத்திலிருந்து உரைநடையாக்கிவருகிறார்.
2014-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற செம்மொழித் தமிழாய்வு மாநாட்டில் பன்னிரு பாட்டியல், பட்டினப்பாலை, வச்சணந்திமாலை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதி வெளியிட்ட ஒரே தமிழ்ப் பேராசிரியர் இவர் மட்டுமே. பாரதிய தலித் சாகித்ய அகாடமி சார்பில் திருவள்ளுவர் விருது, செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனம் சார்பில் சமஸ்கிருத சத்யவல்லபா விருது, தெய்வானைப்ரியா கலைமன்றம் சார்பில் பேரறிஞர் அண்ணா விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
சொற்பொழிவு, பட்டிமன்றம் ஆகிவற்றில் பங்கேற்றுவரும் ஜெயவாணிஸ்ரீ, புத்தகங்களைப் பிரசுரம் செய்யவும் பதிப்பிக்கவும் போதிய நிதி இல்லாமல் கடன் பெற்று, தமிழுக்குச் சேவை செய்துவருகிறார். தன்னிடம் இருக்கும் மிகப்பெரிய செல்வம் தான் வெளியிட்ட நூல்கள்தான் என்று பெருமையாகச் சொல்லும் ஜெயவாணிஸ்ரீ, கல்வெட்டுப் படிகளையும் படித்து ஆவணப்படுத்திவருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT