Published : 26 Feb 2017 11:59 AM
Last Updated : 26 Feb 2017 11:59 AM
மெல்லிசைக் குழுக்களில் பாடிவரும் பெண் பாடகிகளின் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் சென்னை, காமராஜர் அரங்கில் கடந்த வாரம் ஓர் இசை நிகழ்ச்சி நடத்தது. சென்னையைச் சேர்ந்த அம்ருதவர்ஷம் கலாச்சார அறக்கட்டளையின் நிறுவனர் ரம்யா நந்தகுமார் கணிப்பொறி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக் குழுக்களில் பாடிவருகிறார்.
“பெயரளவுக்கு மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் இருந்ததில்லை” என்று சொல்லும் ரம்யா, பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் பாடிய பாடல்களைக் கொண்டே ஒரு நிகழ்ச்சியை நடத்தி, அதில் சிறப்பு விருந்தினராக வாணி ஜெயராமை அழைத்து பெருமை செய்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கும் வாணி ஜெயராம் வந்திருந்து சிறப்பித்தார். ஜப்பானுக்குச் சென்று விசில் கலைஞர்களுக்கான போட்டியில் வெற்றிபெற்ற ஸ்வேதா, நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டார்.
இசைக் கலைஞர்களின் வாழ்க்கைச் சூழல்
“முன்பெல்லாம் இசை வாத்தியங்களை பல கலைஞர்கள்தான் மேடையில் வாசிப்பார்கள். ஆனால் இன்றைக்கு எலக்ட்ரானிக் பொருட்களை மட்டுமே நம்பி பெரும்பாலான இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கும் டி.ஜே. (பழைய பாடல், புதிய பாடல், கிராமியப் பாடல், குத்துப்பாடல் என பலதரப்பட்ட இசைப் பின்னணியில் பாடல்களை மாற்றி மாற்றி ஒலிபரப்புவது), இன்னும் சில பேர் கரோக்கி என்று சொல்லப்படும் ஒரு பாடலுக்கான வாத்தியங்களின் இசையை மட்டும் பதிவிறக்கம் செய்துகொண்டு இன்றைக்குப் பாடும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் இசைக் கருவிகளை வாசிக்கும் கலைஞர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது” என்கிறார் ரம்யா.
பெண் பாடகிகளுக்கு இருக்கும் சவால்
பொதுவாகவே மெல்லிசைக் குழுக்களில் டி.எம்.எஸ். பாடிய பாடல்களைப் பாடுபவர்களை ‘ஷார்ப் வாய்ஸ்’ என்பார்கள். பி.பி.எஸ்., எஸ்.பி.பி., ஆகியோரின் பாடல்களைக் குறிப்பிடும் போது, ‘பேஸ் வாய்ஸ்’ என்பார்கள். ஒரு வாய்ஸில் பாடுபவர்களால் இன்னொரு வாய்ஸில் இடம்பெற்ற பாடகர்களின் பாடலைப் பாடுவதற்கு கடினம். ஆனால் பெரும்பாலான மெல்லிசைக் குழுக்களில் ஒரு பெண் பாடகியே, பி.சுசீலா, எஸ்.ஜானகி என பலர் குரல்களிலும் பாடுவதற்கு முயற்சி செய்வார்.
இதனால் குரலில் பலவிதமான மாற்றங்களைப் பயிற்சியின் மூலம் கொண்டு வந்து, குறிப்பிட்ட பின்னணிப் பாடகியின் குரலை அவர்களின் குரல்களில் கொண்டுவருவதற்கு மிகவும் முயற்சி செய்வார்கள். இந்தப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடும்போது, அவர்களின் நிஜக் குரல் அவர்களிடமிருந்து காணாமல் போயிருக்கும். தங்களின் நிஜக் குரலையும் இழக்காமல், பிரபல பின்னணிப் பாடகிகளை இமிடேட் செய்து பாடுவது நிச்சயம் சவாலான விஷயம்.
50 கலைஞர்களின் இசை
வசதி குறைந்த பெண் பாடகிகளின் குழந்தைகளின் கல்வி உதவிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 50 பாடகர்கள் பங்கேற்றனர். இது தவிர 15-க்கும் மேற்பட்ட வாத்தியக் கலைஞர்கள் மேடையில் இசைத்தனர். நிகழ்ச்சியில் ஒரு சில பாடல்களுக்கு சுஜாதா வெங்கட்ராமனே இசைக் குழுவின் நடத்துனராகச் (Music Conducting) செயல்பட்டது நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தியது. ஏறக்குறைய நான்கு மணிநேரத்துக்கும் மேலாக அரங்கில் ரசிகர்கள் கலைந்து செல்லாமல் மெல்லிசை நிகழ்ச்சியை ரசித்ததற்குக் காரணம், அங்கு பாடப்பட்ட பெரும்பான்மையான பாடல்கள் ரசிகர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும் மெல்லிசை மேடைகளில் அதிகம் ஒலிக்காத பாடல்களாகவும் இருந்ததுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT